Published : 23 May 2014 08:00 AM
Last Updated : 23 May 2014 08:00 AM
நம் உறவு வட்டம் மிகப் பெரியது. ரத்த சொந்தங்கள், மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ரெயில் சிநேகிதங்கள், வழிபாட்டுக் குழு, நம் ஹீரோவின் ரசிகர்கள், பேஸ்புக் தொடர்புகள் என்று வகை வகையான உறவுகள்.
இவர்கள் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். மனைவியிடம் எதையும் மறைக்கமாட்டோம். (நான் அப்படி. நீங்கள் எப்படி?)
பெற்றோர், உடன் பிறந்தோரிடம் அந்தரங்கங்கள் தவிர்த்துப் பிற விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். இப்படி, ஒவ்வொரு வகை உறவுக்கும் நாம் வேலிகள் போட்டுக்கொள்வோம். உதாரணமாக, உயிர் நண்பன் தோளில் கை போடலாம்: அதுவே எத்தனைதான் நெருங்கிப் பழகினாலும், அலுவலக உயர் அதிகாரி தோளில் கை போட முடியுமா? ஒரே ஒரு தடவை போடலாம். அத்தோடு வேலை போயிந்தி!
சொந்தங்கள், நண்பர்கள், பழக்கமானவர்கள் என்று உறவுகளை மூன்று வகையாகப் பிரிப்பதுபோல், நம்மோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுபவர்களையும், Negotiation நிபுணர்கள் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். நாம் டீல்களை வெற்றிகரமாக முடிக்கவேண்டுமானால், கட்டாயம் இந்த மூன்று பிரிவுகள் பற்றி நமக்குத் தெரியவேண்டும். யாரோடு எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது, எப்படிப் பேசலாம், எப்படிப் பேசக்கூடாது என்று நாம் தெளிவாக இருக்கவேண்டும்.
அந்த மூன்று பிரிவுகள் இதோ:
#இருவரில், ஒருவருக்கு மற்றவர் உதவி தேவைப்படும் உறவுகள் (Dependent)
#இருவருக்கும் அடுத்தவர் உதவி தேவைப்படும் உறவுகள் (Inter-dependent)
#இருவரில் ஒருவருக்குமே மற்றவர் உதவி தேவைப்படாத உறவுகள் (Independent)
#இருவரில், ஒருவருக்கு மற்றவர் உதவி தேவைப்படும் உறவுகள்
கெமிக்கல் தொழிற்சாலையின் சூப்பர்வைசர் ஜார்ஜ். பாய்லர்கள் பராமரிப்பது அவர் கடமை. பாய்லர்கள் பழுதடைந்தால், உற்பத்தி பாதிக்கப்படும். ஜார்ஜ் பராமரிப்பை மிக வேகமாக, கன கச்சிதமாகச் செய்வார். உற்பத்தி சீராக நடக்கும். இதனால், பராமரிப்பு மேனேஜர் மட்டுமல்ல, உற்பத்தி மேனேஜர், ஏன் எம்.டி. வரை அவர்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். அவரை ஏராளமான வெளிக் கம்பெனிகள் அதிகச் சம்பளம் தருவதாகக் கூப்பிடுகிறார்கள். வேலை வேண்டும் என்கிற ஜார்ஜின் தேவையைவிட, அவர் வேண்டும் என்கிற கம்பெனியின் தேவை அதிகமானது.
ஜார்ஜின் கீழ் சிவா மெக்கானிக் வேலை செய்கிறார். தனியாகப் பாய்லர் பராமரிப்பு செய்யத் தெரியாது. அனைத்துக்கும், அவருக்கு ஜார்ஜின் உதவியும், வழிகாட்டலும் வேண்டும். கம்பெனியின் தேவையைவிட வேலை வேண்டும் என்னும் சிவாவின் தேவை அதிகம்.
உயர் அதிகாரிகளையும், கீழே பணியாற்றும் சிவா போன்றோரையும் எப்படிக் கையாளவேண்டும்? ஜார்ஜ் சொல்லித்தரும் அற்புதமான அணுகுமுறை இதுதான்:
நம் திறமை மற்றவர்களுக்குத் தேவை. அவர்கள் பணபலம் கொண்ட கம்பெனி, அல்லது உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள்.
#நேரம் தவறாமல் வேலைக்கு வரவேண்டும்.
#உயர் அதிகாரிகளுக்கு மதிப்பும், மரியாதையும் தரவேண்டும்.
#சம்பளம் கூட்டுகிறீர்களா? இல்லை என்றால் பக்கத்துக் கம்பெனிக்குப் போய்விடுவேன்” என்று மிரட்டுவதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது.
#அடக்கமாக நடந்துகொள்ளவேண்டும். நமக்குத் தலைக்கனம் இருப்பதாக யாரும் நினைத்துவிடவே கூடாது.
#உயர் அதிகாரிகளை மாதம் ஒரு முறையாவது தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும். வேலையிலும், வாழ்க்கையிலும் முன்னேற அறிவுரைகள் கேட்கவேண்டும். அவற்றை எப்படிக் கடைப்பிடிக்கிறோம் என்று அவர்களிடம் சொல்லவேண்டும்.
நம் கீழ் வேலை பார்ப்பவர்கள், அவர்களுக்கு நம் ஆதரவு தேவை.
#பதவியில் குறைந்தவராக இருப்பவர்களையும் மனித நேயத்தோடு நடத்தவேண்டும்.
#அவர்களிடம் இனிமையாகப் பழகவேண்டும். அதே சமயம், ரொம்பவும் நெருங்கிவிடக்கூடாது.
#தட்டிக்கொடுக்கவேண்டிய சமயங்களில் தட்டிக் கொடுத்து, கண்டிக்கவேண்டிய நேரங்களில் கண்டிக்கவேண்டும்.
#ஊழியர்கள் தம் திறமைகளை வளர்க்கும் வழிகளைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இருவருக்கும் அடுத்தவர் உதவி தேவைப்படும் உறவுகள்
இந்த உறவுகளின் கருத்துப் பரிமாற்றங்களில் தடங்கலோ, தொய்வோ வரவே கூடாது.
சங்கர், கீதா இருவரும் இஞ்சினீயரிங் கல்லூரியிலே காதல் செய்து, திருமணம் செய்துகொண்டவர்கள். சங்கருக்கு சோழிங்கநல்லூர் இன்ஃபோஸிஸ் கம்பெனியில் வேலை: கீதாவுக்கு டி.சி.எஸ் சிறுசேரியில். திருமணம் முடிந்து மூன்று வருடங்களாகிவிட்டன.
இருவரும் காலை ஏழரை மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டால், வீடு திரும்பும்போது இரவு மணி எட்டு. கை நிறையச் சம்பளம், உடல் நிறைய அசதி, மனம் நிறைய டென்ஷன் குழந்தை வேண்டும் என்று சங்கருக்கு அளவு கடந்த ஆசை.
இரண்டு வருடங்களில் பெரிய அபார்ட்மென்ட் வாங்கவேண்டும், குழந்தை அப்புறம்தான் என்பது கீதாவின் தீர்மானம். இருவரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசக்கூட நேரமில்லை. குடும்ப நண்பர் ராஜரத்தினம் இரண்டு பேரையும் கொடைக்கானல் போகச் சொன்னார். ஆபீஸ் டென்ஷன் இல்லாத சூழ்நிலை. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொண்டார்கள், மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள். சந்தோஷம் தொடர்கிறது.
சோமு சென்னையில் ஒரு கார் கம்பெனியில் பர்ச்சேஸ் மேனேஜர். ஒரு குறிப்பிட்ட உதிரி பாகத்துக்கு சென்னை கிண்டியில் இருக்கும் ஜோதி எஞ்சினீயரிங், பெங்களூருவின் ஸிக்மா இண்டஸ்ட்ரீஸ் இருவரும்தான் சப்ளையர்கள். வாங்கும் விலையை மூன்று சதவிகிதம் குறைத்தேயாகவேண்டும் என்று சோமுவின் டைரக்டர் சொல்லிவிட்டார்.
ஜோதி, ஸிக்மா ஆகிய இரு கம்பெனிகளுக்கும் சோமு மிக முக்கிய கஸ்டமர்: சோமுவுக்கும் இவர்கள் இருவரையும் விட்டால், வேறு சப்ளையர்கள் இல்லை.
பிஸினஸ் கன்சல்ட்டன்ஸி நடத்தி வரும் நண்பன் விவேக்கிடம் சோமு ஆலோசனை கேட்டார்.
விவேக் சொன்ன ஆலோசனை - ஒவ்வொருவர் ஆதரவு அடுத்தவருக்குத் தேவைப்படுகிறது, நீங்கள் பேச்சு வார்த்தைகள் நடத்திச் சுமுகமான முடிவு காண்பதுதான் ஒரே வழி.
இருவரில் ஒருவருக்குமே மற்றவர் உதவி தேவைப்படாத உறவுகள்
சூப்பர் மார்க்கெட்டில் ஒரு இளைஞனையும், அவன் மனைவியையும் அடிக்கடி சந்திக் கிறீர்கள். ஹலோ கூட இருவரும் சொல்லிக்கொண்டதில்லை.
வேகமான வாழ்க்கையில், நமக்குச் சம்பிரதாயக் குசல விசாரிப்புகளுக்குகூட நேரமில்லை.
ஆனால், சுயநல நோக்கத்தில் பார்த்தால்கூட, உறவு வட்டத்தைப் பெருக்கிக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும், சந்தோஷத்தைப் பெருக்கும் என்று மனநல அறிஞர்கள் சொல்கிறார்கள். அத்தோடு இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சி சொல்லட்டுமா?
முத்துக்குமார் பிரபல கம்பெனியில் ரீஜனல் மேனேஜர். திருநெல்வேலியிலிருந்து ரெயிலில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். ஏசி கம்பார்ட்மென்ட் அப்பர் பெர்த். மூட்டு வலிக்காரரான அவருக்கு மேலே ஏறுவது சிரமம். கீழ் பெர்த்தில் இருந்த இளைஞனிடம் பெர்த்களை மாற்றிக்கொள்ளலாமா என்று கேட்டார். அவன் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டான்.
சில நாட்களுக்குப் பின்......சேல்ஸ் ஆபீசர் இன்டர்வியூ. முத்துக்குமாரும், கம்பெனி பெர்சனல் ஆபீசரும் நேர்முகப் பேட்டிகளைத் தொடங்கினார்கள். வந்தான் ஒரு இளைஞன். உள்ளே நுழைந்த அவனுக்குப் பேச்சே வரவில்லை. அவன் – முத்துக்குமாருக்குக் கீழ் பெர்த் தர மறுத்தவன்.
இன்றைய காலகட்டத்தில், யார் உதவி யாருக்குத் தெரியும் என்று கணிக்கவே முடியாத நிலை. ஆகவே, எல்லா உறவுகளையும் மதிப்போம், வளர்ப்போம். அது சரி, அந்த இளைஞனின் இன்டர்வியூ எப்படி நடந்தது? முத்துக்குமார் அவனுக்கு வேலை கொடுத்தாரா? சஸ்பென்ஸ்!
எஸ்.எல்.வி. மூர்த்தி- slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT