Published : 12 May 2015 09:59 AM
Last Updated : 12 May 2015 09:59 AM
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரான கே.வி. காமத் (67) தற்போது பிரிக்ஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வளரும் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒரு வங்கியைத் தொடங்க முடிவு செய்தது. இந்த பிரிக்ஸ் வங்கியின் தலைவராக நேற்று காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத தலைவராக காமத் உள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார் காமத். ஆசிய மேம்பாட்டு வங்கியில் சில ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். இவரது சிறந்த பணிகளை பாராட்டி 2008-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது
பிரிக்ஸ் வங்கியின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு காமத் பொறுப்பு வகிப்பார். இந்த வங்கி ஓராண்டில் செயல்படத் தொடங்கும் என்று நிதிச் செயலர் ராஜிவ் மெஹரிஷி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் 10,000 கோடி முதலீட்டில் புதிய மேம்பாட்டு வங்கியைத் தொடங்குவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த வங்கி ஷாங்காயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். இந்த ஒப்பந்தத்தின்படி இதன் முதலாவது தலைவரை நியமிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது.
முதல் ஆறு ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளை இந்தியா செயல்படுத்த நடத்தும். இதைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரேசிலும், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகள் ரஷியாவும் நடத்தும்.
உலக மொத்த மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகளில் 40 சதவீதம் பேர் வாழ்கின்றனர். இந்நாடுகளின் உற்பத்தி 1,600 லட்சம் கோடி டாலராகும்.
இந்த வங்கி செயல்படத் தொடங்கும்போது இந்தியாவின் கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு இதிலிருந்து கடன் பெற முடியும் என இந்தியா நம்புகிறது.
பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்புக்கு ஒரு தனி வங்கி தொடங்க வேண்டும் என்ற யோசனை 2012-ல் உருவானது. இதற்கு 2013-ல் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. கடந்த ஆண்டு பிரதர் நரேந்திர மோடி இந்த வங்கி அமைப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT