Last Updated : 24 Jun, 2015 10:05 AM

 

Published : 24 Jun 2015 10:05 AM
Last Updated : 24 Jun 2015 10:05 AM

மஹிந்திரா நிறுவனத்தின் ஜீட்டோ அறிமுகம்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இலகு ரக வர்த்தக வாகனமான ஜீட்டோவை நேற்று அறிமுகப்படுத்தியது.

முற்றிலும் புதிதாக உருவாக் கப்பட்ட ஆலையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை உருவாக்கம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 300 கோடி செலவிடப்பட்டதாக நிறுவனத்தின் செயல் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.

இந்தப் பிரிவில் 8 மாடல்களில் வாகனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 2.32 லட்சம் முதல் ரூ. 2.79 லட்சம் வரையாகும்.

மஹிந்திரா நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 7 தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அதில் 370 ஏக்கர் பரப்பளவிலான ஜகிராபாத் ஆலை மிகவும் பழமையானது மட்டுமல்ல, மிகவும் பெரிய ஆலையாகும்.

இந்த ஆலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் புதிய ரக வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

மருந்துப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், பேக்கரி பொருள்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், எப்எம்சிஜி பொருள், சிலிண்டர்கள், மினரல் குடிநீர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வசதியாக 3 வெவ்வேறு அளவுகளில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சரக்கு களை எடுத்துச் செல்ல வசதியாக 5.5 அடி, 6 அடி மற்றும் 6.5 அடி நீளமான சரக்கு ஏற்றும் பகுதியைக் கொண்டவையாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

எஸ், எல், எக்ஸ் என மூன்று பிரிவுகளில் 8 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் டீசலில் இயங்கும் வகையில் தயாரிக் கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சிஎன்ஜி, எல்என்ஜி, பெட்ரோல் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையின் அடிப்படையில் பயணிகளுக்கான வாகனத்தை அறிமுகப்படுத்தும் யோசனையும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய அறிமுகம் மூலம் 5 சதவீதம் முதல் 7 சதவீத சந்தை வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x