Published : 25 Apr 2015 10:12 AM
Last Updated : 25 Apr 2015 10:12 AM
கெட்ட பழக்க வழக்கங்களை விட்டொழியுங்கள் என்கிறார்கள் டாக்டர்கள். நாம் கேட்டாலும் நம் உடம்பு கேட்கிறதா? கேடு கெட்டதைத்தான் கேட்டுப் பெறுகிறது.
கெட்ட சகவாசத்தைக் கைவிடுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். சின்ன வயதிலிருந்தே கெட்ட சகவாசத்தை அருகில் வைத்துக்கொண்டே பழகிவிட்டோம். விடமுடிவதில்லை.
குறைந்தபட்சம் செய்யும் தொழிலிலாவது கெட்ட உத்திகள் ஒட்டாமல் செய்வோமே. நல்ல உத்திகளை மட்டும் பிரயோகிப்போமே. இதற்கு நல்ல உத்தி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதைவிட முக்கியம் கெட்ட உத்தி என்றால் என்ன தெரிந்துகொள்வது.
அவை என்ன என்பதை ‘Good Strategy Bad Strategy’ என்ற தன் புத்தகத்தில் விளக்குகிறார் ‘ரிச்சர்ட் ரூமெல்ட்’. நல்ல உத்தி என்றால் என்ன? ரொம்ப சிம்பிள் என்கிறார். எது விடையா? இல்லை, நல்ல உத்தி என்பது ரொம்ப சிம்பிளாய் வைப்பது; தொழில் இருக்கும் சூழ்நிலையை புரிந்துகொண்டு, அதிலிருந்து முக்கிய பிரச்சினையை மட்டும் பிரித்தெடுத்து அதை சமாளிக்கும் சக்தியை, முயற்சியை, நடவடிக்கையை எடுப்பதே நல்ல உத்தி என்கிறார்.
நல்ல உத்திக்கு மூன்று குணங்கள் உண்டு; ஒன்று, Diagnosis - வளர்ச்சிக்கு தடையாய் இருப்பது எது என்ற தெளிவாக ஆராய்வது. இரண்டு, Guiding policy தடையைத் தகர்த்தெறிய தேவையான திட்டம். மூன்று, Coherent action - தடையை திட்டமிட்ட வழியில் தீர்க்கும் செயல் திறன்.
கெட்ட உத்தி என்றால் என்ன? நாய் வாய் வைப்பது போல் ஒரே சமயத்தில் ஏகப்பட்ட விஷயங்களை அலசி, ஏராளமான முயற்சிகளை ஒருசேர மேற்கொண்டு என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்பது புரியாமல் முழிப்பது. நல்ல உத்தி என்பது மற்றவர்கள் எதிர்பாராதது. ரொம்ப சிம்பிளாக இருப்பதால் அது பிரயோகிக்கப்படும் என்று எதிராளி எதிர்பார்ப்பதில்லை.
நல்ல உத்தி, கெட்ட உத்தி இரண்டை யும் புரிய வைக்க உங்களை அழைத்துப் போகப் போகிறேன் போர்களத்திற்கு! பயப்படாதீர்கள். போரிட அல்ல. நடந்து முடிந்த போரிலிருந்து தெரிந்துகொள்ள.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி குவைத் நாட்டு எண்ணெய் வளத்திற்கு ஆசைப்பட்டு ஆக்ரமித்தது சதாம் ஹூசேனின் இராக் படை. பேசிப் பார்த்து பிரயோஜனம் இல்லை என்று தெரிந்து 1991 ஜனவரியில் அமெரிக்க தலைமையில் முப்பத்தி மூன்று நாடுகளின் படை சதாம் ஹூசைன் படையை பாதாம் கீர் போல் பிழிந்து, பருக படையெடுத்தது.
குவைத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை குவித்தது இராக். உலகப் படை முன் இராக் ஜூஜூபி என்றாலும் பல உயிர்கள் பலியாகுமே என்ற கவலை உலக நாடுகளுக்கு. ஐந்து மாதங்களில் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகளைத் தோண்டி அதில் கான்க்ரீட் அரண்கள் அமைத்து ஆயிரக்கணக்கான இராக் வீரர்கள் காத்திருந்தனர். நான்காயிரம் பீரங்கிகள் வயிற்றில் குண்டுகளை தாங்கி உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்தன. போதாததற்கு ஆயிரக்கணக்கில் ராணுவ கவச வாகனங்களை இராக் குவைத்தில் நிறுத்தியிருந்தது.
‘நாங்கள் செத்தாலும் பரவாயில்லை. உங்களில் பாதி பேரையாவது பரலோகத்திற்கு எங்களுடன் பேச்சுத் துணைக்கு அழைத்துப் போவோம்’ என்று சொல்லாமல் சொன்னது இராக். குவைத்திலிருந்து இராக் படையை விரட்ட சில வாரங்கள் ஆகும், இருபதாயிரம் அமெரிக்க வீரர்கள் மடிவார்கள் என்று கணித்தது உலக நாடுகள். குவைத் போர்களம் அல்ல, ‘மரணக் கிணறு’ என்று வர்ணித்தன உலகப் பத்திரிகைகள். நகத்தைக் கடித்துகொண்டு உலகமே பதைபதைப்புடன் காத்திருந்தது.
