Last Updated : 22 May, 2015 10:15 AM

 

Published : 22 May 2015 10:15 AM
Last Updated : 22 May 2015 10:15 AM

சென்னையில் உருவாகும் பிஎம்டபிள்யூ கார்கள்

கிரிக்கெட் மைதானத்தில் பவுண்டரிக்கு பந்தை விரட்டுகிற சச்சின், ஒரு ஆட்டொமொபைல் என்ஜினீயராக மாறி பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் காரை சென்னையில் வடிமைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விஷயமாகும்.

பிஎம்டபிள்யூ கார் பலருக்கு கனவுக்கார். எங்காவது சாலையில் நிறுத்தியிருக்கும் பிஎம்டபிள்யூவை கைகளால் ‘ச்சே.. சான்ஸே இல்ல’ என்று ஆனந்தப்பட்டிருக்கும் அனுபவம் பலருக்கும் உண்டு. பிஎம்டபிள்யூ இப்படியென்றால், சச்சினை பற்றி சொல்லவே தேவையில்லை. சச்சினுக்கும் டபிள்யூவுக்குமான பந்தம் 1993 முதல் தொடருகிறது. அப்போது தான் அவர் தனது கனவு காரான பிஎம்டபிள்யூவை வாங்கினார். இன்றைக்கு ஒரு பிஎம்டபிள்யூவை உருவாக்கும் அளவுக்கு அந்த காரை அவர் நேசிக்கிறார்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பல நிறுவனங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. மேக் இன் இந்தியாவில் நாங்களும் இருக்கிறோம் என்பதை ஊருக்கு சொல்லத்தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சினை கொண்டு காரை உருவாக்கி அதை விளம்பரப்படுத்தியுள்ளது.

சென்னை மஹிந்திரா சிட்டியில் உள்ளது பிஎம்டபிள்யூ இணைப் புத் தொழிற்சாலை. இந்த மையம் கடந்த 2007-ம் ஆண்டே தொடங்கப் பட்டுவிட்டது. வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் உதிரி பாகங்களை அசெம்பிள் செய்யும் பணியும், சில பாகங்களை உருவாக்கும் பணியும் இந்த மையத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பிஎம்டபிள்யூ காரின் 50 சதவீத பாகங்களை சென்னை மையத்தில் இருந்து உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளது அந்நிறுவனம்.

இந்த முயற்சிக்கு கைகொடுக்கத்தான் காரை அசெம்பிள் செய்தார் சச்சின். இந்தக் காருக்கு சச்சின் ஸ்பெஷல் எடிசன் கார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ சென்னை ஆலை யில் பணியாற்றும் பொறியாளர் வெங்கட் மற்றும் குழுவினர் உதவி யோடு, புரொப்பல்லர் ஷாப்ட்டை டிரான்ஸ்மிசனுடனும், என்ஜினை முன்பகுதியிலும் இணைத்தார் சச்சின்.

இது அனைத்தும் ஒரு 30 நிமிடத்தில் நடந்தது. கோடான கோடி ரசிகர்களின் கரவொளிக்கும் ஆராவாரத்துக்கும் மத்தியில் கிரிக்கெட் மட்டையோடு பெரும்பாலான தருணங்களில் மைதானத்தை அதிசயிக்க வைத்த சச்சின், ஸ்பேர் பார்ட்ஸ் சகிதம் ஒரு காரை அசெம்பிள் செய்தது பலருக்கு விருந்துதான்.

ஒரு காரை உருவாக்கியது குறித்து பேசிய சச்சின், “பிஎம்டபிள்யூ தரத்தால் கவர்ந்து, பிஎம்டபிள்யூ காரை நான் பல ஆண்டுகளாக ஓட்டி வருகிறேன். அதே நிறுவனத்தின் காரை முதல் முறையாக நானே அசெம்பிள் செய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நான் வடிவமைத்த காரில் மொத்தம் 2800 ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளன. ஒரு காரினை அசெம்பிள் செய்வது பற்றி பல நுணுக்கமான விஷயங்களையும் அறிந்து கொண்டுள்ளேன். இந்தப் பயிற்சி யின் காரணத்தால் காரினை உருவாக்குவதில் விரைவிலேயே தலைசிறந்தவனாவேன்” என்று பெருமிதப்பட்டார்.

பிஎம்டபிள்யூ இந்தியா குறித்து அதன் தலைவர் பிலிப் வான் சாஹ்ர் கூறியதாவது:

பிஎம்டபிள்யூ இந்தியா 100 சதவீதம் பிஎம்டபிள்யூவின் துணை நிறுவனம் ஆகும். குர்காவ்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிஎம்டபிள்யூ இந்தியா, சென்னையில் உற்பத்தி மையம், மும்பையில் உதிரி பாகங்கள் சேமிப்பு மையம், குர்காவ்னில் பயிற்சி மையம் என்று திறம்பட இயங்கி வருகிறது. பிஎம்டபிள்யூவின் முக்கியமான சந்தையாக இந்தியா உள்ளதால், இந்தியாவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இந்தியாவில் அதிகளவிலான கார்களை உற்பத்தி செய்வது என்றும் தரமான முன்னணி டீலர்களின் மூலம் அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கி வருகிறோம். இதன் மூலம் குறைந்த விலையில் பலரும் பிஎம்டபிள்யூவை சொந்தமாக்கி கொள்ள முடியும். இந்தியாவில் இதுவரை ரூ 490 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 40 விற்பனை மையங்கள் உள்ளன. இது மேலும் அதிகப்படுத்தப்படும்” என்றார்.

பிஎம்டபிள்யூ சென்னை உற் பத்தி மையத்தின் நிர்வாக இயக்கு நர் ராபர்ட் பிரிடாங் கூறியதாவது:

பிஎம்டபிள்யூ சென்னை உற்பத்தி மையம் உலகத்தரத்துக்கு இணையாக கார்களை தயாரித்து வருகிறது. ஜெர்மனியில் தயாரிக் கப்படும் அதே தரத்தில் தான் சென்னையிலும் உருவாகிறது. அங்கு எந்த அளவுக்கு தொழில் நுட்ப திறன் கொண்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்களோ அதே தரத்தில் தான் சென்னையிலும் பணியாற்றுகிறார்கள்.

சென்னையி லுள்ள உற்பத்தி மையத்திலிருந்து பிஎம்டபிள்யூ சீரிஸ் 1, பிஎம்டபிள்யூ சிரீஸ் 2, பிஎம்டபிள்யூ சிரீஸ் 3 கிரன் டரிஸ்மோ, பிஎம்டபிள்யூ சிரீஸ் 5, பிஎம்டபிள்யூ சிரீஸ் 7, பிஎம்டபிள்யூ எக்ஸ்1, பிஎம்டபிள்யூ எக்ஸ் 3, பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ஆகிய கார்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிரதமர் மோடி அறிவித்துள்ள மேக் இன் இந்தியாவுக்கு ஆதர வளிக்கும் வகையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற பிஎம்டபிள்யூ கார்களுக்கான 50 சதவீதம் உதிரி பாகங்களை சென்னை மையத்திலேயே உற்பத்தி செய்யவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய கார்களை விற்பனை செய்வது மட்டுமன்றி, பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களை விற்பதற் கும் முயற்சிகளை எடுத்து வரு கிறது. பயன்படுத்தப்பட்ட கார் களை வாங்க விரும்புவோருக்காக, இந்தியா முழுவதும் 12 இடங்களில் பிரீமியம் செலக்சன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டு மன்றி சமீபத்தில் பிஎம்டபிள்யூ ஐ 8 இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்கு நல்ல அளவு வரவேற்பு உள்ளது. உலகளவில் கடந்தாண்டில் 2,118 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

manikandan.m@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x