Last Updated : 17 May, 2015 01:08 PM

 

Published : 17 May 2015 01:08 PM
Last Updated : 17 May 2015 01:08 PM

மானியங்களை கடன் பத்திரங்களாக கொடுக்கலாம்- பம்பாய் பங்குச் சந்தை நிர்வாக இயக்குநர் பேட்டி

கடந்த சில வருடங்களாக குறைந்திருந்த பொது பங்கு வெளியீடு (ஐபிஓ), தற்போது உயர்ந்து வருகிறது. இதுபற்றி, 140 வருட பாரம்பரியம் மிக்க பாம்பே பங்குச் சந்தையின் (பி.எஸ்.இ.) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆசிஷ் சவுகானிடம் கேட்டபோது, பல விளக்கங்களை அளித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிறந்த ஆசிஷ் சவுகான் , கொல்கத்தா ஐஐஎம்-ல் நிர்வாகப் படிப்பை முடித்தவுடன் ஐடிபிஐ வங்கியில் இணைந்தார். ஐடிபிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தேசிய பங்குச் சந்தையை (என்.எஸ்.இ) தொடங்கின. அதன் ஆரம்பகால முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் 2 ஆண்டுகள் இருந்தார். 2009-ம் ஆண்டு துணைத்தலைமைச் செயல் அதிகாரியாக பி.எஸ்.இ.யில் இணைந்தவர் 2012 முதல் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம். அவருடன் நடந்த உரையாடலில் இருந்து...

மும்பை இந்தியன்ஸ் அணியில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

எனக்கு கொடுக்கப்பட்ட கூடுதல் பொறுப்பு அது. இந்தியா என்று வரும்போது, இயல்பாக அணிக்குள் இணைப்பு வந்துவிடும். ஆனால் ஐபிஎல் அப்படி இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு அணி இருக்கும். அதில் பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் வீரர்கள் வருவர். அவர்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்துவது எங்களுக்கு முக்கியப் பணியாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இல்லை என்பதால் அவர்களை ஒருங்கிணைக்கும் பணி சவாலாக இருந்தது.

முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை கிரிக்கெட் போட்டி நடந்ததால் மக்களிடம் அதிக ஆர்வம் இருக்கும். அடிக்கடி போட்டி நடக்கும்போது ஆர்வம் குறையும். அந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொண்டு, டிக்கெட் விற்க வேண்டும், ஸ்பான்ஸர்களிடம் பேச வேண்டும் என பல சவால்கள் இருந்தன. இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

உலகக் கோப்பை முடிந்த உடனே ஐபிஎல். இதுபோன்ற தொடர் போட்டிகளால் வருங்காலத்தில் ஐபிஎல்-க்கு எதிர்காலம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

என் இளமைக்காலத்தில் டெஸ்ட் மேட்ச் மட்டும்தான் இருந்தது. பிறகு ஒரு நாள் போட்டிகள் வந்தன. அதன்பிறகு 20-20 போட்டி வந்தது. உலகம் வேகமாக மாறி வருகிறது. அவர்களுக்கு நேரம் முக்கியம். 20-20 போட்டிகள் 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் பல விளையாட்டு பிராண்ட்களில் ஐபிஎல் டாப் ஐந்துக்குள் வந்துவிடுகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் குறைவாகவே உள்ளார்களே?

சந்தை என்றால் ரிஸ்க் என்னும் மனநிலைதான் இருக்கிறது. ரிஸ்க் இல்லாத முதலீட்டு சாதனங்கள் ஏதும் இப்போது இல்லை. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் சிறுமுதலீட்டாளர்கள் கடன் சார்ந்த பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அனுமதி கிடைக்கும். அப்போது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ரிஸ்க் உள்ள முதலீடுகளும், கடன் சார்ந்த முதலீடுகளும் இருக்கும். தற்போது உள்ளதைவிட 10 மடங்கு அளவுக்கு சிறுமுதலீட்டாளர்கள் வருவர்.

இந்தியாவின் ஜிடிபி 2.1 லட்சம் கோடி டாலர். இதில் 30 சதவீதம் மட்டுமே, அதாவது 600 மில்லியன் டாலர் மட்டுமே சேமிக்கிறோம். 10 சதவீதம் மட்டும் நிதி சார்ந்த முதலீடுகளில் இருக்கிறது. இதில் எக்ஸ்சேஞ்ச் மூலமாக நடப்பது மிகவும் குறைவு. நிதி சார்ந்த முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இந்தப் பிரிவில் புதிய முதலீடுகள் வரும்.

அடுத்து, ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு டிமேட் கணக்கு கொடுப்பது பற்றி அரசு பரீசிலனை செய்யலாம். அதில் கொடுக்கும் மானியங்களை கடன் பத்திரங்களாக கொடுக்க வேண்டும் என்பதை ‘தி இந்து’ மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

பிக்ஸட் டெபாசிட், ஆர்டியில் முதலீடு செய்யத்தான் மக்கள் நினைக்கின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு கொண்டு வரப்பட்டால் மக்களின் மனநிலை மாறுமா?

மக்கள் விரும்புவது நம்பிக்கைதான். பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யும்போது இந்திய அரசு நம்பிக்கை கொடுக்கிறது. நேரடியாக இந்திய அரசு வெளியிடும் பத்திரத்தை வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் மக்கள் முதலீடு செய்யமாட்டார்களா?

பி.எஸ்.இ. பட்டியலிடப்படுவதன் நோக்கம் என்ன?

எக்ஸ்சேஞ்சில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரிய வேண்டும். இப்போது 8,000 பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு என்ன என்று வெளிப்படையாக தெரியவேண்டும். நிறுவனம் பட்டியலிடப்படவில்லை என்றால் என்ன நடக்கிறது, விலை என்ன என்பது பற்றி தெரியாது. இது ஒன்றும் புதிது அல்ல. சர்வதேச அளவில் பல எக்ஸ்சேஞ்ச்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் ஐபிஓ (பொது பங்கு வெளியீடு) வருவதில்லை. செபியின் விதிமுறைகள்தான் இதற்கு காரணமா?

ஆரம்ப காலத்தில் பல கம்பெனிகள் ஐபிஓ வெளியிட்டு காணாமல் போயின. இதனால் பல முதலீட்டாளர்களின் பணம் நஷ்டமானது. சிறுமுதலீட்டாளர்களை பாதுகாப்பது செபி மற்றும் எக்ஸ்சேஞ்ச்களின் முக்கியமான பணி. சிறு நிறுவனங்கள் பட்டியலிடாமல் இருக்க முடியாதே. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச். சிறுமுதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்வதை தடுப்பதற்காக குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தோம். அதனால், சிறு நிறுவனங்களும் எளிதாக பட்டியலிட முடியும்.

பிளிப்கார்ட் இங்கு ஐபிஓ வெளியிடாமல், அமெரிக்காவில் வெளியிட என்ன காரணம்?

விதிமுறைகள் தவிர வேறு காரணங்கள் உள்ளன. இ-காமர்ஸ் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆனால், அவர்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் பட்டியலிடும்போது அவ்வளவு மதிப்பு கிடைக்காது. தவிர அந்த நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் இருக்கலாம். வெளிநாடுகளில் அந்த நிறுவனத்துக்கு அதிக மதிப்பு கிடைக்கும் என்பது போன்ற சாதகங்களும் உள்ளன. அதே சமயத்தில் இந்தியாவில் பட்டியலிடும் போதும் சில சாதகங்கள் உள்ளன. இந்தியாவில் பட்டியலிடும்போது தன்னுடைய சொந்த நிறுவனத்தின் பங்குகளை ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருந்தால் அவர்களுக்கு மூலதன ஆதாய வரி செலுத்த தேவை இல்லை.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x