Last Updated : 26 Jun, 2015 10:15 AM

 

Published : 26 Jun 2015 10:15 AM
Last Updated : 26 Jun 2015 10:15 AM

டீசல் கார்களுக்கு மவுசு குறைகிறதா?

டீசல் கார்களின் விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக சரிந்து வருகிறது. புது வாடிக்கை யாளர்கள் பலர் பெட்ரோல் கார்களையே விரும்புகின்றனர். இதற்குப் பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

பெட்ரோலுடன் ஒப்பிடும் போது டீசலின் விலை குறைவு என்ற நிலை மாறி வருகிறது. பெட்ரோலுடன் ஒப்பிடும் போது டீசலின் விலை குறைவு என்ற காரணத்தால் டீசல் கார் வாங்கியவர்கள் ஏராளம்.

பெட்ரோல் விற்கிற விலைக்கும் டீசலின் விலைக்கும் பெரியளவில் தற்போது வித்தியாசம் இல்லை. ரூ.10 அல்லது ரூ.15 அளவுக் குத்தான் உள்ளது.

இதற்கிடையே டீசல் கார்களால் அதிகளவு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறிய டெல்லி பசுமைத் தீர்ப்பாயம், 10 வருட பழைய டீசல் கார்களுக்குத் தடை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித் தது. இதையடுத்து டெல்லியில் டீசல் கார்களின் விற்பனை வெகுவாக குறைய ஆரம்பித் துள்ளது.

இதுமட்டுமன்றி, தற்போதைய மத்திய அரசு, டீசல் மீதான மானியத்தையும் குறைத்தது. இதன் விளைவாக பெட்ரோல் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2015 மே மாதம் வரை 67 சதவீதம் அளவுக்கு பெட்ரோல் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

சென்ற ஆண்டில் சுமார் 47 சதவீதம் அளவுக்கு விற்பனை ஆன டீசல் கார்கள் இந்தாண்டில் 33% சதவீதம் அளவுக்குத்தான் விற்பனை ஆகியுள்ளது. இது வருங்காலங்களில் இன்னும் குறையும் என்று கூறப்படுகிறது. சாலையில் வலம்வந்த 10 கார்களில் 6 கார்கள் டீசலில் இயங்குபவையாக இருந்தது ஒரு காலம். ஆனால் இப்போதோ 10-ல் 3 தான் டீசல் கார்கள்.

இதனால் ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன், நிசான், ஹோண்டா உள்ளிட்ட பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் கார் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. கடந்த காலங்களில் டீசல் கார் விற்பனை படிப்படியாக குறைந்து வருவதே இதற்குக் காரணமாகும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது டீசல் கார்களின் தயாரிப்பு ஒரு காலத்தில் முற்றிலுமாக நின்று விடும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை யைச் சேர்ந்த தனியார் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் ஆலோ சகராக பணியாற்றி வரும் எம்.ஏழுமலை கூறியதாவது:

பெட்ரோல் கார்களுக்கு இணையாக டீசல் கார்களும் விற்பனையான காலம் வெகுவாக மாற ஆரம்பித்தது 2000-ங்களின் மத்தியில்தான். ஏனென்றால் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தபோது, டீசல் விலையும் கூடவே சேர்ந்து உயர ஆரம்பித்தது. அதுவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த மாற்றம் பெரியளவில் எதிரொலித்துள்ளது.

2013-ம் ஆண்டில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையேயான வித்தியாசம் ரூ.19.91 ஆக இருந்தது. அடுத்து வந்த 2014-ம் ஆண்டில் அந்த வித்தியாசம் 18.05 ஆகவும், அதற்கடுத்து ரூ 11 ஆகவும் நெருங்கியது. இப்போதோ பெட்ரோலும் டீசலுக்குமான வித்தியாசம் ரூ. 16 என்கிற அளவுக்கு வந்து நின்றுள்ளது. இதன் மூலம் இன்றைக்கு பெட்ரோல் விலைக்கும் டீசல் விலைக்கும் பெரியளவில் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதை சர்வ சாதாரணமாக புரிந்து கொள்ள முடியும்.

டீசல் கார்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது உண்மைதான். அதேபோல டீசல் கார்களின் ஆயுளும் குறைவுதான் என்பது நிதர்சனமான உண்மை.

இதை பல ஆண்டுகளாக கார் வைத்திருந்தவர்களிடம் கேட்டால் தெரியும். இந்த சூழலில்தான் டெல்லி பசுமைத் தீர்ப்பாயமும் டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி 8 சதவீதம், ஃபோர்ட் 22 சதவீதம் ஹோண்டா 17 சதவீதம் என பல நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளன.

இதை கணக்கில் கொண்டு குர்கானில் இயங்கிய மாருதி நிறுவனத்தின் டீசல் கார் உற்பத்தி பிரிவை மூடுவது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க விரும்பும் பலர் முன்பெல்லாம் டீசல் கார்களைத்தான் தேடித்தேடி வாங்கினார்கள். ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை. இதனால் பத்தாண்டுகளுக்கு முன்பு டீசல் கார்களை வாங்கிய பலர் அதனை விற்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அப்படியே அவற்றை விற்பனை செய்தாலும், வாங்கிய விலையைவிட மிகவும் குறை வாகத்தான் விற்க முடிகிறது.

எனினும் ஸ்விப்ட், டிசையர், ரிட்ஸ் என பல டீசல் கார்கள் நல்ல அளவில் விற்பனையாகிக் கொண்டுள்ளன.

இதுமட்டுமன்றி மாருதி எஸ் க்ராஸ், செவர்லே ட்ரெயில்ப்லேசர், மிட்சுஷுபி அவுட்லேண்டர், ஹூண்டாய் க்ரிடா, மஹிந்திரா எஸ் 101 மைக்ரோ எஸ்யுவி உள்ளிட்ட ஏராளமான டீசல் கார்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. டீசல் கார் விற்பனை சரிவை சந்தித்த போதிலும் நிறுவனங்கள் இப்படி, புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் உள்ளன. எனவே, டீசல் கார்களுக்கு சிறப்பான காலம் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

டீசல் கார்களின் விற்பனை சமீப சரிவை சந்தித்தாலும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் கார்களை தயாரிப்பதை நிறுத்தவில்லை.

ஏற்ற இறக்கங்களை கொண்ட சந்தையில் டீசல் கார்களுக்கான காலம் இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நிறுவனங்கள் அந்த கார்களை தயாரிக்கின்றன என்பது ஊர்ஜிதமாகிறது.

manikandan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x