Published : 03 Jan 2020 10:23 AM
Last Updated : 03 Jan 2020 10:23 AM

ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க எம்டிஎன்எல் நிறுவனம் முடிவு

புதுடெல்லி

பொதுத் துறை நிறுவனமான மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனம் வரும் நிதி ஆண்டிலிருந்து லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக நிறுவனம் வசம் உள்ள ரூ.23 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறைக்கு விற்பனை தொடர்பான திட்ட அறிக்கையை எம்டிஎன்எல் நிர்வாகம் அளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக மும்பையில் உள்ள 36 ஏக்கர் நிலம், டெல்லியில் உள்ள கடைகளுடன் கூடிய அலுவலக வளாகம், நொய்டாவில் உள்ள அலுவலர் குடியிருப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6,200 கோடியாகும். மும்பை மற்றும் டெல்லியில் விற்பனை செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாகும்.

ஊழியர்களின் தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு வரும் நிதி ஆண்டிலிருந்து நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கும் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுநீல் குமார் குறிப்பிட்டார். தற்போது 14,387 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி சம்பள தொகை மீதமாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 18,422 ஆகும்.

2020-21-ம் ஆண்டில் சொத்து விற்பனை மூலம் ரூ. 7 ஆயிரம் கோடியை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டெல்லியில் மட்டும் 7 அலுவலக மற்றும் கடை வளாகங்கள் எம்டிஎன்எல்லுக்கு சொந்தமாக உள்ளன. இது தவிர 398 அலுவலர் குடியிருப்புகள் பல்வேறு வளாகங்களில் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குர்ஷித் லால் பகுதியில் உள்ள அலுவலகத்தை காலி செய்துவிடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 500 கோடி முதல் ரூ. 600 கோடி வரை வாடகை ஈட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x