Published : 24 Feb 2020 09:56 AM
Last Updated : 24 Feb 2020 09:56 AM

அரசு நிதி ஆண்டுக்கு ஏற்றாற்போல் ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டு மாற்றம்- சக்திகாந்த தாஸ் தகவல்

புதுடெல்லி

பணவீக்க அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கென உருவாக்கப்பட்ட நிதிக் கொள்கையின் கட்டமைப்பை ஆய்வு செய்துவருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக வரும் ஜூன் மாதம்பங்குதாரர்கள் மற்றும் அரசுடன்கலந்தாலோசனை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வருடாந்திர பணவீக்க அளவை கட்டுக்குள் வைக்கும் விதமாக அதற்கான நிதிக் கொள்கை குழு கடந்த 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆறு நபர்கள் அடங்கிய இக்குழுதான் ரொப்போ விகிதம் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறது, 2016 அக்டோபர் மாதம் இக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. வருடாந்திர பணவீக்கத்தை மார்ச் 31, 2021 வரையில் அதிகபட்ச அளவாக 6 சதவீதமாகவும், குறைந்தபட்ச அளவாக 2 சதவீதமாகவும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘இந்த நிதிக்கொள்கைச் சட்டகம் மூன்றரை ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இந்த கொள்கை அமைப்பு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்துவருகிறோம். வரும் ஜூன் மாதம் பங்குதாரர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசுடன் கலந்தாலோசனை நடத்த உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அதேபோல் ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தற்போது ரிசர்வ் வங்கிக்கான நிதி ஆண்டு ஜுலை 1-ல்ஆரம்பித்து ஜூன் 30-ல் முடிகிறது. இனிமேல் மத்திய நிதி ஆண்டின்படியே ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டும் மாற்றப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1-ல் ரிசர்வ்வங்கியின் நிதி ஆண்டு தொடங்கி மார்ச் 31-ல் முடியும். அதன்பிறகு, அதாவது 2021-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கிக்கும் நிதி ஆண்டு ஏப்ரல் 1-ல் தொடங்கி மார்ச் 31-ல் முடிவடையும்’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x