Published : 12 Feb 2020 08:57 AM
Last Updated : 12 Feb 2020 08:57 AM
நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இல்லை என்றும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணிப் பதாக அவர் கூறினார்.
பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், அதன் காரணமாக நாட்டில்நேரடி அன்னிய முதலீடு (எப்டிஐ)அதிகரித்துள்ளதையும், தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்துள்ளதை யும் சுட்டிக் காட்டினார். கடந்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டியிருப்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்றும் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியை அடையாளம் காட்டும் 7 அம்சங்கள் தெளிவாக தெரிவதால் தற்போதைய நிலையில் பொருளாதாரம் சிக்கலில் இல்லை என்றும் குறிப்பிட்டார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதையும்விட அதிகமாக உள்ளது என்றும், பங்குச் சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
வளர்ச்சிக்கான அறிகுறிகளாக நான்கு முக்கிய காரணிகள் அதாவது தனியார் முதலீடு, ஏற்றுமதி, தனியார் மற்றும் பொதுமக்கள் நுகர்வு ஆகியன உள்ளன என் றார்.
அரசின் முதலீட்டைப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் அரசு வெளியிட்ட தேசிய கட்டமைப்பு திட்டம் குறித்த அறிவிப்பையும் சுட்டிக் காட்டினார். இதன் மூலம் ரூ.1.03 லட்சம் கோடிகட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்கள் நாடு முழுவதும் அடுத்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களின் நுகர்வை அதிகரிக்கும் விதமாக குறைந்தபட்ச ஆதார விலையை குறுவை மற்றும் ராபி பருவ காலங்களில் உயர்த்தியுள்ளதையும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது நாட்டின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருந்ததுஎன்றும் தற்போது பொருளாதாரத்தை நன்கு அறிந்த டாக்டர்களால் திறம்பட நிர்வகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பட்ஜெட் குறித்த விவாதத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில், எப்போது வேண்டுமானாலும் சீர்குலைந்து போகும் நிலையில் உள்ளதாகவும் அதை திறமை இல்லாத மருத்துவர்கள் கவனிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலடி தரும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்விதம் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT