Published : 14 Jun 2015 12:34 PM
Last Updated : 14 Jun 2015 12:34 PM
உற்பத்தி நகரமான கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மின் வெட்டு உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகள் இருந்தன. இதன் காரணமாக பலர் தொழிலை விட்டுவிட்டு கடன் பிரச்சி னையை சமாளிக்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். தொழில் நகரமான கோவை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள தென் இந்திய உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் (சைமா-SIEMA) வி.லஷ்மி நாராயணசாமியை சந்தித்தோம். அந்த உரையாடலில் இருந்து...
இவர் சுகுணா இண்டஸ்ட்ரீஸ் நிறு வனத்தின் தலைவரும் கூட. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பகுதி நேர எம்பிஏ படித்தவர். 1977-ம் ஆண்டில் இருந்து தொழிலில் இருப்பவர்.
தொடக்கத்தில் வர்த்தக நிறுவனமாக இருந்த உங்கள் நிறுவனம் பிறகு எப்படி உற்பத்தி நிறுவனமாக மாறியது?
மோட்டார் தயாரிக்க 1958-ம் ஆண்டு சுகுணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை எனது மாமா தொடங்கினார். ஆரம்பத்தில் சென்னையில் வர்த்தக நிறுவனத்தை நடத்திவந்தார். மோட்டர் மற்றும் பம்புகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்றார். சில நிறுவனங்கள் கோவையில் பம்ப் தயாரித்து வந்தார்கள். ஆனால் மோட்டார்கள் இறக்குமதி செய்து விற்றார்கள்.
மோட்டார் தயாரிக்க தனியாக நிறு வனம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினோம். எங்களுடைய பொருட் களை டீலர்கள் மூலமாக விற்க ஆரம் பித்தோம். எல்லா வேலையையும் ஒருவரே செய்ய முடியாது, நான்கு கை இணைந்தால்தான் சத்தம் வரும் என்று எங்களுடைய சேர்மன் சொல்லுவார்.
1980-ம் ஆண்டுகளில் தொழில் புரிவதற்கும் இப்போது தொழில் புரிவதற்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அப்போதும் சவால்கள் இருந்தன. இப்போதும் சவால்கள் உள்ளன. ஆனால் வெவ்வேறு வகையில் இருக்கிறது. அப்போது மூலப்பொருட்கள் மற்றும் தகுதி யான நபர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இருந்தது. ஆனால் பொருட்களுக்கு தேவை இருந்தது எளிதாக சந்தைப்படுத்த முடிந்தது. இப்போது தொழில்நுட்ப மேம் பாட்டால் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தேவை அதிகரிக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு மின் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்தது. இதனால் பல தொழில்கள் நசிந்தன. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை. ஓரளவுக்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் காற்றாலை மின்சாரம் வந்துவிடும். அதனால் இந்த வருடம் மின்வெட்டு வரும் என்று சொல்ல முடியாது.
மின்வெட்டு காரணமாக தொழிலை விட்டு சென்றவர்கள் மீண்டும் தொழிலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா?
அது சம்பந்தப்பட்ட நபர்களை பொறுத் தது. இப்போது அவர்கள் செய்துவரும் தொழிலில்/வேலையில் பிரச்சினை இருந்தால் மட்டுமே வருவார்கள். தவிர சிலர் டிரைவர் வேலைக்கு சென்று விட்டதால் அங்கு கிடைக்கும் சம்பளம் தொழிலில் கிடைக்குமா என்று அவர்கள் யோசிக்கலாம்.
மின்சார பிரச்சினை இல்லை என்றால் வேறு எதனால் தொழிலுக்கு பிரச்சினை இருப்பதாக நினைக்கிறீர்கள்?
ஏற்கெனவே சொன்னது போல தேவை குறைவாக இருக்கிறது.
மத்திய அரசு மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்திருக்கிறதே. இது தேவையை உயர்த்தாதா?
இப்போதுதான் அறிவிப்புகள் வெளி யாகி இருக்கிறது. அறிவிப்புகள் செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகும். ஒரே நாளில் எதும் மாறிவிடாதே. சில வருடங்கள் ஆகலாம். சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் முடிவெடுத்து இங்கு வருவதற்கு இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம். மேக் இன் இந்தியா வெற்றி அடைந்தால் இந்திய உற்பத்தியாளர்கள் அனைவரும் பயனடைவார்கள்.
தேவை அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
மாநில அரசுகள் விவசாயத் துறைக்கு புதிய மின் இணைப்புகள் கொடுக்கும் பட்சத்தில் தேவை உடனடியாக அதிகரிக்கும். மத்திய பட்ஜெட்டில் 7 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று தெரி வித்திருக்கிறார்கள், அதனை செய்யும் போது தேவை அதிகரிக்கும்.
வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் (எப்டிபி) உங்களுக்கு என்ன அதிருப்தி?
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் ஏற்றுமதி உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் focus product scheme-ல் பம்ப் உற்பத்தியாளர்களுக்கான சலுகையை 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்திருக்கிறார்கள். இதில்தான் எங்க ளுக்கு அதிருப்தி. பம்ப் உதிரி பாகங்களுக்கு சலுகை கொடுத்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.
சைமா (எஸ்ஐஇஎம்ஏ) சங்கத்தின் உறுப்பினர்கள் குறைந்திருக்கிறார்களா?
எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் பெரியதாக அதிகரிக்கவில்லை.
எஸ்எம்இ நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று `செபி’ தலைவர் சின்ஹா சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பேசினார். உங்களுக்கோ அல்லது உங்கள் சங்க உறுப்பினர்களுக்கோ அந்த திட்டம் உள்ளதா?
எஸ்எம்இ நிறுவனங்கள் ஐபிஓ கொண்டு வருவதற்கான செலவுகள் அதிக மாக இருக்கிறது. அதனால் ஐபிஓ கொண்டு வருவது அவ்வளவு எளிதாக நிறுவனங்களுக்கு இருக்கவில்லை.
உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்களா?
ஆரம்பத்தில் இருந்து முதலீடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரி வாக்க பணிகளுக்குதான் முதலீடு செய்கிறார்கள். சில நிறுவனங்கள் முத லீடு தேவைப்படுமா என்று எங்களை அணுகியது. ஆனால் எங்களுக்கு நிதி தேவையில்லை என்று சொல்லிவிட்டேன்.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT