Published : 19 May 2014 12:20 PM
Last Updated : 19 May 2014 12:20 PM
இன்று பலருக்கு பங்குச் சந்தை என்றால் அது ஒரு சூதாட்டம், அதில் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. அப்படி பலர் நினைப்பது போல அது உண்மையானால் எப்படி ஒரு அரசாங்கமே அதை எடுத்து நடத்தும்? மேலும் பங்குச் சந்தை எல்லா நாட்டிலும் உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பது பங்குச் சந்தை என்று கூறினால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே அதைப் பற்றித் தவறாகப் பேசமால் அது எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தோமேயானால் நம்மால் அதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.
பங்குச் சந்தை என்பது ரிஸ்க் சம்பந்தப்பட்ட முதலீடு அதில் முதலீடு செய்வதற்குமுன், அதில் என்ன ரிஸ்க் உள்ளது என்று அறிந்து கொள்ளாமல் மற்றவர் சொல்வதைக் கேட்டு அதிலிறங்கி பின்பு குறை கூறுவது தவறான செயல்.
முதலீட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. பாதுகாப்பான முதலீடு, இதில் அதிகபட்சமாக 10% ரிடர்ன் எதிர்பார்க்கலாம். இது பெரும்பாலும் உத்திரவாதமாகக் கிடைக்கக் கூடியது.
2. ரிஸ்கான முதலீட்டில் 15 முதல் 20% நீண்ட கால அடிப்படையில் கிடைப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன, ஆனால் உத்திரவாதம் கிடையாது.
பலர் 25% உத்திரவாதம் தருவதாகச் சொன்னால் நம்பக்கூடாது. ஒரு அரசாங்கத்தால் 10%-க்கு மேல் உத்திரவாதம் தராதபோது எப்படி சில முதலீட்டுத் திட்டங்கள் 25 முதல் 40% வரை உத்திரவாதமாக தர முடியும். இங்கு நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நம்முடைய பேராசையே இதற்குக் காரணம். அதனால் ஏமாற்றுபவர்களும் விதவிதமாய் ஏமாற்றுகிறார்கள். நம்மில் பலருக்கு சீக்கிரம் பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருப்பதால் தான் இது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.
பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது, அதை தினசரி வாங்கி விற்றால் நம்மால் பணம் ஈட்ட முடியாது, ஆனால் நேரத்தைப் போக்க முடியும். இன்று ஓய்வு பெற்ற பலர் தினசரி வேலைக்கு செல்வதைப் போல பங்குச் சந்தை வர்த்தகம் நடக்கக் கூடிய முகவர்களின் அலுவலகம் சென்று, வாங்கியும் விற்றும் நேரத்தைப் போக்குவதோடு பணத்தையும் வீணடிக்கிறார்கள். நம் நாட்டில் மக்கள் தொகைக்குப் பஞ்சமில்லை, இதில் பணத்தை விட்டவர்கள் மீண்டும் வரமாட்டார்கள், அதேசமயம் புதியவர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். மேலும் டீமேட் கணக்கு தொடங்குவது முதல் வருடம் இலவசம், நாம் எந்தப் பணமும் செலுத்த வேண்டாம் என்று சொன்னால் பலரும் புதிய கணக்கைத் தொடங்கி விடுவார்கள்.
முதலில் பங்குச் சந்தையில் நுழைபவர்களுக்கு சந்தை சாதகமாகவே இருக்கும். இவ்வளவு எளிதாகப் பணம் பண்ணக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது நாம் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும், அந்த எண்ணம் நம்முடைய எல்லா பணத்தையும் திரட்டி அதில் முதலீடு செய்யத் தோன்றும்.அவ்வாறு இறங்கும்போது எல்லா பணத்தையும் இழக்க வேண்டியதுதான்.
அதே சமயம் நல்ல நிறுவனத்தின் பங்கை வாங்கியவர்கள் அதை நீண்ட கால நோக்கில் வைத்திருப்பவர்கள் நல்ல லாபமே சம்பாதித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் நிறுவனருக்கே அந்தப் பங்கு நாளை என்ன விலை போகும் என்று தெரியாத போது நீங்களும் நானும் அது இந்த அளவுக்குப் போகும் என்று நினைத்து தினசரி வாங்குவதும், விற்பதும் தவறு. அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் தங்களுடைய நிறுவனத்தைப் பெரிதாக்க என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் அதற்கு சந்தையில் என்ன வரவேற்பு இருக்கிறது போன்ற விஷயங்களை அறிந்து செயல்பட்டோமேயானால் நம்மால் கண்டிப்பாக பணம் பண்ண முடியும்.
இன்று பலருடைய டயாலாக் என்னுடைய தந்தை பங்குச் சந்தையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார், இன்னும் சில சொந்தங்களும் அதை இழந்து விட்டன என்று சொல்லி அதிலிருந்து விலகுவதைவிட, அவர்கள் அதைப் பற்றி என்ன அறிந்திருந்தார்கள், அந்த காலகட்டத்தில் இன்று இருப்பதுபோல எல்லா விபரங்களும் வெளிப்படையாக இருந்ததா?, மேலும் ஒரு நிறுவனத்தைப் பற்றி எந்த அளவிற்கு ஒருவரால் தெரிந்து கொள்ள முடிந்தது என்று பார்க்கவேண்டும். இதில் குடும்பத்தில் ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே இது ஒரு தனி நபரின் புரிதலைச் சார்ந்தது.
எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் வருமான வரிபோக நம் கைக்கு என்ன கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும். வருமான வரி பாதுகாப்பான முதலீட்டிற்கு அதிகம், ரிஸ்க் சார்ந்த முதலீட்டிற்குக் கிடையாது. அரசாங்கமே மறைமுகமாகப் பங்கு சார்ந்த முதலீட்டை வரவேற்கிறது என்று இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். இன்று 30% வருமான வரி விளிம்பில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு 10% வட்டி கிடைப்பதாய் எடுத்துக் கொண்டால் 7% தான் வருமான வரி போக கைக்கு வரும். இந்த வகையான சலுகை பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிற்கு மட்டுமே பொருந்தும்.
இன்று மும்பை பங்கு சந்தை (SENSEX) தொடங்கி ஏறக்குறைய 35 வருடங்கள். 100ல் ஆரம்பித்த சென்செக்ஸ் புள்ளிகள் இன்று 24,000 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. கூட்டு வட்டியில் கணக்கிட்டால் இது வருடா வருடம் 17%. புதிய புதிய கண்டு பிடிப்புகளும் அதனால் உருவாகும் தொழில்களும் வந்த வண்ணம் இருக்கிறது கன்சூமரிசம் என்று சொல்லிற்கேற்ப, ஒருவருடைய செலவு செய்யும் மனப்பான்மை மேலை நாடுகளைப்போல நம்மிடம் மிக வேகமாக பரவி வருகிறது. இனிவரும் காலங்களிலும் 17% கூட்டு வட்டியுடன் நம் சந்தை வளருவதற்கான வாய்ப்புகளே அதிகம். மேலும் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வலுவான ஆட்சி அமைந்துள்ளது. இது பங்குச் சந்தையின் வளர்ச்சிக்குக் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால், தொழில் தொடங்குபவர்களுக்குப் பணம் வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலோர் பாதுகாப்பு எனக் கருதி வைப்பு நிதியில் வைத்தால் எப்படி அந்த பணம் தொழிலில் முன்னேற துடிப்பவர்களுக்கு போய்ச்சேரும். முன்னேறிய நாடுகளை எடுத்துக் கொண்டால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை 50% சதவிகிதத்திற்கும் மேல் இந்தியாவில் இன்னும் 5% மக்கள் கூட பங்கேற்கவில்லை. இந்நிலை வரும் காலங்களில் கண்டிப்பாக மாறும், இன்று மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு உள்ளது, அது மக்களைத் தெளிவான பங்குச் சந்தை பற்றிய அறிவுடன் மேலும் இந்த முதலீட்டில் சேர்க்கும் என்பது உறுதி.
சாராம்சம்:
இந்தக் கட்டுரையின் நோக்கமே, எந்த ஒன்றையும் மேலோட்டமாக ப் புரிந்து அதை புறக்கணிப்பதைவிட, கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் நம்மால் அதில் வெல்ல முடியும். எல்லோரும் கண்டிப்பாகப் பங்குச் சந்தையில் பங்கேற்கவேண்டும் என்று அழைக்கவில்லை, அதே சமயம் இதில் வருபவர்கள் அதனுடைய நீக்கு போக்கு தெரிந்தால் கண்டிப்பாகப் பணம் பண்ணுவதைத் தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலும் உங்களுக்கு இதில் நேரம் செலவிட முடியும் என்றால் மட்டுமே வரவும், அதை விடுத்து அடுத்தவர் சொன்னார் என்று வந்து பின்பு அவரைக்குறை கூறுவதைத்தவிர்க்கவும்.
எனக்கு ஓரளவிற்குப் புரிகிறது அதே சமயம் எனக்கு நேரம் ஒதுக்க முடியாது என நினைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இதில் பங்குச் சந்தையை விட ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் குறைவு.
பங்குச் சந்தை என்பது வரமோ அல்லது சாபமோ அது தனி நபரைப் பொருத்தது. இதைப் புரிந்து கொள்பவர்கள் நிறைய பணம் பண்ணுகிறார்கள், அதைப்பற்றி அறியாமால் முதலீடு செய்பவர்கள் அதை ஒரு பாவமாகக் கருதுகிறார்கள். மேலும் கடந்த 6 ஆண்டு காலம் இந்த முதலீட்டு வகை செயல்படாததால் பலர் இதில் முதலீட்டைத் தொடங்குவதற்குத் தயங்குகிறார்கள்.
இன்னும் 5 முதல் 10 வருடம் பங்குச் சந்தை மிகவும் சிறப்பாகச் செயல்படக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் வாருங்கள்,கண்டிப்பாக பணம் பண்ணலாம்.
பா. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT