Published : 28 Feb 2020 08:07 PM
Last Updated : 28 Feb 2020 08:07 PM
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.7 சதவீதமாகக் குறைந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012-13 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் இருந்தது. அதன்பின் 7 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் அதே அளவுக்குக் குறைந்துள்ளது.
கடந்த 2018-19 ஆம் நிதியாண்டின் இதே மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம் இருந்த நிலையில் இப்போது 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2019-20 ஆம் ஆண்டுக்கான திருத்தி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி கடந்த 2-வது காலாண்டில் 4.5 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 5 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்த மதிப்பு (ஜிவிஏ) அடிப்படையில் உற்பத்தித் துறை கடந்த நிதியாண்டில் 5.2 சதவீதம் இருந்ததைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைந்துள்ளது.
வேளாண் துறை உற்பத்தி கடந்த நிதியாண்டில் இருந்ததைக் காட்டிலும் 2 சதவீதம் உயர்ந்து 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.6 சதவீதமாக இருக்கிறது. சுரங்கத்துறை வளர்ச்சி கடந்த ஆண்டில் இதே காலத்தில் 4.4 சதவீதம் இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவை, ஒளிபரப்பு ஆகியவற்றின் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7.8 சதவீதம் இருந்த நிலையில் இந்த முறை 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT