Published : 10 Feb 2020 07:38 PM
Last Updated : 10 Feb 2020 07:38 PM
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக பன்னாட்டு நிறுவனமான அமேசான், இந்திய சந்தைப் போட்டி சட்டவிதிகளை மீறி வர்த்தகம் செய்வதாக எழுந்த புகார்களை அடுத்து இந்திய போட்டிச் சந்தை கமிஷன் (CCI) அமேசான் மற்றும் வால்மார்ட்டின் பிளிப்கார்ட் மீது ‘பொறுப்பாண்மை மீறல்’ (antitrust probe) விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இத்தகைய விசாரணை நிறுவனத்துக்கு ‘ஈடு செய்ய முடியாத இழப்பையும்’ ‘நிறுவனத்தின் மதிப்பையும்’ கெடுக்கும் என்று அமேசான் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக விசாரணையை எதிர்கொண்டுள்ளது.
இந்தியச் சந்தை போட்டிகள் சட்டவிதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்ததும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கழிவுகள் போட்டிகளின் எல்லைகளை மீறியதாக இருப்பதாகவும் புகார் எழ கடந்த மாதம் இந்திய போட்டிகள் சந்தை கமிஷன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மீது விசாரணையை முடுக்கி விட்டது.
இந்தியச் சந்தையின் சிறு வணிகர்களையும், சிறு வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய அளவில் பெரிய அளவில், அளவுக்கு மீறிய டிஸ்கவுண்ட்களையும், சிறு வணிகர்களை ஒழிக்கும் நோக்கத்துடனான வர்த்தகச் செயல்களையும் செய்து வருவதாக இந்திய சில்லரை வர்த்தகர்கள் அமெரிக்க நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மறுத்து வந்தன.
இதனையடுத்து புதுடெல்லியில் உள்ள வர்த்தகர்கள் குழு புகார் எழுப்ப சிசிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது, அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில விற்பனையாளர்களுக்குச் சகாயம் செய்து சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் முறைசாரா போட்டி வர்த்தகம் செய்வதாக அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக ஜெயண்ட் நிறுவனங்களை இவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து பெங்களூரு கோர்ட்டில் பிப்.10ம் தேதி அமேசான் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், “சிசிஐ கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, விசாரணை அறிக்கை தன் மூளையை ஈடுபடுத்தாமல் போட்டியில் சிறு வணிகர்களுக்கு தீங்கு நடக்கிறதா என்பதற்கான எந்த ஆதாரங்களையும் அளிக்காமல் உள்ளது” என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று அமேசான் நிறுவன நிர்வாகியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது வழக்கு விசாரணை கோர்ட்டில் இருக்கும் போது கருத்து கூறக் கூடாது என்று மறுத்தது.
இந்நிலையில் இந்த வார இறுதியில் பெங்களூரு கோர்ட் அமேசான் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. புகார் அளித்த டெல்லி வியாபார் மஹாசங் தன் வாதங்களை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிசிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு மத்திய அரசின் வாணிப அமைச்சர் கூறும்போது அமேசான் இந்தியாவில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதன் மூலம் ‘பெரிய சாதகம் ஒன்றையும் செய்துவிடவில்லை’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT