Published : 06 Mar 2020 09:56 AM
Last Updated : 06 Mar 2020 09:56 AM
நடப்பு நிதி ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி ( இபிஎஃப்) மீதான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதி ஆண்டுக்கான வட்டி 8.65 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது 2019-20 நிதி ஆண்டுக்கான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிலான குறைந்த வட்டி விகிதம் ஆகும். நேற்று மத்திய அறங்காவல் வாரியக் குழுவின் சந்திப்பு நடைபெற்றது. அதில் இபிஎஃப் மீதான வட்டியை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதனால் நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ.700 கோடி உபரியாக இருக்கும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 2012-13-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. அதிகபட்ச அளவாக 2015-16 நிதி ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்தது. 2016-17-ல் 8.65 சதவீதமாகவும், 2017-18-ல் 8.55 சதவீதமாகவும் இபிஎஃப் வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முடிவு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை தொழிலாளர் அமைச்சகம் எதிர்நோக்கி இருக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளைப் போலவே பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியையும் நிர்ணயிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT