Published : 07 Mar 2020 05:26 PM
Last Updated : 07 Mar 2020 05:26 PM
யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிதி சீரழிவு என்ப பாஜக அரசு நிதி நிறுவனங்களை மிக மோசமாக நிர்வகிப்பதை தான் காட்டுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.
தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.
அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து இன்று ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள யெஸ் வங்கியில் அரசின் மீட்பு திட்டத்துடன் எஸ்பிஐ வங்கி 49 சதவீத பங்குகளை வாங்கும் முடிவு ஆச்சரியமளிக்கிறது. அந்த வங்கி இந்த அளவிற்கு கடன் வழங்கியுள்ளது வங்கியை நடத்தும் நடைமுறையல்ல, சாகச செயல் தான்.
யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிதி சீரழிவு என்ப பாஜக அரசு நிதி நிறுவனங்களை மிக மோசமாக நிர்வகிப்பதை தான் காட்டுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT