Published : 19 Nov 2019 05:08 PM
Last Updated : 19 Nov 2019 05:08 PM
நிதி மோசடிக்கு ஆளாகியுள்ள பிஎம்சி வங்கியில் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரிய வந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வாடிக்கையாளர் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.
இந்தநிலையில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரிசர்வ் வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரத்னய தலேக்கர் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘பிஎம்சி வங்கியில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளது. விதிமுறைகளுக்கு எதிராக பெரிய அளவில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து வங்கியையும், முதலீட்டாளர்களையும் காப்பாற்றவே ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். அதேசமயம், மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக பணம் எடுப்பதை ரிசர்வ் வங்கி தடுக்கவில்லை. ரிசர்வ் வங்கி நியமித்துள்ள நிர்வாகியை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கு ரூ. 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்.’’ என வாதிட்டார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT