Published : 09 Mar 2020 05:08 PM
Last Updated : 09 Mar 2020 05:08 PM
கரோனா வைரஸால் சீனா பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை இந்தியா சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.
இந்தநிலையில் கரோனா வைரஸால் சீனா பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை இந்தியா சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘உலகம் முழுவதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் சூழல் உள்ளது. அதேசமயம் நமது நாட்டில் அந்த அளவிற்கான பிரச்சினை இல்லை. வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு கீழ்கண்ட முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அ) கச்சா எண்ணெய் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அதன் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் பற்றாக்குறையை சரி செய்வதுடன் வீழ்ச்சியினால் கிடைக்கும் ஆதாயத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆ) இந்தியாவில் சுகாதாரம் மற்றும் சுத்தம் செய்யும் இயக்கத்தை வேகப்படுத்துவதன் மூலம் சீனாவுக்கு மாற்றாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இ) நமது நாட்டில் கெடுபிடிகளை தளர்த்துவதன் மூலம் சீனாவுக்கு மாற்றாக உற்பத்தி நாடாக இந்தியா மாறக்கூடும். உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவர்.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT