Published : 21 May 2014 11:46 AM
Last Updated : 21 May 2014 11:46 AM

அதிக சம்பளம் ஆபத்தா?

விமானத்தில் பயணம் செய்யும் போது முன் வரிசையில் பார்த்தால் அடையாளம் தெரியாதபடி என் நண்பர் ஒருவர் இருந்தார். சற்று முடி துறந்து முகம் வீங்கி வயதாகியிருந்தார். பரஸ்பரம் விசாரித்துவிட்டு, “எங்கே இப்போ?” என்றேன். “சொல்றேன்” என்றவர், விமானம் கீழே இறங்கிய பின் காரில் செல்கையில்தான் சொல்ல ஆரம்பித்தார்.

எனக்கு இவரை 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். ஒரு நல்ல கம்பெனியில் உதவி மேலாளராக இருந்தார். பின் ஆறு கம்பெனிகள் மாறி மிகப்பெரிய சம்பளத்தில் அந்த எம்.என்.சி யில் மனித வளத்துறை தலைவராகச் சேர்ந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மனிதர் அங்கிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின் சுமார் ஒன்றரை வருடங்களாக அடுத்த வேலை சரியாகக் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கு இவரைப் போல சுமார் 6 பேரைத் தெரியும். நாற்பதுகளில் நல்ல வேலை போய் அடுத்த வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள்.

“ சரியான ஓப்பனிங் இல்லை!” என்றார். “சம்பளம் மேட்ச் பண்ண முடியலை. நாம் கம்மியா ஒத்துக்கிட்டா நம்மள சந்தேகமா பாக்கறாங்க. அதே சமயம் நாம் வாங்கிய ரேஞ்சும் ஒத்துவராதுங்கறாங்க. நமக்கு மேட்ச் ஆகுற மாதிரி பெரிய கம்பெனிகளில் ஏனோ ஃபைனல் இண்டர்வியூ வரை போக முடியவில்லை. ஒரே குழப்பமா இருக்கு!”

எனக்கு இவரை ஒரு நல்ல உதவி மேலாளராகத் தெரியும். துறையின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு கடினமாக உழைப்பவர். நல்ல மக்கள் தொடர்புத் திறன்கள் உண்டு. நன்றாகப் பேசுவார். எல்லோருக்கும் இவரைப் பிடிக்கும். காரணம் இவரின் வலிய சென்று உதவும் குணம். தொழில்துறையில் இவருக்குத் தெரியாத பெரும்புள்ளிகள் கிடையாது. அப்படி இருந்தும் தக்க பணி கிடைக்கவில்லை என்பதுதான் விந்தை.

“ஏதாவது இருந்தா சொல்லுங்க பாஸ். டணால் தங்கவேலு மாதிரி எத்தனை நாளைக்கு நானும் மன்னார் அண்ட் கோன்னு சொல்லிட்டு திரியறது?” என்று சிரித்தவாறு வண்டியிலிருந்து இறங்கிச் சென்றார். தன்னை நகைச்சுவை செய்து கொள்ளும் ரசனையையும் அதன் அடியில் புதைந்துள்ள சோகத்தையும் எண்ணியவாறு என் வீட்டுக்குள் நுழைந்தேன்.

நண்பரைப் பார்த்த விபரத்தை மனைவியிடம் சொன்னேன்.

“அடப்பாவமே... நல்ல வேலையில் இருந்தாரே? என்ன பிரச்சினை, ஏன் அடுத்த வேலை கிடைக்கலை?”

பதில் சொல்வதற்காக யோசிக்க ஆரம்பித்தேன்.

இந்தச் சுழலில் சிக்கியுள்ள பல உயர் நிலை மேலாளர்களிடம் உள்ள ஒற்றுமைகளைச் சேர்த்துப் பார்த்தபோது ஒரு பெரும் சித்திரம் தெரிந்தது.

எல்லோரும் நல்ல மத்திய நிலை மேலாளர்கள் ஆக இருந்தவர்கள். ஆனால் துறைத் தலைவர்களாகத் தோற்றவர்கள். எல்லோரும் கடைசி வேலையில் பெரும் சம்பளம் ஈட்டி பின்னர் வேலை போன பின் அதே சம்பளம் கிட்டும் வேலைக்காகக் காத்திருப்பவர்கள். எல்லோரும் “மார்க்கெட் சரியில்லை” என்கிற ஒற்றை காரணத்தைத் தாண்டி யோசிக்காதவர்கள்.

நல்ல சம்பளம், தலைமைப் பதவி, அதிக பொறுப்புகள் என எல்லாம் வந்தது சரிதான். ஆனால் அவற்றிற்குத் தங்களை தகுதிபடுத்திக் கொண்டார்களா என்பதுதான் கேள்வி!

“இப்போ டி.ஜி.எம், 14 லட்சம் வருட சம்பளம். அந்த வேகன்ஸிக்கு ஹெட் அளவில் 20-25 லட்சம் பார்க்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன், 20 லட்சம் சி.டி.சி, ஹெட் பதவி என்று பேரம் பேசி வாங்கிக்கொள்கிறோம். அவங்க அவசரத்திற்கு அவங்களும் இந்த தடாலடி உயர்விற்கு ஒத்துகிட்டு சேத்துப்பாங்க.

ஆனா அவர்கள் எதிர் பார்ப்புகள் தவறும்போது, தலைகளை மாற்றவும் அவர்கள் தயங்குவதில்லை. உருளுகிற தலை நம்ம தலை எனும் போதுதான் நமக்குத் தெரியுது. வலிக்குது” என்று வாக்குமூலமே கொடுத்தார் ஒரு ஹெச் ஆர் நண்பர் ஒரு முறை.

சில சமயம் இரண்டு பதவிகளை சாமர்த்தியமாக இணைத்து ஒரு பதவியாக்கி அதற்கு ஒன்றரை சம்பளம் என நிர்ணயிப்பார்கள். நம்ம ஆட்கள் சம்பளம் பார்த்து எல்லாவற்றிற்கும் சரி என்பார்கள். இந்த சோதனை முறை வெற்றி பெறாதபோது சம்பந்தப்பட்டவர் தலை உருளும்.

வெறும் சம்பளத்தில் மட்டும் வளர்ச்சி என்று பார்க்கும் பணியாளர் எண்ணம்தான் எல்லா கோளாறுகளுக்கும் வித்து.

நேர்காணலில் அதிக சம்பளத்திற்காகத் தெரியாததைத் தெரிந்த மாதிரிக் காண்பிப்பதும், வேலைக்குச் சேர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோபாவமும்தான் இந்த சிக்கலில் கொண்டு தள்ளுகிறது.

தகுதிக்கு மீறி ஆசைப் படலாம், தகுதிகளை வளர்த்துக் கொண்டவாறே. தலைமை பொறுப்பு வேண்டாம் என்று திருப்பித் தந்ததுதான் டெண்டுல் கரின் கேரியரை வளர்த்தது.

நம் தமிழ் சினிமா ஒரு சினிமா வெற்றியைப் பார்த்து பல நடிகர்களை பெரிய பெரிய கதாநாயக வேடம் கொடுத்து பின் அனைத்தும் தோல்வி கண்டபின் மார்க்கெட் இல்லாமல் நிறுத்தும்.

ஒரு காலத்தில் சுதாகர், விஜயன், பிரதாப் போத்தன், ராமராஜன் போன்றோர் ஒரு வருடத்தில் அதிக படங்கள் நடித்து சம்பாதித்தவர்கள். இன்று அவர்கள் கதாநாயகர்களாகவும் இல்லை. மிகப்பெரும் செல்வந்தர் களாகவும் இல்லை.

ஆனால் சத்யராஜ் போன்றோர் மெல்ல அடி எடுத்து, கிடைத்த அனைத்து சிறிய வேடங்களையும் சிறப்பாகச் செய்து இன்றும் தன் நிலையை தக்கவைத்துக் கொண் டிருப்பதைப் பார்க்கிறோம்.

உங்கள் தகுதிகளை தொடர்ந்து கூர்மைப்படுத்துங்கள். அவை உங்களுக்கான சரியான உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.

உங்கள் தொழிலில் நீங்கள் ராமராஜனா அல்லது சத்யராஜா?

டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x