Last Updated : 17 Mar, 2015 10:16 AM

 

Published : 17 Mar 2015 10:16 AM
Last Updated : 17 Mar 2015 10:16 AM

அலைவரிசை பொதுச் சொத்து, எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமானதல்ல: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

அலைவரிசை என்பது பொதுச் சொத்து. இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானது என்ற தவறான கருத்துகள் தகர்க்கப்பட்டுவிட்டன என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அருண் ஜேட்லி, நேற்று நடைபெற்ற 5-வது தேசிய சமுதாய வானொலி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சராக உள்ள அருண் ஜேட்லி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல், ஒலிபரப்புத் துறையையும் கூடுதலாகக் கவனிக்கிறார்.

தொடக்க விழாவில் பேசிய அவர், பேச்சு சுதந்திரம் என்பது ஒரு ஒலிபரப்பு ஊடகத்துக்கு மட்டுமல்ல, அத்தகைய சுதந்திரம் அதைக் கேட்பவர்களுக்கும் உண்டு. எனவே அனைத்து தகவல்கள், செய்திகளைப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.

தகவல்களும், செய்திகளும் அனைவரையும் சென்றடைய வேண்டுமானால் சமுதாய வானொலி இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பெல் லாம் அலைவரிசை என்பது மாநிலங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்து நிலவியது. ஆனால் அத்தகைய கருத்து இப்போது தகர்க்கப்பட்டு, அலைவரிசை என்பது பொதுச் சொத்து என்ற நிலை உருவாகியுள்ளது என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

அனைத்து சமுதாய வானொலி களுக்கும் பொருந்தக்கூடிய கதைக் களஞ்சியத்தை இந்த விழாவில் ஜேட்லி வெளியிட்டார்.

நாட்டில் இதுவரை 409 சமுதாய வானொலி நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலர் பிமல் ஜுல்கா தெரி வித்தார். இவற்றில் 179 வானொலி நிலையங்கள் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், மற்றவை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் நாட்டில் 600 சமுதாய வானொலி நிலை யங்கள் ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் லைசென்ஸ்

சமுதாய வானொலி நிலையம் தொடங்குவதற்கு ஆன்லைன் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பதற்கான வசதியை விரைவி்ல் தொடங்க உள்ளதாக ஜேட்லி குறிப்பிட்டார்.

சமுதாய வானொலி நிலை யங்கள் தொடங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பினரிடமும் தகவல்களை சென்று சேர்ப்பதற்கு சமுதாய வானொலியைத் தவிர மிகச் சிறந்த ஊடகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x