ஆனால் எவ்வித பரபரப்புமில்லாமல் அமெரிக்க படைக்கு தலைமை தாங்கி குவைத்தில் நுழைந்தார் ‘நார்மன் ஷ்வார்ட்ஸ்காஃப்’ (Norman Schwarzkopf). அவரது குழு குவைத்தை நேரடியாகத் தாக்கும் திட்டம் ஒன்றை வகுத்திருந்தது. அதில் இரண்டாயிரம் வீரர்கள் உயிர் இழப்பார்கள், எட்டாயிரம் பேருக்கு காயம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இது கெட்ட உத்தி என்ற நார்மன் தான் வகுத்து வைத்திருந்த டூ-ப்ராங்க்ட் (Two pronged) போர் உத்தியை பிரயோகப்படுத்தினார்.
முதல் பகுதியாக அமெரிக்க போர் விமானங்களைக் கொண்டு வானிலிருந்து தாக்கினார். அதே சமயம் குவைத்தின் மேற்குப் பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க வீரர்கள் ரகசியமாக வடக்கு நோக்கி நகர்ந்தனர். இராக் படை குவைத்தை மட்டுமே குறி வைத்திருந்ததால் தெற்கு இராக் பாலைவனம் வெறிச்சோடிக் கிடந்தது. ‘குவைத்தை பக்கவாட்டிலிருந்து தாக்க வரும் அமெரிக்க படையே வருக வருக’ என்று வரவேற்பு வளைவுகள் வைக்காதது தான் குறை. இப்படி சுற்றி வளைத்து தாக்கும் போர் தந்திரத்திற்கு ‘என்வலப்மெண்ட்’ (Envelopment) என்று பெயர்.
அதே சமயம் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் குவைத்தில் இறக்கப் பட தயாராக கடலில் கப்பல்களில் காத்திருந்தனர். விமானங்கள் மேலிருந்து தாக்க, அமெரிக்க படை இராக் படையை தாக்குவது போல் பாவ்லா காட்டிக்கொண்டிருந்தது.
விமான தாக்குதலூடே, எதிரே இருக்கும் அமெரிக்கப் படையை தாக்கிக் கொண்டிருந்த இராக் படையினரை திடீ ரென்று பக்கவாட்டிலிருந்து தாக்கியது அமெரிக்க படை. எந்த பதுங்கு குழிகள் காப்பாற்றும் என்று நினைத்தார்களோ அந்த பதுங்கு குழிகள் இராக் படைக்கு சவக்குழிகளானது. ஆபத்து எங்கிருந்து வருகிறது என்று அறியாமலே அழியத் துவங்கியது இராக் படை. எந்த மண் மீது ஆசைப்பட்டார்களோ அதே மண்ணில் லட்சக்கணக்கில் விழுந்து மடிந்தனர். எஞ்சியவர்கள் போட்டது போட்டபடி இராக்கை நோக்கி தப்பி ஓடினர்.
வாரக் கணக்கில் சண்டை நடக்கும். ஆயிரக்கணக்கில் அமெரிக்க படையினர் மடிவார்கள் என்ற கணிப்பு அந்த போர்களத்தின் புகையில் காணாமல் போனது. நூறு மணி நேரமே நடந்த யுத்தம் அது. அமெரிக்க படையினருக்கு இழப்பு எட்டு உயிர்கள். காயம் அடைந்தவர்கள் இருபதே பேர்!
வரலாறு, புவியியல் காணாத வெற்றி. போர் முடிந்து, சத்தம் ஓய்ந்து, புகை களைந்தவுடன் நார்மன் ஷ்வார்ட்ஸ்காஃப் மீடியாவிற்கு பேட்டியளித்தார். அதில் தன் உத்தியை வரைபடங்களோடு தெளிவாக விளக்கி னார். நேரடியாக தாக்குவது கெட்ட உத்தி, ஏனெனில் அதைத்தான் எதிராளி யினர் எதிர்பார்த்திருந்தனர் என்றார். நல்ல உத்தி என்பது சிம்பிளானது. அதனாலேயே யாரும் எதிர்பார்க்காதது. அதைத்தான் பிரயோகித்தேன் என்றார். கப்பல்களில் இருந்த அமெரிக்க வீரர்கள் எதற்கு என்று கேட்ட போது ‘குவைத்தில் இறங்கி நேராக தாக்குவார்கள் என்று இராக் படை நினைத்து ஏமாறுவதற்கு’ என்றார் சிரித்துக்கொண்டே. ‘பிரமாதம், பிரில்லியண்ட் உத்தி’ என்று புகழ்ந்தது உலக மீடியா!
நல்ல உத்தி என்ன என்பது புரிந்ததா? அது எத்தனை சிம்பிளானது, கண்டுபிடிப்பது எத்தனை ஈசியானது என்று புரியவைக்க இன்னொரு மேட்டர் கூறுகிறேன்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் போர் கலை பற்றி ஆண்டுதோறும் புத்தகம் அச்சடித்து வெளியிடும். 1986ம் வருடம் ‘Operations’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டது. அதில் ‘என்வலப்மெண்ட்’ உத்தி என்றால் என்ன என்பது முதல் அதை பிரயோகிக்கும் விதம் வரை விலாவரியாக விவரித்திருந்தது. அமெரிக்க படை தாக்கும் போது என்வலப்மெண்ட் உத்தியை ‘ப்ளான் ஏ’வாக முதலில் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தது.
முக்கிய போர் உத்தியை விளக்கும் அப்புத்தகத்தை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து வாங்கலாம். விலை இருபத்தி ஐந்து டாலர் மட்டுமே.
அதை யார் வாங்கினார்களோ தெரியாது. நார்மன் ஷ்வார்ட்ஸ்காஃப் வாங்கியிருந்தார். சதாம் ஹுசைன் வாங்கவில்லை!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT