Published : 30 May 2014 10:00 AM
Last Updated : 30 May 2014 10:00 AM
இடம்: ரஷியாவின் கான்ட்டி மான்ஸி நகரம். நாள்: மார்ச் 29, 2014. கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் ஸெர்கே கராஜகினுடன் மோதல்.
ஆனந்திடம் கறுப்புப் படை. கராஜகினிடம் வெள்ளைப் படை. அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய 15 காய்களை லாவகமாக நகர்த்தவேண்டும், தன் அரசனைப் பாதுகாக்கவேண்டும், எதிரி அரசனைப் பிடிக்கவேண்டும்.
ஒவ்வொரு காயை நகர்த்தும்போதும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்று கணக்குப்போடவேண்டும். அதே சமயம், எதிர் ஆட்டக்காரர் தன் காயை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்று யூகிக்கவேண்டும். இதுதான், செஸ் விளையாட்டில் ஜெயிக்கும் வழி.
டீல் போடுவதும் செஸ் ஆட்டம்தான். “காய்”களுக்குப் பதிலாகக் கருத்துகள், வார்த்தைகள், உடல் மொழி! நம்மோடு பேச்சு வார்த்தை நடத்துபவர் நம் “காய்”களுக்கு எப்படி பதிலடி தருவார் என்று சரியாக எடை போடவேண்டும்.
இது சுலபமல்ல. ஏன் தெரியுமா? அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டமாட்டார்கள். புதைந்துகிடக்கும் அவர்களின் எண்ணங்களை எப்படிக் கண்டுபிடிப்பது?
நெடுங்காலமாக அறிவியலிலும், மனோதத்துவத்திலும் இருந்த இந்தக் கேள்விகளுக்கு 1950 – களில் பதில் கிடைத்தது.
கனடா நாட்டில் வில்டர் பென்ஃபீல்ட் (Wilder Penfield) என்னும் மூளை அறுவைச் சிகிச்சை மருத்துவர் இருந்தார். நோயாளிகளின் மூளையில் உணர்ச்சிகள் இருக்கும் உடல் உறுப்பு பொட்டு மடல் (Temporal Lobes). பென்ஃபீல்ட் வலிப்பு நோய் வந்தவர்களுக்கு இந்த உறுப்பில் மெல்லிய மின்சார ஷாக் கொடுப்பார். அப்போது ஒரு நோயாளி சிறுவயதில் தன் அம்மா பொய் சொன்னதற்காக அடித்ததைத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே வர்ணித்தார்.
மின்சார அதிர்வை நீக்கியபோது, நோயாளிக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வரவேயில்லை. ஆச்சரியமடைந்த பென்ஃபீல்ட் ஏராளமான நோயாளிகளிடம் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது அவர் கண்டுபிடித்த உண்மை, “நம் எல்லோரிடமும் அனுபவங்கள் உணர்ச்சிகளோடு ஆழ்மனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக நாம் இந்த அனுபவங்களை நினைவு கூர்வதில்லை. அதிர்வுகளை எதிர்கொள்ளும்போது நம்மை அறியாமலே ஆழ்மனம் அனிச்சைச் செயலாக இந்த நினைவுகளை வெளிப்படுத்துகிறது.”
எரிக் பெர்ன் (Eric Berne) என்னும் அமெரிக்க மனோதத்துவ மேதை இதை இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்தார். அவர் கண்டுபிடித்த கொள்கைதான், உலகப் புகழ் பெற்ற பரிவர்த்தனை ஆராய்ச்சி (Transactional Analysis).
இரண்டு அல்லது அதற்கும் அதிகமானவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்குப் பரிவர்த்தனை என்று எரிக் பெர்ன் பெயர் வைத்தார். இந்தச் சந்திப்பில், ஒருவரின் மொழி, வார்த்தைகள் அல்லது உடல்மொழி (ஏன், கை குலுக்கல்கூட) இன்னொருவர் மனதில் பழைய நினைவுகளைத் தூண்டிவிடும் மின்சார ஷாக் போன்ற தூண்டுதல் சக்தியாகிவிடும். டீல்கள் போன்ற அந்தச் சந்திப்புகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை இந்த நினைவுப் பதிவுகளின் கலவை தீர்மானிக்கிறது.
பழைய நினைவுகள் ஆழ்மனத்தில் அடுக்குகளாக எப்படிப் பதியும்?
சென்னையில் சாமியார் மடம், டாக்டர் சுப்பராய நகர் நான்காம் தெரு. வீடு எண் 5. இரவு மணி இரண்டு. ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், இயோஃபோனிக்ஸ் ரெக்கார்டர் (Euphonix Recorder), டால்பி ப்ராசஸர் (Dolby Processor)என இசை உலகின் புத்தம் புதுச் சமாச்சாரங்கள்.ஊரே உறங்கும் வேளை. அந்த அறையில் படு பிசியாக இருக்கிறார் ஏ. ஆர். ரஹ்மான். கோச்சடையான் படத்தின் இசையமைப்பு நடக்கிறது.
