Last Updated : 10 Apr, 2015 10:37 AM

 

Published : 10 Apr 2015 10:37 AM
Last Updated : 10 Apr 2015 10:37 AM

வாகனங்களுக்கிடையே ஒரு மகாயுத்தம்

திரைப்படங்களில் ரோடு மூவிஸ் என்று ஒரு வகை உண்டு. சாலையில் சீறிப் பாயும் வாகனங்களில் அமர்ந்து சாகசச் சமர் புரியும் நாயகர்கள் பிரதானமாகத் தோன்றும் படங்கள் அவை. சாலையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த படங்களும் இந்த ரகத்தில் வரும்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் `டியூயல்’ முதல் `ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ தொடர் படங்கள் வரை வரை எக்கச்சக்கமான சாலைப் படங்கள் வெளியாகி திரைப்படங்களின் பயணத்தை அதிரச் செய்திருக்கின்றன. இந்தப் படங்களில், நடிகர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாகனங்களுக்கும், சாலை களுக்கும் உண்டு.

இந்த வரிசையில் மிக முக்கிய மான படம் 1979-ல் வெளியான ஆஸ்திரேலியப் படமான `மேட் மேக்ஸ்’ (Mad Max). ’பிரேவ் ஹார்ட்’ புகழ் மெல் கிப்ஸன் நடித்த இந்தப் படம், அதுவரை வெளியான சாலைப் படங்களின் சமன்பாட்டையே மாற்றியமைத்தது. ஆஸ்திரேலியாவின் புதிய அலைப் படங்களைச் சர்வதேசப் பார்வை யாளர்களிடம் கொண்டுசேர்த்த இந்தப் படம், வசூலிலும் சாதனை படைத்தது.

உடைந்த சட்டங்கள்

எதிர்காலத்தில் ஆஸ்திரேலி யாவில் நடக்கும் கதை. சட்டம் ஒழுங்கு சம்பிரதாயங்கள் உடைத் தெறியப்பட்ட யுகம் அது. அமைதி யாக வாழ முற்படும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது, மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்று. அவர்கள் கொள்ளையடிக்க முற்படும் பொருட்களில் மிக முக்கியமானது எரிபொருள், அதாவது பெட்ரோல். ஆம், வாகனங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு, அதன் விளைவாகத் தலைவிரித்தாடும் வன்முறைச் சம்பவங்கள், திருட்டு, கொலைதான் இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.

1973-ல் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா ஆகிய அரபு நாடுகள் நடத்திய போரில் அமெரிக்கா தலையிட்டதால் அதிருப்தியடைந்த அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவைத்தன. இதில், மிகக் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அரங்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுதான் இந்தப் படத்தின் கதைக்கு ஆதாரமாக இருந்தது. இந்தப் படம் வெளியான 1979-லும் இதேபோன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது ஒரு அதிசயமான தற்செயல். (இரானில் ஏற்பட்ட புரட்சி மற்றும் ஆட்சி மாற்றத்தின் விளைவுகளில் ஒன்று அந்தத் தட்டுப்பாடு).

மேட் மேக்ஸ் படங்களின் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் அடிப்படையில் ஒரு டாக்டர். சிட்னி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த அவருக்கு, விபத்துகளில் உடல் பாகங்கள் சிதைந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர் களைப் பார்க்க நேர்ந்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளம் வயதிலேயே அவரது நண்பர்கள் விபத்தில் இறந்துபோனதும் அவரைப் பாதித்தது. இந்தப் பாதிப்புகள் அவரது `மேட் மேக்ஸ்’ படங்களில் பிரதிபலித்தன.

கண்மூடித்தனமான துணிச்சல்

படத்தின் ஆடிஷனுக்காக வந்தி ருந்த வேறொரு நடிகருக்குத் துணையாகத்தான் மெல் கிப்ஸன் வந்திருந்தார். முதல் நாள் மதுபான விடுதியில் ஒருவருடன் மோதியதில் அவரது முகம் ஒரு பக்கம் வீங்கியிருந்தது. அதிரடி வாகனச் சண்டைகள் நிறைந்த இந்தப் படத்துக்கு, கண்மூடித் தனமான துணிச்சல் கொண்ட இந்த இளைஞர்தான் பொருத்தமானவர் என்று அவரையே கதாநாயகனாக்கி விட்டார்கள்.

அதற்கு முன்னர் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவரது திரையுலக வாழ்க்கையை நிலைநிறுத்தியது. மேட் மேக்ஸ் படங்களில் இடம் பெறும் வாகன மோதல்களில் பெரும்பான்மையானவை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டப்பட்டவை.

படத்தில் நாயகன் மேக்ஸ் பயன்படுத்தும் கார், ஃபோர்டு ஃபால்கன் எக்ஸ்-பி செடான். அதில் சில பல மாறுதல்களைச் செய்திருந்தார்கள். செவர்லே பெல் ஏர் ரக கார்கள், ஜப்பானின் கவஸாகி மோட்டார் பைக்குகள் என்று ரகரகமான வாகனங்கள் அகன்ற திரைக்குள் அங்குமிங்கும் சீறிப்பாயும் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்கும்.

இரண்டாம் பாகமான ‘மேட் மேக்ஸ் -2’ 1981-ல் வெளியானது. இந்த வரிசைப் படங்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் இது. ஒருவர் மட்டுமே அமரக்கூடிய ‘ஆட்டோஜைரோ’ எனும் குட்டி விமானமும் இந்தப் படத்தில் உண்டு. 1985-ல் இதன் 3-ம் பாகமான ‘மேட் மேக்ஸ் -3’ வெளியானது. அத்தனை படங் களும் அமெரிக்காவிலும் வெளி யாகி ஹாலிவுட் ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தின.

நான்காம் பாகம்

சரியாக 30 ஆண்டுகள் கழித்து இதன் 4-ம் பாகமான ‘மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு’ வெளியீட்டுக்குத் தயாராக உறுமிக்கொண்டு நிற்கிறது. மே 15-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரே பிரம்மாண் டமாக மிரட்டுகிறது.

இதுவரை பார்த்திராத கற்பனையுலகில் பரந்து விரிந்த பாலைவனத்தில், மஞ்சள் மணல் புயல்களைக் கிழித்துக்கொண்டு பாய்கின்றன வாகனங்கள். 70 வயதான ஜார்ஜ் மில்லரே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். (‘ஹேப்பி ஃபீட்’ (2006) படத்துக்காக ஆஸ்கர் வென்றவர் இவர்) ‘மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு’ படத்திலும் மெல் கிப்ஸனே நடிப்பதாக இருந்தது.

எனினும், படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்குத் தாமத மானதால் அவர் விலகிக் கொண் டார். ‘டார்க் நைட் ரைஸஸ்’ படத்தில் பலம்மிக்க வில்லன் பாத்திரத்தில் நடித்த டாம் ஹார்டிதான் இந்தப் படத்தின் நாயகன். இந்தப் படத்தில் எரிபொரு ளுக்காக மட்டுமின்றி வேறொரு அத்தியாவசியத் தேவைக்காகவும் மக்கள் மோதிக்கொள்கிறார்கள். அது தண்ணீர்!

chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x