Published : 30 Dec 2019 06:50 AM
Last Updated : 30 Dec 2019 06:50 AM
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்தார். ஆனால், தற்போது அவற்றையெல்லாம் கைவிட்டு விட்டு, அரசியல் சார்ந்து செயல்படத் தொடங்கியுள்ளார். அவர் முன்வைக்கும் அரசியலால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அச்சம் கொள்கின்றனர் என்று பிரஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர்களில் ஒருவராக கருதப்படும் கை சோர்மன், ‘மோடி ஆரம்பத்தில் இந்திய தொழில் முனைவோர்களுக்கு சாதகமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பு தொடர்பாக அவருடைய முன்னெடுப்புகள், மேக் இன் இந்தியா போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், திடீரென்று நாட்டின் பொருளாதாரம் சார்ந்த நோக்கத்தில் இருந்து விலகி அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளால் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் அரசியல் சார்ந்தோ, குடியுரிமைச் சட்டம் சார்ந்தோ கருத்துகள் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அவருடைய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
ஒரு அரசின் மீது நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். ஆனால், மோடியின் ஆட்சி காலத்தில் அந்த நம்பிக்கை சிதைந்து வருகிறது. இது மிக கவலைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. உலகளாவிய முக்கிய பொருளாதார நிபுணர்கள் அனைவரும், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பொருளாதரத்தைப் பற்றி சிந்தையின்றி, வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதாக மோடியின்மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் மோடியின் அரசியல் செயல்பாடுகளே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஜிடிபி கணக்கீடும் இந்தியாவில் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறிய அவர், இந்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் எவையும் நம்பத்தகுந்தவையாக இல்லை என்று தெரி வித்தார்.
இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மையும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. போதிய வருமானம் இல்லாத நிலையில் மக்களின் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வறுமை பெரும் அச்சுறுத்தலாக மாறிஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT