Published : 07 Jul 2015 10:42 AM
Last Updated : 07 Jul 2015 10:42 AM

தொழில் கலாச்சாரம்: சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஆசையா?

சின்னச் சின்ன கிராமங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளிலும், சீன பொம்மைகள், பேனா பென்சில்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்கிறீர்களா? ஆச்சரியம் எதுவுமில்லை. மற்ற அனைத்து நாடுகளையும்விட, சீனாவிலிருந்துதான், இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சத்து 72 ஆயிரம் கோடி. சீனாவுக்கு நமது ஏற்றுமதி ரூ. 81 ஆயிரம் கோடி. இந்திய மொத்த வெளிநாட்டு வாணிபத்தின் (ஏற்றுமதி + இறக்குமதி) 10 சதவீதம் சீனாவோடுதான்.

முக்கிய பொருள்கள்

நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருள்கள்: பருத்தி, தாமிரம், ரசாயனப் பொருள்கள், கந்தகம், விமானங்கள், உலோகத் தாதுப் பொருட்கள். நாம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் முக்கியப் பொருள்கள்: எலெக்ட்ரானிக் சாமான்கள், இயந்திரங்கள், ரசாயனப் பொருள்கள், உரம், பிளாஸ்டிக்ஸ், இரும்பு உருக்குப் பொருட்கள், கப்பல்கள், படகுகள், மருத்துவக் கருவிகள்.

சீனா பற்றிய அறிமுகம்

சீனா நமது பக்கத்தில் உள்ள எல்லை நாடுகளில் ஒன்று. பரப்பளவு 95,96,960 சதுர கிலோ மீட்டர்கள். அதாவது இந்தியாவைவிட (32,87,263) சுமார் மூன்று மடங்கு பெரியது. மக்கள் தொகை 136 கோடி. இந்தியாவின் 125 கோடியைவிட அதிகம்தான். ஆனால், வீட்டுக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையால், 2050 இல் சீன மக்கள் தொகை 130 கோடியாகக் குறையும், 166 கோடி மக்களோடு நாம் முதல் இடத்தில் இருப்போம் என்று மேதைகள் கணிக்கிறார்கள்.

அரசின் கொள்கை “நாத்திகம்”. ஆனால், 18 சதவீத மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்: 5 சதவீதம் கிறிஸ்தவர்கள்: 2 சதவிகிதம் இஸ்லாமியர்கள்.

பண்டைய நாகரிகம் மிக்க நாடு

சீனா, வீரியம் குறையாமல் பண்டைய நாகரிகங்களை பாதுகாக்கும் நாடு. கி.மு. 5000 முதலே இங்கு நாகரிகம் தழைத்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன. காகிதம், வெடிமருந்து, அச்சிடுதல் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான். பல பல்லாயிரம் ஆண்டுகள் மன்னராட்சி: 1912 இல், தேசத்தந்தையாக மதிக்கப்படும் சன் யாட் ஸென் என்னும் புரட்சியாளர் மன்னராட்சியைக் கவிழ்த்து மக்களாட்சி தொடங்கினார். 1949 இல் மா சே துங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. உலகப் பொருளாதாரத்திலிருந்து விலகி வாழ்ந்தது.

`வளர்ச்சியே இலக்கு’

1976 இல் மா சே துங் மறைந்தார். டெங் சியாப்பிங் (Deng Xiaoping) தலைவரானார். ``பூனை கறுப்பா, வெள்ளையா என்பது முக்கியமல்ல, எலியைப் பிடிக்கும் பூனைதான் நல்ல பூனை” என்பது இவர் கொள்கை முழக்கம். அதாவது, கம்யூனிசமா, முதலாளித்துவமா என்பது முக்கியமல்ல, சீனாவின் பொருளாதார வளர்ச்சிதான் இலக்கு என்றார்.

தாராள பொருளாதாரம்

டெங் சீனாவின் கதவுகளை உலகத்துக்குத் திறந்தார். ஆப்பிள், ரீபாக், டெல் கம்ப்யூட்டர், ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற ஏராளமான பன்னாட்டுக் நிறுவனங்கள் சீனாவில் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். சீனத் தயாரிப்புகளும் உலகச் சந்தைகளில் வந்து குவிகின்றன.

மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதால், இந்தியப் பொருள்களுக்குச் சீனாவில் நல்ல விற்பனையை உருவாக்கமுடியும். எப்போதுமே தொழிலில் ஜெயிக்கவேண்டுமானால், வாடிக்கையாளர்களை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அவர்களுடைய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், எதிர் பார்ப்புகள் ஆகியவற்றைக் கொஞ்சம்கூடக் காயப்படுத்திவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நட்பை, உறவை வளர்க்கவேண்டும். இதற்கு நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

சீனாவில் வியாபாரம் தொடங்க…

சீனாவுக்குப் பயணம் செய்து, அவர்களை நேரடியாகச் சந்திப்பது உங்கள் வியாபாரம் பெருக உதவும். விசிட் அடிக்கப் பருவநிலைப்படி, சிறந்த மாதங்கள், ஏப்ரல், மே, செப்டம்பர். ஜனவரி நான்காம் வாரம் முதல் பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை வேண்டவே வேண்டாம். ஏனென்றால், சீனப் புதுவருடம் வரும் இந்தக் காலகட்டத்தில், விடுமுறைகள் அதிகம்.

நேரம் தவறாமை

பிசினஸ்மேன்களோடு சந்திப்பா? குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே போய் விடுங்கள், அவர்கள் நேரம் தவறாதவர்கள். பிசினஸ் மீட்டிங்குகளுக்கு மட்டுமல்ல, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குச் சற்று முன்பாகவே வந்துவிடுவார்கள். தாமதமாக வருவதை அவமதிப்பாக நினைப் பார்கள்.

ஆடை கலாச்சாரம்

சந்திப்புகளுக்குக் கோட் சூட் அணிவது நல்லது. குறைந்த பட்சம் டையாவது கட்டவேண்டும். ஜீன்ஸ், டீ ஷர்ட் கலாசாரம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. மீட்டிங் அறைக்குள் நுழையும்போது, அவர்கள் குழுவினர் தயாராக இருப்பார்கள். உங்களைக் காத்திருக்க வைக்கவே மாட்டார்கள்.

உங்கள் குழுத்தலைவர் முதலில் அறைக்குள் நுழைய வேண்டும். அடுத்தவர்கள் பதவி வரிசைப்படி தொடரவேண்டும். அதேபோல், சீனக் குழுவின் தலைவர் முதலில் உங்கள் தலைவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, மற்றவர்களை அவர்கள் பதவி வரிசைப்படி அறிமுகம் செய்வார்.

விசிட்டிங் கார்டு அவசியம்

சந்திக்கும்போது, ஒவ்வொருவரும் விசிட்டிங் கார்ட் கட்டாயம் தர வேண்டும். இவை, ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறு பக்கம் மான்டரின் (Mandarin) என்னும் வட்டாரச் சீன மொழியிலும் அச்சிட்டவையாக இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் கார்டைத் தரும்போது, மரியாதையோடு வாங்கிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கவனமாகப் படித்து, உங்கள் முன்பக்கப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். பர்சுக்குள் கார்டைத் திணிப்பதும், பின்புறப் பாக்கெட்டில் போடுவதும், அவர்களை அவமதிக்கும் செயல்கள்.

மரியாதை அவசியம்

சீனர்களுக்குப் பட்டம் பதவிகள் மீது பிரியமும், மரியாதையும் உண்டு. பேசும்போது, பெயரை மட்டும் சொல்லாமல், ``சேர்மேன்”. ``மேனேஜிங் டைரக்டர்”, “ஜெனரல் மேனேஜர்” என்று, பெயருக்கு முன்னால் பதவியையும் குறிப்பிட்டுத்தான் அழைக்கவேண்டும். சமீப காலமாக, ``மிஸ்டர்” என்று அழைப்பது பரவலாகி வருகிறது.

மொழி பெயர்ப்பாளர் முக்கியம்

குழுவின் எல்லோரும் பேசுவது சீனர்களுக்குப் பிடிக்காத சமாச்சாரம். தலைவர் பேச வேண்டும். மற்றவர்கள், அவர் கேட்கும்போது மட்டுமே பேச வேண்டும்.

பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வராது. ஆகவே, பேச்சு வார்த்தைகளின்போது ஒரு மொழிபெயர்ப்பாளர் எப்போதும் இருப்பார். பல மட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்துவது சீன வழக்கம். ஆகவே, பல சுற்றுப் பேச்சுகளுக்குத் தயாராக இருங்கள். முடிவுகள் எடுக்கத் தாமதம் காட்டுவார்கள். ஆகவே, நமக்குப் பொறுமை தேவை. பேச்சுவார்த்தை முடிந்தவுடன், அவர்கள் கடைசியாகத்தான் அறையைவிட்டு வெளியே வருவார்கள். நன்றி சொல்லிவிட்டு நீங்கள் வெளியே வருவதுதான் முறை.

விருந்தில் கடைப்பிடிக்க வேண்டியது

பேச்சு வார்த்தைகளுக்குப் போனால், இரவு விருந்துக்கு நிச்சயம் அழைப்பார்கள். இவை மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தொடங்கி, பல மணி நேரங்கள் தொடரும். மது வெள்ளமாகப் பாயும். பெரும்பாலான பெண்கள் குடிக்கமாட்டார்கள். அசைவப் பிரியர்களுக்கு வகை வகையான உணவுகள் கிடைக்கும்.

தண்ணீர்த் தொட்டியில் நீந்தும் மீன்களில் பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அது கறியாகக் கொஞ்ச நேரத்தில் உங்கள் தட்டில் இருக்கும். நான் ஷென்ஸென் என்னும் நகரத்துக்குப் போனபோது, சீனக் குழுவில் இருவர் பாம்புக் கறி சாப்பிட்டார்கள். இது சர்வ சாதாரணம். அதிர்ச்சி அடையாதீர்கள்.

சூப், நூடுல்ஸ், அரிசிச் சாதம், மீன், காய்கறிகள் சாலட் ஆகியவை பரிமாறப்படும். சூப் குடிக்கப் பீங்கான் ஸ்பூனையும், சாப்ஸ்டிக்ஸ் (Chopsticks) என்னும் மரம் / பிளாஸ்டிக் / தந்தத்தால் செய்யப்பட்ட குச்சிகளையும் பயன்படுத்துவார்கள். சாப்ஸ்டிக்ஸ் பயன்படுத்தத் தயக்கமாக இருந்தால், ஃபோர்க், ஸ்பூன் கேட்கலாம். தவறில்லை. சாப்ஸ்டிக்ஸைத் தப்பித் தவறிக் கீழே போட்டுவிடாதீர்கள். இது அபசகுனம்.

விருந்துக்கு அழைத்தவர் சாப்பிடத் தொடங்கிய பின்னரே, நீங்கள் தட்டில் கை வைக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியான பீங்கான் கிண்ணத்தில் அரிசிச் சாதம் பரிமாறுவார்கள். சாதம் தீரத் தீர நிறைப்பார்கள். ஆகவே கிண்ணத்தை ஒருபோதும் காலி செய்யாதீர்கள். கொஞ்சம் மிச்சம் வையுங்கள். காலிப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இதேபோல், சாப்பிடும்போது நாம் தண்ணீர் குடிப்பதுபோல் க்ரீன் டீ குடிப்பது சீனப் பழக்கம். டீ கோப்பையையும், காலியாகக் காலியாக, நிறைப்பார்கள். போதுமென்றால், கொஞ்சம் டீயைக் கோப்பையில் மிச்சம் வைத்துவிட்டு, உங்கள் முன்பிருந்து நகர்த்திவிடுங்கள். பழம் பரிமாறுகிறார்களா? டின்னர் முடிந்துவிட்டது என்று அர்த்தம். சாப்பிடும்போது தொழில் விஷயங்கள் பேசுவது கிடையாது.

சீனக் கலாச்சாரம், கலை, சுற்றுலாத் தலங்கள் ஆகியவை பற்றிப் பேசலாம். சீனர்கள் பேசும்போது, கைகளை ஆட்டிப் பேசமாட்டார்கள். இது பேச்சுக்கு இடையூறு என்று நினைப்பார்கள். மாறாக, இந்தியக் கருத்துப் பரிமாற்றத்தில் உடல்மொழிக்கு முக்கிய இடம் உண்டு. ஆகவே, சீனர்களோடு பேசும்போது உடல்மொழியைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ளுங்கள். உடலைத் தொடுவது, முதுகில் தட்டுவது, தோள்மேல் கை போடுவது ஆகியவை சீனர்கள் வெறுக்கும் சமாச்சாரங்கள். இவற்றைச் செய்யவே செய்யாதீர்கள்.

பரிசுப் பொருள்கள்

பரிசுகள் கொடுப்பது நம் சம்பிரதாயம். சீனாவில் விலை உயர்ந்த பரிசுகள் கொடுக்கக்கூடாது. பரிசுகளைத் தனி மனிதர்களுக்குத் தரக்கூடாது. கம்பெனிக்குத்தான் தரவேண்டும். மூங்கில் காலணிகள், கடிகாரங்கள், கைக்குட்டைகள், ஆகியவற்றைப் பரிசுகளாகத் தரவே கூடாது. பரிசுகளை வெள்ளை, நீலம், கறுப்பு ஆகிய நிறப் பேப்பர்களில் பேக்கிங் செய்யக்கூடாது. இந்தப் பரிசுகளையும், நிறங்களையும் அவர்கள் மரணத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். சிகப்பு நிறப் பேக்கிங் அதிர்ஷ்டமானது என்று நம்புகிறார்கள்.

சீனாவை ஓரளவு தெரிந்துகொண்டிருப்பீர் களே? இப்போதே புறப்படுங்கள் சீனாவுக்கு.

யீ லூ ஷுன் (சீன மொழி வாழ்த்து. தமிழில் - உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x