Published : 07 Jul 2015 10:39 AM
Last Updated : 07 Jul 2015 10:39 AM
கிரீஸில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடியை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்துடன் கிரீஸ் சார்ந்துள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நடவடிக்கைகள் அங்கு நிலவும் சூழல்களையும் அரசு கவனித்து வருகிறது. கிரீஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கம் இந்தியாவில் மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மத்திய நிதித்துறைச் செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்தார்.
கிரீஸில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைப் போக்க ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கட்டுப்பாட்டு நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று அந்நாட்டு பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியன் சந்தையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, அதன் போக்கு ஆகியவற்றை கவனித்து வருவதாக ராஜீவ் மெஹ்ரிஷி கூறினார்.
இப்போது ஏற்பட்டுள்ள சூழலின் வெளிப்பாடாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். அதாவது வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை பெடரல் ரிசர்வ் எடுக்கக் கூடும் என்றும் அதையும் இந்தியா கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கிரீஸில் கடந்த 5-ம் தேதி நடந்த பொது வாக்கெடுப்பில் 61 சதவீத மக்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்த நிபந்தனையை ஏற்க வேண்டாம் என வாக்களித்துள்ளனர். கிரீஸுக்கு கடன் வழங்க முன்வந்துள்ள நாடுகள் விதிக்கும் நிபந்தனையை ஏற்க வேண்டாம் என்று பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸையும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய சூழலில் ஐரோப்பிய யூனியன் கடன் பத்திரங்களுக்கான வட்டி உயரும் பட்சத்தில் அது இந்தியாவில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பணப் புழக்கத்தை அது பெருமளவு பாதிக்காது. இருப்பினும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எத்தகைய விரும்பத்தகாத சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில் ஆயத்தமாக இருப்பதாகவும் மெஹ்ரிஷி குறிப்பிட்டார்.
கிரீஸின் நடவடிக்கையால் ஐரோப்பிய யூனியனில் ஏற்படும் எத்தகைய மாற்றமும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறையினர் அஞ்சுகின்றனர். ஐரோப்பிய யூனியனில் ஏற்படும் பிரச்சினை எந்த அளவுக்கு பிற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இந்தியாவிலும் பாதிப்பு இருக்கும் என்று அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட் டுள்ள நெருக்கடி காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி இந்த ஆண்டும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று கவலைப்படுவதாகக் குறிப்பிட்ட அசோசேம், இந்திய ஏற்றுமதி வளர்ச்சியை இது வெகுவாக பாதிக்கும் என்று சுட்டிக் காட்டி யுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி 20 சதவீதம் சரிந்து 2,235 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்றுமதி 2,799 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதால் இங்கு வேலையிழப்பு சூழல் உருவாகும் என்றும் இதனால் ஊதியமில்லா விடுமுறையை (லே-ஆஃப்) அளிக்க வேண்டிய சூழலுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் தள்ளப்படும் என்று இந்திய ஏற்றுமதி சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சி. ரத்தன் எச்சரித்துள்ளார். இதனால் அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்போது இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் உள்ள ஏற்றுமதி ஆர்டர்களின் அடிப் படையில் பார்க்கும்போது வரும் மாதங்களிலும் ஏற்றுமதி சரியும் என்றே தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
பிற நாடுகளிடம் கையேந்து வதைவிட ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் இந்திய ரூபாயின் மாற்று மதிப்பைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்றும், இதனால் குறைந்த விலையில் பொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT