Published : 10 May 2014 10:00 AM
Last Updated : 10 May 2014 10:00 AM

பங்குச்சந்தை வர்த்தகத்தில் எழுச்சி: பாஜக வெற்றிவாய்ப்பு எதிரொலி?

இந்திய பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எழுச்சி இருந்தது. பாஜக வெற்றிவாய்ப்பு பிரகாசமானதாக கருதப்பட்டதால் வர்த்தகம் தொடர்ந்து சீராக அதிகரித்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 22994 புள்ளிகளில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 704 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்ச புள்ளியான 23048 புள்ளியைத் தொட்டது.

இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 198 புள்ளிகள் உயர்ந்து (2.99%) 6858 புள்ளிகளில் முடிவடைந்தது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் பங்குச்சந்தைகள் அதிக ஏற்றம் பெற்றது இப்போதுதான்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 150க்கு மேற்பட்ட பங்குகள் தன்னுடைய 52 வார உச்சபட்ச புள்ளியைத் தொட்டன. சென்செக்ஸ் பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம். அண்ட் எம்., ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் 52 வார உச்சபட்ச விலையை தொட்டன.

இதுதவிர பஜாஜ் பைனான்ஸ், ஜே.கே வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஹெச்.பி.சி.எல். ஆகிய பல பங்குகள் உச்சபட்ச விலையை அடைந்தன.

வங்கிக் குறியீடு உயர்வு

பார்மா துறை குறியீடு தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. குறிப்பாக வங்கித்துறை குறியீடு (பேங்க் நிஃப்டி) அதிகமாக உயர்ந்து வர்த்தகத்தின் இடையே 13814 என்ற தன்னுடைய உச்சபட்ச புள்ளியைத் தொட்டது. முடிவில் வங்கிக் குறியீடு 5.34 சதவீதம் உயர்ந்தது. இதன்பிறகு ரியால்டி துறை 4.38 சதவீதமும், மின் துறை குறியீடு 4.12 சதவீதமும், கேபிடல் குட்ஸ் 3.34 சதவீதமும் உயர்ந்தது.

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள். செபி தகவல்படி வியாழன் அன்று 363 கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து பங்குச்சந்தை ஆலோசகர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்ட போது, ஐரோப்பிய மத்திய வங்கி அடுத்த மாதம் சில ஊக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்று தெரிவித்ததும் அந்நிய முதலீடுகள் வருவதற்கு ஒரு காரணமாகும். மேலும் நரேந்திர மோடி பிரதமர் ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முதலீட்டாளர்கள் மற்றும் பெரும்பாலான நிபுணர்கள் கருதுவதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தன.

வரும் திங்கள் கிழமை மாலை, கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அப்போது 220 தொகுதிகளுக்கு மேல் பி.ஜே.பி.க்கு கிடைக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மேலும் 300 புள்ளிகள் வரை உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் 220 தொகுதிகளுக்கு கீழே கருத்து கணிப்புகள் வரும் பட்சத்தில் சரியவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

மேலும் ரூபாய் மதிப்பு ஸ்திரமடைந்து வருகிறது. அதனால் ஏற்றுமதி வாய்ப்பு இருக்கும் துறை பங்குகளில் விற்கும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் பாதுகாப்பான துறை என்று சொல்லக்கூடிய எஃப்.எம்.சி.ஜி. துறை பங்குகளும் விற்கும் போக்கு அதிகரித்து வங்கி பங்குகளில் முதலீடு அதிகரிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x