Published : 06 Oct 2019 11:52 AM
Last Updated : 06 Oct 2019 11:52 AM
புதுடெல்லி
இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழில்துறை மிகப்பெரிய கட்டமைப்புசார்ந்த சிக்கல்களைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக வாகனங்களை மக்கள் வாங்கும்விலைக்கு அளிப்பது பெரும் சாவாலாக இருக்கிறது என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்
ஆட்டோமொபைல் துறை கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விற்பனைக்குறைவு, ஜிஎஸ்டி வரி, சாலை வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் பயணிகள் கார், சரக்கு வாகனங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி, உற்பத்தியில்லா நாட்களாக அறிவித்து வருகின்றன.
ஆட்டோமொபைல் துறையை ஊக்கப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் ஆட்டமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழில்துறை மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அடுத்த 2020-ம் ஆண்டில் வாகனங்கள் அனைத்தும் இப்போதுள்ள பிஸ்-4 எஞ்சினில் இருந்து பிஎஸ்-6 எஞ்சினுக்கு மாற வேண்டியது இருக்கிறது.
இப்போதே கார்களின் விலை அதிகமாக இருக்கிறது என்று மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலையில், அடுத்த ஆண்டில் பிஎஸ்-6 எஞ்சின் வரும்போது விலை இன்னும் அதிகரிக்கும்.
மக்கள் வாங்கும் அளவுக்கு கார்களின் விலை இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. விலை அதிகரிக்கும் போது நுகர்வோர்களின் ஊதியத்தில் மாதத்தவணை அளவு அதிகரிக்கும்.
இதன் காரணமாக கார்களின் தேவை குறையும், மக்கள் கார்கள் வாங்காத நிலையில் அரசால் எவ்வளவு கார்களை வாங்கிட முடியும். ஆட்டமொபைல்துறைக்காக மத்திய அரசு ஏராளமான சலுகைகள் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக சாலைகளை சிறப்பாக அமைத்துள்ளது, இருப்பினும் ஆட்டமொபைல்துறையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன
சாலை வரியை பல மாநிலங்கள் உயர்த்திவிட்டதால், கார்களின் வாங்கும் போது விலை அதிகரித்துள்ளது. கார்களி்ன் விலை அதிகரிக்கும் போது, இயல்பாகவே மாதத்தவணையும் அதிகரிக்கும். மாதத்தவணை உயரும் அளவுக்கு மக்களின் ஊதியம் உயர்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. ஆதலால், இது மக்களின் வாங்கும் திறன் அடிப்படையிலான பிரச்சினையாக மாறிவிட்டது.
2020-ம் ஆண்டு கார்களின் விலை இன்னும் அதிகரிக்கும், அப்போது ஆட்டமொபைல் துறை இன்னும் மோசமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கார் தயாரிப்பாளர்களோ, அல்லது நிறுவனங்களோ தேவையை கட்டுப்படுத்த முடியாது, பொருளாதாரத்தில் தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கறது. விலை, தரம், உற்பத்தியை மட்டுமே எங்களால் கட்டுப்படுத்த முடியுமே தவிர தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது. இவை அனைத்தும் மக்களின் கைகளிலும் அரசிடமும் இருக்கிறது
இவ்வாறு கிர்லோஸ்கர் தெரிவித்தார்
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT