Published : 10 Jul 2015 10:08 AM
Last Updated : 10 Jul 2015 10:08 AM
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள புதிய பன்னாட்டு வங்கியான பிரிக்ஸ் வங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படும் என்று அதன் தலைவர் கே.வி. காமத் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து பிரிக்ஸ் வங்கியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வங்கி சீனாவின் ஷாங்காய் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த வங்கியின் தலைவராக முன்னணி வங்கியாளர் கே.வி. காமத்தை மத்திய அரசு நியமித்தது. அவர் சமீபத்தில் இந்த வங்கியின் முதலாவது தலைவராக பொறுப்பேற்றார்.
வங்கி தனது முதலாவது கடன் தொகையை அடுத்த ஆண்டு ஏப்ரலில் அளிக்கும் என்று ரஷியாவில் உள்ள டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காமத் தெரிவித்தார்.
வங்கி செயல்பாடுகளைத் தொடங்குவதில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் ஜூலை 7-ம் தேதியுடன் நிறைவடைந்தன. வங்கி செயல்பாட்டைத் தொடங்கலாம் என்று ரஷியாவும் தெரிவித்துள்ளது.
``இப்போதைக்கு என்னிடம் ஒரு வெள்ளைத் தாள் மட்டுமே உள்ளது. இதில் நான்கு துணைத் தலைவர்களின் பெயர்கள்தான் உள்ளன. அனைவரையுமே இனிதான் நியமிக்க வேண்டும்,’’ என்று காமத் கூறினார். முதல் மூன்று மாதங்களுக்கு இந்த வங்கியானது உறுப்பு நாடுகளின் உள்ளூர் மேம்பாட்டு வங்கிகளின் உதவியைக் கோரும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் நாடுகளில் உள்ள வங்கியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று பேர் பிரிக்ஸ் வங்கியில் சேர்க்கப்படுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT