Published : 26 Feb 2020 09:12 AM
Last Updated : 26 Feb 2020 09:12 AM

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: இந்திய சிஇஓ-க்களிடம் அதிபர் ட்ரம்ப் உறுதி

டெல்லி அமெரிக்க தூதரகத்தில் உள்ள ரூஸ்வெல்ட் அரங்கில் நடைபெற்ற தொழில்துறை தலைவர்களுடனான சந்திப்பில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் கேள்விக்கு பதிலளிக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

புதுடெல்லி

இரண்டு நாள் பயணமாக இந்தியாவந்துள்ள அமெரிக்க அதிபர்டொனால்டு ட்ரம்ப், நேற்று இந்தியாவில் உள்ள தொழில்துறை தலைவர்களுடன் (சிஇஓ) உரையாடினார். அப்போது அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு வசதியாக அங்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உறுதி அளித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நியமுதலீடுகள் அவசியம் என்று கருதுவதாகவும் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ள கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் என்றார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்துஆலோசிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இந்தியர்கள் மத்தியில் இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவுடன் அதிக அளவிலான வர்த்தகங்களை மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டார். 300 கோடி டாலர் மதிப்பிலான ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்க உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய ட்ரம்ப், “அவர் மிகவும்உறுதியான மனிதர் அதேசமயம் பழகுவதற்கு இனிமையானவர்’’ என்றார். நாங்கள் வேலைவாய்ப்பை இங்கு உருவாக்குகிறோம். அவர் (மோடி) அமெரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார். ஒவ்வொரு நாட்டின் அரசுகளுமே வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உதவ முடியும். தனியார் நிறுவனங்கள்தான் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றார்.

அமெரிக்காவில் தற்போது தொழில் தொடங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், சில கட்டுப்பாடுகள் அதற்குரிய வழிகாட்டுதலின் மூலம்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் தனது அரசு அத்தகைய கட்டுப்பாடுகளை குறைப்பதோடு அதிக அளவிலான வழிகாட்டுதலை உருவாக்கும் என்றார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் அதன் மூலம் சந்தைகள் அதிக அளவுக்கு உயரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x