Published : 10 Feb 2020 09:40 AM
Last Updated : 10 Feb 2020 09:40 AM
மத்திய அரசு மாநிலங்களுக்கு விரைவில் ரூ.35,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களுக்கான இழப்பீடாக ரூ.35,298கோடி வழங்கியுள்ள நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கு ரூ.35,000 கோடி வழங்க உள்ளது. இத்தொகை விரைவில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி விதியின்படி, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐந்து வருடங்களுக்கு, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் கடந்த 4 மாதங்களாக இழப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கானத் தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு இழப்பீடு
சரக்கு மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே அளவிலான வரி விதிப்பை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு, ஜிஎஸ்டியை கடந்த 2017 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய வரி முறையால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்பட்சத்தில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை மத்தியஅரசு வழங்கும் என்று உறுதிஅளித்தது. அதன்படி, 2015-16ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு, மாநிலங்களின் வருவாய் 14 சதவீதம் உயரவில்லை என்றால், மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதுவரை ரூ.2.11 லட்சம் கோடி
அதன்படி மத்திய அரசு 2017 ஜூலை முதல் இதுவரை ரூ.2.11 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கியுள்ளது. 2017 ஜூலை முதல் 2018 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ.48,785 கோடி, 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையில் ரூ.81,141 கோடி அளவில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டிக்கான இழப்பீடு வழங்கியுள்ளது.
2019 ஏப்ரல்-மே மாதங்களுக்கு ரூ.17,789 கோடி, ஜூன்-ஜூலை மாதங்களுக்கு ரூ.27,956 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு ரூ.35,298 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர்-நவம்பர் மாதங்களுக்கு ரூ.35,000 கோடி வழங்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT