Published : 14 Mar 2020 09:24 PM
Last Updated : 14 Mar 2020 09:24 PM
மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18சதவீதமாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்த புதிய வரிவிதிப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
ஜிஎஸ்டி நெட்வொர்க்கை மேம்படுத்த அதிகமான ஹார்ட்வேர், திறமையான பணியாளர்கள் தேவை என்று இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி விடுத்த கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுள்ளது.
காலணிகள், ஜவுளித்துறை, உரம், மொபைல்போன் ஆகிய துறைகளுக்கு தலைகீழ் வரி விதிப்பு முறை இருந்து வருகிறது. அதாவது முடிவுபெற்ற பொருட்களுக்கான வரியைவிட உள்ளீட்டு வரி அதிகமாக இருக்கிறது.
ஆதலால், மொபைல் போன்கள் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கும் தற்போது 12 சதவீதம் வரி விதிப்பு இருந்து வருகிறது, இது 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. மற்ற பொருட்களுக்கு அடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்
கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இயந்திரத்தால் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு சீரற்ற வரி இருந்து வருகிறது. இது 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் கையால் செய்யும் தீப்பெட்டிகளுக்கு 5 சதவீதமும், எந்திரத்தால் செய்யும் தீப்பெட்டிகளுக்கு 18 சதவீதமும் இருந்தது.
விமானங்களைப் பராமரித்தல் பழுது நீக்குதல், சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எம்ஆர்ஓ சேவை விரிவடையும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT