Published : 03 Jul 2015 10:11 AM
Last Updated : 03 Jul 2015 10:11 AM
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக 2 சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. பொதுமக்கள் சாதாரண மாக பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியைத் தாண்டி தற்போது மோஜோ என்னும் ஸ்போர்ட்ஸ் மாடல் வாகனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள் ளது.
நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் மஹிந்திரா மிகவும் பிரபலம். டிராக்டர், ஜீப், ஆட்டோ, எஸ்யுவி என இந்த நிறுவனத் தயாரிப்புகள் மக்களிடத்தில் மிகவும் பிரபலம். 2008-ம் ஆண்டு கைனடிக் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை வாங்கியதிலிருந்து இருசக்கர வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியது இந்நிறுவனம்.
இதன் பிறகு டிராக்டர்கள், கார்கள் என்ற தனது வழக்கமான வட்டத்திலிருந்து இரு சக்கர வாகனங்களை தயாரிக்கிற புதிய உலகினுள் மஹிந்திரா அடியெடுத்து வைத்தது. இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மத்திய பிரதேச மாநிலம் பீதம்பூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2014-ம் ஆண்டில் முழுவதுமாக அனைத்து பங்குகளையும் இந்நிறுவனம் வாங்கியதால், முழு வீச்சிலான தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
நகர்ப்பகுதிகளில் இந்நிறுவனத் தின் ஸ்கார்பியோ, சைலோ ரக எஸ்யுவி வாகனங்கள் மிகவும் பிரபலம்.
டிராக்டர்கள் மற்றும் பன்முக உபயோக டிரக்குகள் உற்பத்தி மூலம் இந்திய கிராமங்களில் பிரபலமான இந்த நிறுவனம் இப்போது இருசக்கர உற்பத்தி மூலமும் இந்திய வீடுகளைச் சென்றடைந்துள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய `செஞ்சுரா’ மோட்டார் சைக்கிள் குறைந்தபட்சம் 5 வருட உத்தரவாதத்துடன் வந்தது பலரை வியப்பிலாழ்த்தியது.
கியர் வண்டிகள் மட்டுமின்றி ரோடியோ, கஸ்டோ போன்ற ஸ்கூட்டர்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீட் அட்ஜெஸ்ட்மெண்ட், லைட்டிங் சென்ஸ் போன்றவற்றால் இவற்றை இரு பாலரும் பயன்படுத்தலாம் என்கிற ரீதியில் இவை சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் மஹிந்திரா மோஜோ என்னும் ஸ்போர்ட்ஸ் மாடல் வண்டி விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. பொதுவாக மஹிந்திரா நிறுவனத்துக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு.
சைலோ, ஸ்கார்பியோ, செஞ்சுரோ, நோவோ, கஸ்டோ என்று தனது மாடல்கள் அனைத்தின் பெயர்களையும் ‘ஓ’ வில் முடிப்பது தான் அந்த சென்டிமென்ட். அந்த சென்டிமென்ட்டின் அடிப்படையில் தான் ‘மோஜோ’வும் உருவாகி யுள்ளது.
மோஜோ 300 என்னும் அந்த ஸ்போர்ட்ஸ் மாடல் வண்டிக்கான அறிவிப்பு 2010-ம் ஆண்டிலேயே வெளியானது. இதையடுத்து மோஜோவின் முதல் தோற்ற அறி முகம் 2012-ம் ஆண்டில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் நடந்தது. இதையடுத்து வண்டியின் உடற் கட்டில் பல்வேறு மாற்றங்கள் செய் யப்பட்டு மீண்டும் 2014-ம் ஆண்டில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் அது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவுக்கு பிறகான ஒரு ஆண்டு இடைவெளியில் தொழில்நுட்பம் முதல் தோற்றம் வரை மீண்டும் மெருகேற்றப்பட்டு விற்பனைக்குத் தயாராகியுள்ளது மோஜோ. ஆரம்பத்தில் சில்வர் நிறத்தில் இருந்த பெட்ரோல் டாங்க் இப்போது கருப்பு நிறமாக்கப்பட்டுள்ளது. அந்த டாங்கின் மீது மஹிந்திரா என்ற வாசகமும், மேற்பகுதியில் 3டி வடிவில் மோஜோ என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஹேண்டில் பார், இரட்டை ஹெட்லைட், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் டெக்கோமீட்டர் என ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
‘இந்த வண்டி 31.3 bhp சக்தியை வெளிப்படுத்துகிற அளவுக்கு 300 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் இன்ஜினால் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பகலிலும் ஒளிரும் எல்இடி விளக்குகள், ஸ்போக் அலாய் சக்கரங்கள், ஸ்போர்ட்ஸ் வண்டிகளுக்கே உரிய வகையிலான மட்கார்டு என இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.
கவாசகி நிஞ்சா 300R, ஹோண்டா CBR, கேடிஎம் ட்யூக் உள்ளிட்ட வகையிலேயே இந்த வாகனமும் உருவாக்கப்பட்டுள்ள தால் அவற்றின் சந்தை மதிப்பு ஏற்பவே மோஜோவின் விலையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அந்த வகையில் அதன் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயமாகும்’ என மோஜோ பற்றி பல்வேறு தகவல் கள் பரவிய வண்ணம் உள்ளது.
மஹிந்திரா இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் மஹிந்திராவின் முன்னனி விற்பனை மையமான சென்னை 210 டிகிரி மோட்டார்ஸ் மையத்தின் மேலாளர் சரஸ்வதி கூறுகையில், “மஹிந்திரா நிறுவனம் 2 சக்கர வாகன விற்பனையில் நுழைந்து சில ஆண்டுகளே ஆகியுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை அவை பெற்றுள்ளன.
சமீபத்தில் வெளியான கஸ்டோ வுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. 3 மாடலில் வெளியாகும் அந்த ஸ்கூட்டர் பெருமளவில் விரும்பப்படுகிறது. செஞ்சுரோ பைக் மாதம் 80 முதல் 100 என்கிற அளவில் விற்பனையாகிறது. இந்த சூழலில் பலர் மோஜோ-வைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். ஜுலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதலில் மோஜோ அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்போர்ட்ஸ் மாடல் வண்டிகளில் மோஜோ நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.” என்றார்.
ஸ்போர்ட்ஸ் வாகன சந்தையில் மஹிந்திரா தயாரிப்புகளுக்கு சிறந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
manikandan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT