Published : 03 May 2015 11:57 AM
Last Updated : 03 May 2015 11:57 AM
சிறு, குறு மற்றும் மத்திய (எம்எஸ்எம்இ) ரக நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனத் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இத்தயாரிப்புகள் சர்வதேச அளவில் பிரபலமடையும் என்றும், விற்பனை அதிகரிக்கும் என்றும் மாநில அரசு கருதுகிறது.
இதற்காக மும்பையைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக மையத்தின் (டபிள்யூடிசி) உதவியை ஒடிசா மாநில அரசு நாடியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் தயாரிக்கும் பொருள்கள் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டபிள்யூடிசி அமைப்புடன் இது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறோம். இதன் மூலம் இப்பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு மேலும் விரிவடையும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக எம்எஸ்எம்இ துறைச் செயலர் பஞ்சனன் தாஸ் தெரிவித்தார்.
எம்எஸ்எம்இ பஜார் என்ற பெயரில் ஒரு இணையதளம் உருவாக்கப்படும். இந்த தளம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைக்கப்படும். அவை விளம்பரம் செய்யும் தயாரிப்புகளோடு எம்எஸ்எம்இ தயாரிப்புகளின் படங்களும் இடம்பெறும். அதாவது இந்நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், எனாமல், உணவுப் பொருள்கள், விலங்குகளுக்கான உணவுகள் உள்ளிட்டவை இடம்பெறும்.
உள்ளூர் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக உருவாக்கப்படுகின்றன. இந்த உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச அளவிலான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இப்போது ஆன்லைன் மூலமான வர்த்தகம் பெருகும்போது வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், மாநிலத்தின் வருவாயும் உயரும் என்று தாஸ் மேலும் கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 15 லட்சம் சிறு, குறு மற்றும் மத்திய தர நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 33 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்துறை மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும் முன்னணி 10 மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்றாகும். அதேபோல வேலை வாய்ப்பை உருவாக்கு வதில் தேசிய வளர்ச்சி 26 சதவீதமாகும். ஆனால் ஒடிசா மாநிலத்தில் இது 29% உள்ளது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40% எம்எஸ்எம்இ துறையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT