Published : 17 Mar 2015 10:21 AM
Last Updated : 17 Mar 2015 10:21 AM

பொசிஷனிங்: வலி நிவாரணி சந்தையில் ‘மூவ்’ உத்தி

பாரஸ் பார்மசூட்டிக்கல்ஸ் (Paras Pharmaceuticals) அகமதா பாத்தில் இருக்கிறது இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம். `டி கோல்ட்’ ஜலதோஷ மருந்து, `இட்ச்கார்ட்’ என்னும் சொறி மருந்து ஆகியவை இவர்களின் பிரபல தயாரிப்புகள்.

`மூவ்’ அறிமுகம்

1986 ம் ஆண்டு. தசைப் பிடிப்பு, மூட்டு வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு, ஐயோடெக்ஸ், ஜண்டு பாம், அமிர்தாஞ்சன் போன்ற களிம்புகள் இருந்தன. இவற்றுள், 60 வருடங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நம்பர் 1 தசைப் பிடிப்பு, மூட்டு வலி, உடல் வலி மருந்தாக ஐயோடெக்ஸ் இருந்தது.

பாரஸ், இந்தத் துறையில் தங்கள் தயாரிப்பை அறிமுகம் செய்ய முடிவெடுத்தார்கள். தங்கள் களிம்பு, போட்டித் தயாரிப்புகளைவிட வித்தியாசமானதாக, சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

பிற கிரீம்களைப் போலவே, மூவ், நீலகிரித் தைலம், டர்பன்டைன் ஆயில் எனப்படும் கற்பூரத் தைலம், மெந்தால் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து. வலி இருக்கும் உடற் பகுதியில் தேய்த்தால், அங்கே சூடு ஏற்படும், இதமாக இருக்கும், வலி குறையும், மூலப்பொருட்கள் ஏகதேசம் ஒரே மாதிரி இருந்தாலும், மூவ் பல வித்தியாசங்களோடு வந்தது.

ஐயோடெக்ஸ், ஜண்டு பாம், அமிர்தாஞ்சன் ஆகியவை கருப்பு நிறமாக இருந்தன. அவற்றின் வாசனையும் ரம்மியமானதாக இல்லை. களிம்புகளில் எண்ணெய்ப் பிசுக்கு இருந்தது. உடைகளில் இந்த எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டிக்கொண்டது.

வித்தியாசமாக…

பாரஸ் இந்தக் குறைகள் அனைத்தையும் நீக்கினார்கள். மூவ் களிம்பில் பிசுக்கு இல்லை, நல்ல வாசனை வந்தது. மூவ் நிறம் வெள்ளை. இன்னொரு முக்கிய மாற்றம் போட்டிக் களிம்புகள் அத்தனையும் கண்ணாடி பாட்டில்களில் வந்தன. மூவ், டூத்பேஸ்ட் போன்ற ட்யூபில்.

ஐயோடெக்ஸைவிட அதிக விலைக்கு விற்றால், யாரும் வாங்கமாட்டார்கள். குறைவான விலைக்கு விற்றால், மருந்தின் தரம் பற்றி மக்களுக்குச் சந்தேகம் வரும். ஆகவே, ஐயோடெக்ஸ் விலை அளவில் மூவ் விலையையும் நிர்ணயித்தார்கள்.

ஐயோடெக்ஸ் நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் விளம்பரம் செய்தார்கள். மூவ் இதே பாதையில் தொடர்ந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் தசைப் பிடிப்பு, மூட்டு வலி, உடல் வலி ஆகியவற்றால் அவதிப்படுவதையும், மூவ் தேய்த்தால் வலி குறைந்து நிவாரணம் கிடைப்பதையும் காட்டினார்கள்.

நினைத்தது நடக்கவில்லை

மூவ் விற்பனை சந்தையில் சூடு பிடிக்கத் தொடங்கியது. விரைவிலேயே ஐயோடெக்ஸைப் புறம் தள்ளி, விற்பனையில் முதல் இடம் பிடிப்போம் என்று பாரஸ் நினைத்தார்கள். ஆனால், ஐயோடெக்ஸை அசைக்க முடியவில்லை.

பார்க்கவும், முகரவும் சிறந்த தரம், வலி தீர்ப்பதில் அதே பயன், அதே விலை இத்தனை இருந்தும் ஏன் வெற்றிபெற முடியவில்லை என்று பாரஸ் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் பலவிதமான உடல் வலிகள் வருகின்றன. அவற்றைத் தீர்க்கும் மருந்து என்பதுதான் மூவ், ஐயோடெக்ஸ் போன்ற களிம்புகளின் பொசிஷனிங்காக இருந்தது.

கருத்துக் கணிப்பு

பாரஸ் உடல்வலி, அதன் நிவாரணிகள் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பேட்டி கண்டு அவர்கள் கருத்துகளைக் கேட்டறிந்தார்கள். அப்போது, ஆச்சரியமான சில உண்மைகள் அவர்களுக்குத் தெரியவந்தன.

உடல்வலி, தசைப் பிடிப்பு ஆகியவற்றைவிட மக்களுக்கு அதிகமாகத் தொந்தரவு தந்தது முதுகுவலி. ஆண். பெண், குழந்தை களைவிட, முதுகுவலி பெண்களுக்குத் தான் அதிகமாக வந்தது. சமையல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் ஆகிய குனிந்து நிமிர்ந்து அவர்கள் செய்த வேலைகள் இதற்குக் காரணம்.

முதுகுவலிக்கு மருந்துகள் சாப்பிடுவதையும், களிம்புகள் தடவு வதையும், பெண்கள் தவிர்த்தார்கள். வீட்டு வேலைகளைச் செய்யமுடியாமல் வலி அதிகமாகும்போது மட்டுமே கிரீம்கள் தடவினார்கள்.

மாற்றம்

இந்தக் கணிப்புகளின் அடிப்படையில் பாரஸ், மூவ் க்ரீமின் பொசிஷனிங்கை மாற்றினார்கள். மூவ் முதுகுவலி தீர்க்கும் எக்ஸ்பர்ட் என்னும் பிம்பத்தை மக்கள் மனங்களில், குறிப்பாகப் பெண்கள் மனங்களில் உருவாக்கத் தொடங்கினார்கள். பெண்களின் முதுகுவலியை மையமாக வைத்துத் தொலைக்காட்சி விளம்பரங்கள் வரத் தொடங்கின.

குழந்தையோடு விளையாடும் தாய், கணவனோடு நெருக்கமாக இருக்கும் மனைவி, குடும்பத்துக்குப் பாசத்தோடு சமையல் செய்யும் பெண் எனப் பல்வேறு சூழ்நிலைகளில் பெண்களுக்கு முதுகுவலி வருவதும், மூவ் உடனடி நிவாரணம் தந்து அவர்களைச் சகஜ நிலைக்குத் திரும்பவைப்பது எனக் குட்டி குட்டி நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டன. முதுகுவலி என்றால் உடனடி நிவாரணம் தருவது மூவ் மட்டுமே என்னும் கருத்து மக்களின், குறிப்பாகப் பெண்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்தது.

இரண்டு காரணங்கள்

முதுகு வலிக்கு மூவ் உபயோகிக்கவேண்டும், மூட்டு வலி, தசைப் பிடிப்பு ஆகியவற்றுக்கு ஐயோடெக்ஸ் என்று மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். ஐயோ டெக்ஸிலிருந்து ஏராளமானோர் மூவ்-க்கு மாறினார்கள். பிற தசைப் பிடிப்புகள், உடல் வலிகள் ஆகியவற்றைவிட முதுகுவலி கிரீம்களின் தேவை அதிகம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் பிற வலிகளைவிட முதுகுவலி அதிகமாக ஏற்பட்டது: உடலின் பல பாகங்களைவிட முதுகின் பரப்பளவு அதிகம். ஆகவே, முதுகுவலிக்குப் பிற வலிகளைவிட அதிக அளவு கிரீம் தேவைப்பட்டது. இந்தக் காரணங்களால், விரைவில் மூவ் முதல் இடம் பிடித்தது.

தங்களை முதுகுவலி நிவாரண நிபுணர்களாக நிலைநிறுத்திக்கொண்ட மூவ் இப்போது இன்னொரு யுக்தி செய்தார்கள். பெண்கள் தாங்கமுடியாத முதுகுவலி வரும்போதுதான் மூவ் உபயோகித்தார்கள். ஆரம்பத்திலேயே மூவ் தேய்த்தால் அவர்கள் குடும்பப் பொறுப்புகளை இன்னும் சிறப்பாகச் செய்யமுடியும் என்னும் எண்ணத்தைப் பெண்கள் மனங்களில் விளம்பரங்கள் மூலம் பதியவைத்தார்கள். மூவ் விற்பனை இன்னும் உயர்ந்தது.

கைமாறியது

2010. டெட்டால், லைசால், ஸ்ட்ரெப்ஸில்ஸ், டிஸ்ப்ரின் போன்ற பொருட்கள் தயாரிக்கும் RB குழுமம் பாரஸ் கம்பெனியை 2010 இல் ரூ. 3,260 கோடிக்கு வாங்கினார்கள். பாரஸ் நிறுவன உரிமையாளர் கிரீஷ் பட்டேல் இதனால் அடைந்த லாபம் சுமார் 900 கோடி ரூபாய். இதற்கு முக்கிய காரணம், மூவ் பெற்ற மாபெரும் வெற்றி!

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x