Published : 30 Dec 2019 09:11 AM
Last Updated : 30 Dec 2019 09:11 AM
மத்திய அரசு புதிய தொழில் கொள்கை உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கூடவே, இணைய வர்த்தகம் தொடர்பான கொள்கை உருவாக்கத்திலும் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அந்த இரு கொள்கைகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இவ்விரு கொள்கைகள் சார்ந்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் தொழில் மற்றும் இணைய வர்த்தகம் தொடர்பான புதிய கொள்கைகள் தயாராகி விடும்’ என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் இணைய வர்த்தக கொள்கைக்கான வரைவை வெளியிட்டது. தகவல் பாதுகாப்பு, சேகரிப்பு, பரிமாற்றம் தொடர்பான விதிமுறைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது தகவல் என்பது தொழில் சார்ந்து மிக மதிப்புமிக்க ஒன்றாக மாறியுள்ளது. அவற்றை கையாளுவது தொடர்பான விதிமுறைகளே இக்கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவல்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் செல்லாமல், அவற்றை இந்தியாவுக்குள் சேகரித்து வைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து அந்த வரைவில் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களால் ஏற்படும் பிரச்சினைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அவையும் இந்தப் புதிய கொள்கை உருவாக்கத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் கொள்கை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அந்நிய முதலீடுகளை ஈர்க்கக்கூடியதாக இந்தப் புதிய தொழில் கொள்கை அமையும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை உருவாக்கப் பணிகள் 2017-ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டன. இது மூன்றாவது தொழில் கொள்கை ஆகும். முதல் தொழில் கொள்கை 1956-ம் ஆண்டிலும், இரண்டாவது கொள்கை 1991-ம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT