நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ மற்றும் எல்ஐசி முடிவு

நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ மற்றும் எல்ஐசி முடிவு
Updated on
1 min read

கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் யெஸ் வங்கிகளின் பங்குகளை வாங்குவதற்கு எஸ்பிஐ தலைமையிலான கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எஸ்பிஐ மற்றும் எல்ஐசி இணைந்து யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை வாங்கஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 பங்கின் விலை ரூ.2 என்ற வீதத்தில் ரூ.490 கோடி மதிப்பில் பங்குகள் வாங்கப்பட உள்ளன.

யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

ராணா கபூர் மற்றும் அசோக் கபூர் ஆகிய இருவர் தலைமையில் 2004-ம் ஆண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. யெஸ் வங்கியின் வாராக் கடன் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராணா கபூரை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக ஆர்பிஐ கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து வங்கியின் சந்தை மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. ராணா கபூரின் வெளியேற்றத்துக்குப் பிறகு, வங்கியின் மீது உள்ளூர் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தனர். விளைவாக, இன்னும் வங்கி மீளாமுடியாத நிலையில் உள்ளது.

ராணா கபூரின் வெளியேற்றத்தை தொடர்ந்து வங்கியின் சிஐஓ மற்றும் நிர்வாக அதிகாரியாக ரவ்னீத் கில் கடந்த ஆண்டு மார்ச்மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து வங்கியின் நிதி நிலையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

விரைவில் புதிய வழி பிறக்கும் என்று சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு யெஸ்வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும்.

சில மாதங்களுக்கு முன் எஸ்பிஐதலைவர் ரஜ்னீஷ் குமார், யெஸ்வங்கியை நொடிந்துபோக விடமாட்டோம் என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே யெஸ் வங்கியின் பங்குகளை எஸ்பிஐ வாங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 26.96 சதவீதம் உயர்ந்து ரூ.37.20-ஐத் தொட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in