Published : 03 May 2014 10:38 AM
Last Updated : 03 May 2014 10:38 AM

கெய்ர்ன் தலைவர் இளங்கோ ராஜினாமா

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி பி. இளங்கோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் பதவியிலிருந்தும் வெளியேறுவதாக அவர் தெரிவித் துள்ளார். ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியைத் தொடங்கி பின்னர் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர் இளங்கோ. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவந்தார். சொந்த அலுவல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக கெய்ர்ன் நிறுவனத் துடனான உறவுக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

நிறுவனத்தின் முழு நேர தலைமைச் செயல் அதிகாரியாக அவரை நியமிக்காததே பதவி விலகலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவரது ராஜினா மாவை இயக்குநர் குழு ஏற்றுக் கொண்டது.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக உள்ள சுதிர் மாத்துர் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றுவார் என்று கெய்ர்ன் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளது.

வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி-யின் தலைமைச் செயல் அதிகாரி டாம் அல்பனேஸ் மற்றும் கெய்ர்ன் இந்தியா செயல்பாட்டு இயக்குநர் குழுவின் தலைவர் மைக் யேகர் ஆகியோர் இயக்குநர் குழு வழிகாட்டுதலின்படி நிறுவனம் செயல்படுவதில் ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கெய்ர்ன் நிறுவனத்தை வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சி நிறுவனம் வாங்கிய பிறகு தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் தனது பதவியை ராஜி னாமா செய்வது இதுவே முதல் முறையாகும். 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ராகுல் திர் ராஜினாமா செய்தபோது அந்த இடத்துக்கு இளங்கோ நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு இளங்கோவுக்கு சம்பளம் 40 சதவீதம் அதிகம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாகவே இருந்து வந்தார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவ னத்தின் அங்கமான கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை 2010-ம் ஆண்டு வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் வாங்கினார். இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியை ராஜினாமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x