இதயம் பாட்டு ரெக்கார்டிங். நிவாஸ், சின்மயி ஆகிய இருவரையும் பலமுறை பாடவைத்துப் பல “டேக்”களில் ரிதம் ட்ராக்கில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அதன்மேல் அடுக்கு அடுக்காக, ஆண் கோரஸ் குரல்கள், வயலின், ஸெல்லோ, தபலா, தில்ருபா, ஹார்ப், வீணை, டிம்பனி போன்ற தாள வாத்தியங்கள் ஆகிய பல இசைகளை அடுக்கு அடுக்காகச் சேர்க்கிறார். அப்புறம், அவருடைய ஸிந்தஸைஸர் மேஜிக் செய்கிறது.
படம் பார்க்கிறோம். “செந்தீ விழுந்த செம்பொற் பாறையில், மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய், இதயம் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே” என்று சின்மயி குரலில் தீபிகா படுகோன் நெகிழும்போது, நாம் உருகிப் போகிறோம், நம் இதயங்களைப் பறி கொடுக்கிறோம்.
இதயம் பாடலைப் போலவே, நம் ஆழ்மனத்திலும், அனுபவங்கள் அடுக்குகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை மூன்று அடுக்குகள். நாம் பிறருடைய பேச்சு அல்லது உடல்மொழிக்குக் கொடுக்கும் பதில் இந்த மூன்று நினைவு அடுக்குகளின் ஒட்டுமொத்த சக்தியாக வெளிவரும்.
இந்த மூன்று அடுக்குகளுக்கும் எரிக் பெர்ன் வைத்த பெயர்கள்:
பெற்றோர் (Parent)
குழந்தை (Child)
வயது வந்தோர் (Adult)
பெற்றோர்
பெற்றோர் என்பது சங்கேத வார்த்தை. அம்மா, அப்பா மட்டுமல்ல, குழந்தைப் பருவத்தில் நம் சிந்தனைகளில் தாக்கங்கள் ஏற்படுத்திய பாட்டி, தாத்தா, பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் “பெற்றோர்” என்னும் வார்த்தையில் அடங்குவார்கள்.
“பொய் சொல்லாதே”, “திருடாதே” “மற்றக் குழந்தைகளை அடிக்காதே” என்று பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது அவர்கள் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அதே சமயம், பெரிவர்கள் தவறுகள் செய்தால், எது தவறு, எது சரி என்று பகுத்தறியத் தெரியாத அந்தப் பிஞ்சு மனம் அந்தச் செயல்களையும் அப்படியே பதிவு செய்துகொண்டுவிடும். இந்தப் பாதிப்புகள், பெற்றோர் நினைவுப் பதிவுகள்.
குழந்தை
ஐந்து வயதுக்குள் குழந்தைக்கும் சொந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன. “பூக்களைப் பார்க்கும்போது ஏனோ இனம் புரியாத சந்தோஷம்”, “எனக்குப் பூனையைக் கண்டால் பயம்” என்று நம்மில் பலர் சொல்கிறோம். ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாது. புரியாத ஆனால் அனுபவப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் குழந்தை நினைவுப் பதிவுகள்.
வயது வந்தோர்
இதுவும் ஒரு சங்கேத வார்த்தைதான். தானாக அறிவைத் தேடும் வயது என்று பொருள். மனப்பக்குவத்தோடு அனுபவங்களை எடைபோட்டு ஆழ்மனதில் சேமிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள்
வயது வந்தோர் நினைவுப் பதிவுகள்.
நாம் பிறரிடம் பேசும்போது, அவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு ஏற்ப, பெற்றோர், குழந்தை, வயது வந்தோர் ஆகிய மூன்றில் ஒரு நினைவுப் பதிவு வெளிப்படும்.
”பெற்றோர்” வெளிப்பட்டால், அவர்களிடம் கண்டிப்பாகப் பேசுங்கள்.
”குழந்தை” வெளிப்பட்டால், அவர்களிடம் உணர்வு பூர்வமாகப் பேசுங்கள்.
”வயது வந்தோர்” வெளிப்பட்டால், அவர்களிடம் அறிவு பூர்வமாகப் பேசுங்கள்.
எந்த நினைவுப் பதிவு வெளியாகிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இதோ வழி (அட்டவணையை காண்க).
நீங்கள் பிறரிடம் பேசும்போது, உங்களிடம் இந்தத் தடயங்கள் வருகின்றனவா என்று பாருங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களிடம் பேசும்போது அவர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். பரிவர்த்தனை ஆராய்ச்சியின் பயன் புரியும்.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT