Published : 14 Jul 2015 10:10 AM
Last Updated : 14 Jul 2015 10:10 AM
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, டேப் ரெக்கார்டர், டிவி என்றால் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது சோனி, சான்யோ, ஜேவிஸி, ஹிட்டாச்சி, ஷார்ப் போன்றவைதான். அதுபோல வாட்ச் என்றால் ஸீக்கோ, ரீக்கோ, சிட்டிசன் வகையறாக்கள். கேமரா என்றால் யாஷிகா, கேனன், பியூஜி. அதாவது எல்லாமே ஜப்பான் தயாரிப்புகள். இன்று சாம்சங், எல்ஜி போன்ற தென் கொரிய நிறுவனங்கள் இந்த இடத்தைப் பெரும்பாலும் பிடித்துவிட்டனதான், ஆனாலும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஜப்பானுக்கு முக்கிய இடம் இருக்கிறது.
ஜப்பான் நாட்டிலிருந்து நமது இறக்குமதி ரூ.61,990 கோடிகள், ஏற்றுமதி ரூ. 32,835 கோடிகள். ஆமாம், ஏற்றுமதியைவிட சுமார் இரு மடங்கு இறக்குமதி செய்கிறோம். இந்திய இறால் மீன்களின் உலக மகா ரசிகர்கள் ஜப்பானியர்கள்தாம். நம் ஊர் மாம்பழங்களின் சுவையும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ரசாயனங்கள், தாதுப் பொருட்கள், சில வகை இயந்திரங்கள், ஜவுளி ஐட்டங்கள் ஆகியவை ஏற்றுமதியில் முக்கியமானவை.
நாம் ஜப்பானிலிருந்து இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், கப்பல்கள், படகுகள், இரும்பு, உருக்குப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் போன்ற பொருட்கள் வாங்குகிறோம்.
அண்மை காலங்களில், ஏற்றுமதி, இறக்குமதி தாண்டி, இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில், ஜப்பான் நான்காம் இடம் வகிக்கிறது. மொரீஷியஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. 1300 க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகின்றன. இத்தகைய முதலீடுகள், மருந்துகள், கார்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் மையம் கொண்டுள்ளன.
இந்த வருடம் மே மாதம், நம் வணிக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜப்பானிய அரசோடு புதிய வணிக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன்படி, வரும் ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள். இவை, புதிய நகரங்கள் (Smart Cities) உருவாக்குதல், கட்டுமான மேம்பாடு, போக்குவரத்து ஆகிய துறைகளில் இருக்கும்.
நமது பொருளாதார வளர்ச்சியில் தோள் கொடுக்கப்போகும் ஜப்பான் பற்றித் தெரிந்து கொள்வோமா?
பூகோள அமைப்பு
ஜப்பான் ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. 6852 தீவுகள் கொண்டது. ஹொக்கைடோ (Hokkaido), ஹான்ஷூ(Honshu), ஷிக்கோகு (Shikoku), கியூஷூ (Kyushu) ஆகிய தீவுகள் மட்டுமே பெரியவை. 426 தீவுகள் மட்டுமே மக்கள் வாழத் தகுதியானவை. மற்ற 6422 தீவுகளும் குட்டி சைஸ். சீனா, தென் கொரியா, வட கொரியா, ரஷியா ஆகியவை அண்டை நாடுகள். சீனாவிடமிருந்து சீனக் கடலும், வட கொரியா, ரஷிய நாடுகளிலிருந்து ஜப்பான் கடலும், ஜப்பானைப் பிரிக்கின்றன.
ஜப்பானின் நிலப் பரப்பளவு 3,77,923 சதுரக் கிலோமீட்டர்கள். அதாவது இந்தியாவின் பரப்பில் ஒன்பதில் ஒரு பங்கு. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்தாலே, ஜப்பானைவிடப் பெரிதாகிவிடும். பரப்பில் 73 சதவிகிதம் மலைகள். பயன்படும் பரப்பு மீதம் 27 சதவிகிதமே.
மக்கள் தொகை சுமார் 13 கோடி. தமிழ்நாடு, ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையைவிடக் குறைவு.
சுருக்க வரலாறு
கிமு 30,000 ஆண்டுகளிலேயே இங்கு நாகரிகம் தொடங்கியதாக அகழ்வு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதலே, சீனாவுடன். வியாபாரத் தொடர்புகள், கலாச்சாரப் பரிமாறல்கள் ஆகியவை தொடங்கின. அரசர் ஆட்சியும் வந்தது. கிபி 578 க்குப் பின், 200 ஆண்டுகள், பீங்கான் பொருட்கள், தேயிலை, பட்டு ஆகியவற்றை ஆதாரமாக வைத்து, அயல்நாட்டு வாணிபத்தை பெருமளவில் வளர்த்தது.
300 ஆண்டுகள், சமுராய்கள் என்னும் ராணுவ ஆட்சி. அரசர்களை இவர்கள் அலங்கார பொம்மைகளாக்கினார்கள். கிபி 1543 இல் போர்ச்சுக்கீசியர்கள் ஜப்பானுக்கு வந்தார்கள். அடுத்து டச்சு வியாபாரிகள். வியாபாரத்தோடு, இவர்கள் வருகை அறிவியல், கல்வி முன்னேற்றங்களைத் துரிதப்படுத்தியது.
1868 முதல் 1912 வரை மெய்ஜி (Meiji) மன்னர் ஆட்சி செய்தார். இந்த நாட்கள் ஜப்பானின் பொற்காலம். இரும்பு, உருக்கு ஆலைகள், கட்டமைப்பு வசதிகள், உலகளாவிய அறிவுத் தேடல், தொழிற்சாலைகளில் உன்னதத் தொழில் நுட்பங்கள் என வளர்ச்சி சிகரம் தொட்டது. இந்த வளர்ச்சியால், முதல் உலகப் போர் முடிந்ததும், குறைந்த விலையில், நிறைந்த தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஜப்பான் பொருளாதார வல்லரசானது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியோடும் இத்தாலியோடும் கூட்டணி அமைத்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளை எதிர்கொண்டது.
1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு ஜப்பானிய நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஜப்பானில் ஏகப்பட்ட சேதங்கள். பிறகு அமெரிக்க உதவியோடு சேதங்களிலிருந்து மீண்டு, காலடி எடுத்துவைக்கத் தொடங்கிய ஜப்பான், 1960 முதல் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டது. ஜப்பானிய சோனி, நேஷனல், பானசோனிக், டொயோட்டா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களை உலகச் சந்தையில் ஓட ஓட விரட்டினார்கள்.
1989 இல் வந்தது சரிவு. தென் கொரியப் போட்டியாளர்கள், உள்நாட்டு அரசியல் மாற்றங்கள், தெளிவில்லாப் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றால், ஜப்பான் வளர்ச்சி தொய்வடைந்தது. மறுபடியும் தலை தூக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
ஆட்சி முறை
மக்களாட்சி நடக்கிறது. ஆனால், நாட்டுத் தலைவர் பேரரசர். மக்கள் அரசரைப் பெரிதும் மதிக்கிறார்கள்.
நாணயம்
யென் (Yen). இரண்டு யென்கள் ஒரு ரூபாய்க்கு சமம்.
விசிட்
விசிட் அடிக்கப் பருவநிலைப்படித் தவிர்க்கவேண்டிய மாதங்கள் ஜூன், செப்டம்பர். ஜூன் மாதம் மழைக்காலம். செப்டம்பரில் புயல்கள் அடிக்கும். ஆகஸ்ட் மாதம் வெயில் அதிகம். ஆனால், அக்னி நட்சத்திரங்களுக்குப் பழகிய நமக்கு இது ஜூஜூபி.
பிசினஸ் டிப்ஸ்
ஜப்பானியர்கள் நேரம் தவறாதவர்கள். தாமதமாக வருவதை அவமதிப்பாக நினைப் பார்கள். சந்திப்புகளுக்குக் கோட் சூட் அணிவது நல்லது. குறைந்த பட்சம் டையாவது கட்டவேண்டும். ஜீன்ஸ், டி ஷர்ட் வேண்டவே வேண்டாம்.
சந்திப்பின்போது விசிட்டிங் கார்ட் தர வேண்டும். மரியாதையோடு தலையைக் குனிந்து பவ்யமாகக் கார்டைத் தருவார்கள். நீங்களும் அப்படியே செய்தால் மகிழ்ச்சி அடைவார்கள். எத்தனை தூரம் குனிகிறோமோ, அத்தனை அளவு மரியாதை தருகிறோம் என்று அர்த்தம். அவர்கள் குனியும் அளவுக்கே நீங்களும் குனிவது நல்லது. குனியும்போது, உங்கள் கண்களை மெள்ளக் கீழே இறக்குங்கள். உள்ளங்கைகள் தொடையின்மேல் ஒட்டியபடி இருக்கவேண்டும்.
ஆங்கிலம் தெரிந்தாலும், மொழி பெயர்ப்பாளர்களை அழைத்துவருவார்கள்.
உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போகா விட்டால், ``நோ’’ என்று சொல்லமாட்டார்கள். ``உங்கள் கருத்துக்களைப் பரிசீலிக்கிறோம்’’ என்று சொல்வது ``நோ’’தான்.
வயதுக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்தவர் வயதை விசாரிப்பது நாகரிகமற்றதாகப் பல்வேறு நாடுகளில் கருதப்படுகிறது. ஜப்பானில் இந்தக் கேள்வி சர்வ சாதாரணம். உங்களுக்கு அவர்களைவிட வயது அதிகமென்றால், மரியாதை தராமல் போய்விடக்கூடாதே என்னும் பயம்தான் இதற்குக் காரணம்.
விரல்களைச் சுட்டிக் காட்டிப் பேசக்கூடாது. எதிரே இருப்பவர் பேசுவது நமக்குச் சம்மதமாக இருந்தால், நாம் சாதாரணமாக “ஓகே’ என்று சைகை காட்டு வோம்.
இந்த சைகையை ஜப்பானில் பயன்படுத் தாதீர்கள். அவர்கள் நாட்டில், ``பணம்” என்று அர்த்தம். கோபப் பட்டாலும், ஜப்பானியர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டவே மாட்டார்கள். முகத்தில் எப்போதும் புன்முறுவல் இருக்கும். உங்கள் உடல்மொழி, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டுதல் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
தொட்டுப் பேசுவது, முதுகில் தட்டுவது ஆகியவை அவர்களுக்குப் பிடிக்காதவை. பெண்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். பெண்களைத் தொட்டுப் பேசவே கூடாது.
பரிசுகள் தருதல்
தொழில் தொடர்புகளுக்குப் பரிசுகள் கொடுப்பதும், வாங்குவதும் ஏற்கப்பட்ட, எதிர்பார்க்கப்படும் சம்பிரதாயம். விஸ்கி, உயர்ரக மதுபானங்கள், ஆகியவை மதிக்கப்படும் பரிசுகள். அமெரிக்க / ஐரோப்பிய பிராண்ட் பரிசுகளுக்கு தனி மவுசே உண்டு. பரிசுகளை அழகாகப் பேக் செய்தே தரவேண்டும். வெள்ளை, கறுப்புப் பேக்கிங் பேப்பர்கள் கூடவே கூடாது. இவை ஜப்பானியர் மரணத்தோடு சம்பந்தப்படுத்தும் நிறங்கள்.
சிலர் உங்களை வீட்டுக்கு அழைக்கலாம். அப்படி அழைக்கப்பட்டால், மலர்க் கொத்துகள், கேக், சாக்லெட்கள் எடுத்துக்கொண்டு போவது முறை.
பரிசுகளை இரட்டைப் படை எண்ணிக்கையில் தரக்கூடாது. குறிப்பாக, 4 என்னும் எண்ணைத் தவிர்க்கவேண்டும். உதாரணமாக கேக் கொண்டுபோனால், 1, 3, 5, 7, 9 என்னும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்துப்போகவேண்டும்.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT