Published : 16 May 2014 10:00 AM
Last Updated : 16 May 2014 10:00 AM

பணவீக்கம் 5.2 சதவீதமாகக் குறைவு: மேலும் குறையும், நிதிச் செயலர் அர்விந்த் மாயாராம் நம்பிக்கை

இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரலில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும். உணவுப் பொருள் மற்றும் எரிபொருள்களின் விலை கணிசமாக உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.

மொத்த விற்பனை விலை அடிப்படையிலான குறியீட்டெண் மார்ச் மாதத்தில் 5.7 சதவீதமாக இருந்தது. 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது 4.77 சதவீதமாக இருந்தது என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.64 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய (மார்ச்) மாதத்தில் இது 9.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 8.93 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் குறையும்

பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளது ஓரளவு நிம்மதியை அளிக்கிறது. இந்த நிலை மேலும் தொடரும் என்று நிதிச் செயலர் அர்விந்த் மாயாராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிதித்துறை எடுத்த நடவடிக்கைகளின் வெளிப்பாடாக பணவீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது என்பதை யே இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதே நிலையில் நடப்பு நிதி ஆண்டிலும் பணவீக்கம் குறையும் என்று நம்புவதாக அவர் கூறினார். இருப்பினும் பருவநிலை மாறுபாட்டால் (எல்நினோ) ஏற்படும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் போதுமான அளவுக்கு உணவு தானியங்கள் நம்மிடம் கைவசம் உள்ளன. எனவே பருவமழை ஓரளவு பொய்த்துப் போனாலும் அதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படாது. மேலும் இதனால் உணவுப் பொருள் சங்கிலி பாதிப்படையாது என்றே தோன்றுவதாகக் குறிப்பிட்ட அவர் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனுடன் நாம் உள்ளதாக கூறினார்.

மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்தபோதிலும் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் உயர்ந்தே காணப்பட்டது.

முந்தைய 3 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு, பொதுவாக பொதுத்தேர்தல் நடைபெறும் சமயத்தில் சில்லறை விலை பணவீக்கக் குறியீட்டெண் ஓரளவு அதிகரிக்கத்தான் செய்யும் என்றார். தேர்தல் சமயத்தில் பல்வேறு செலவினங்கள் நடைபெறும். இந்த சமயத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஜூன் 3-ம் தேதி ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் நிதிக் கொள்கையை வெளியிட உள்ளது. சில்லறை விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறையாத காரணத்தினால் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் ஆர்பிஐ மேற்கொள்ளாது என்றே தோன்றுகிறது.

இருப்பினும் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென்றால் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x