Published : 13 Mar 2015 09:02 AM
Last Updated : 13 Mar 2015 09:02 AM

வரி ஏய்ப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மொரீஷியஸ் நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிய மோடி இவ்வாறு கூறினார்.

மொரீஷியஸியன் வெளிநாட்டு வங்கி வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜூக்நாத்திடம் மோடி கூறினார்.

எங்களுடைய முக்கியமான உறவு நாட்டை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியா மொரீஷியஸ் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தை வரி ஏய்ப்பு செய்பவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு அதிகளவு மொரீஷியஸ் மூலமாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இரு நாடுகளும் கலந்து ஆலோசித்து வருகின்றன. அதே சமயம், இந்த ஒப்பந்தத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தற்போதைய உடன்பாட்டிலேயே தேவையான தற்காப்பு நடவடிக்கைகள் உள்ளதாகவும் மொரீஷியஸ் கூறி வருகிறது.

மொரீஷியஸ் நாடாளு மன்றத்தில் உரையாற்றும் ஐந்தாவது இந்திய பிரதமர் மோடி.

மேலும் அந்த நாட்டின் தேசிய தினத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

இது தவிர இரண்டு நாடுகளின் மக்களவைத் தலைவர்களும் பெண்கள் என்றும், இந்தியாவில் சுமித்திரா மஹாஜனும் மொரீஷியஸில் சாந்தி பாய் மாயா ஹனனூமான்ஜீ-யும் உள்ளனர் என்று மோடி கூறினார். மொரீஷியஸ் நாட்டின் கட்டுமானத்துறைக்கு 50 கோடி டாலர் அளவுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்குவதாக அறிவித்தார் மோடி.

இந்தியாவை சார்ந்து இருக்கிறோம்

மோடியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மொரீஷியஸ் பிரதமர் “நாங்கள் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். அதே சமயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வரி ஏய்ப்பு செய்பவர்களைத் தடுப்போம்.

இரு நாடுகளிலும் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்சி அமைந்திருக்கிறது. இது வளர்ச்சிக்கு வழி வகுக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x