Published : 15 Apr 2015 11:25 AM
Last Updated : 15 Apr 2015 11:25 AM
அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது. வளர்ச்சிக்கான பாதையை திட்டமிட்டுள்ளதோடு சர்வதேச அளவில் சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலையின் பலனால் இத்தகைய வளர்ச்சி இந்தியாவுக்கு சாத்தியமாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய ஆய்வறிக்கை ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படும். அதில் இந்தியாவின் ஏற்றுமதித் துறையில் பெருமளவு வளர்ச்சி இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக எரிபொருள் மானியத்தில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்படக்கூடும் என கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஃபிட்ச் தரச் சான்று நிறுவனம் நம்பகமான கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் உலக வங்கி ஆய்வறிக்கையும் இவ்விதம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியடைந்த நாடுகளின் அறிவுசார் ஆலோசனைக் குழுவினர் அடங்கிய பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (ஓஇசிடி) இந்தியாவின் வளர்ச்சி குறித்து உறுதிபட கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல ஆசிய மேம்பாட்டு வங்கியும் (ஏடிபி) நடப்பாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியும் அடுத்த நிதி ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியையும் எட்டும் என தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை தெற்காசிய பிராந்திய நாடுகள் பெருமளவில் ஈட்டும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிரிவு தலைமை பொருளாதார நிபுணர் மார்டின் ராமா தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக எரிபொருள் விலை சரியும். இதனால் நடப்பு நிதி ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீட்டு சுமை குறையும். இதன் மூலம் சுற்றுச் சூழலில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிட்ட தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் செலவிட்ட தொகை 55 சதவீதம் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.5 சதவீத அளவுக்கு உயரும் என்றும் அடுத்த நிதி ஆண்டில் 8 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 2016 முதல் 2018 வரையிலான காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் வளர்ச்சி 12 சதவீத அளவுக்கு உயரும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
நுகர்வு கலாசாரத்திலிருந்து இந்தியா முதலீட்டு கலாசாரத்துக்கு மாறி வளர்ச்சியை எட்டும் என்றும் இதே காலகட்டத்தில் சீனா எதிர்மறையான சூழலை சந்திக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை விலையை நிர்ணயிக்கின்றன. டீசல் விலை தற்போது சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT