Published : 12 Mar 2020 09:24 AM
Last Updated : 12 Mar 2020 09:24 AM
உலகை அச்சுறுத்தும் ‘கோவிட் –19’ வைரஸ் தாக்குதலால் ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு(சியாம்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பில் 10 சதவீத பொருட்களை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றன. இதனால் இத்துறையின் உற்பத்தி பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.
வைரஸ் தாக்குதல் பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும்குறிப்பாக சீனாவை நம்பியுள்ளஅல்லது சீனாவில் தங்களது ஆலைகளை அமைத்துள்ள நிறுவனங்களின் தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிவித்துள்ளது.
கார், வர்த்தக வாகனங்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி பேட்டரி வாகன உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று அமைப்பின் தலைவர் ராஜன் வதேரா குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் புத்தாண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த சூழலில் கொடிய வைரஸ்பரவி சூழலை முற்றிலுமாக மாற்றிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் பிஎஸ்-6 வாகன உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தியாளர்கள் இதற்கு மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர். அதற்கு கூடுதல் நிதியும்,ஸ்திரமான உற்பத்தி தொடர்வதற்குசிறிது கால அவகாசமும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசுக்கு தங்கள் துறையின் தேவை குறித்து தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அரசும் கோரிக்கைகளைத் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT