Published : 17 Dec 2019 12:30 PM
Last Updated : 17 Dec 2019 12:30 PM

பட்ஜெட் ஆலோசனை; பொருளாதார சுழற்சிக்கு நடவடிக்கை: நிர்மலா சீதாராமனிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

புதுடெல்லி

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் துறையினர் பங்கேற்றனர்.

ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலம் ஒரு நிதி ஆண்டு என்று ஆகும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், அதற்கு முந்தயை நிதி ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

பட்ஜெட் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டால் தான், அதை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைபடுத்துவதற்கு வசதியாக இருக்கும். இதனால் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழக்கமாக்கியது.

2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும். பிப்ரவரி 1-ம் தேதி சனிக் கிழமை என்பதால், பட்ஜெட் அறி விப்புக்கான நாள் மாற்றப்படுமா என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், பட்ஜெட் வெளியீடு எந்த மாற்றமுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என்று மக் களவை விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இதனையடுத்து பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் துறையினர் பங்கேற்றனர். நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டார்.

பல்வேறு சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். வட்டிகுறைப்பு, வரிச்சலுகைகள், கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து தொழில்துறையினர் தங்கள் கருத்துக்களை கூறினர்.

அதுபோலவே பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாகவும் அவர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர்.
நாளை பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x