Last Updated : 20 Mar, 2015 10:01 AM

 

Published : 20 Mar 2015 10:01 AM
Last Updated : 20 Mar 2015 10:01 AM

சொகுசுக் கார் பிரியர்களை குறி வைக்கும் ஸ்கோடா..

சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஸ்கோடா நிறுவனம் தமிழகத்தில் தனது சமீபத்திய படைப்புகளை சந்தைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஸ்கோடா கார்களுக்கான விற்பனை மற்றும் சேவை மையங்களை அதிகப்படுத்தும் முடிவை எடுத்துள்ளது.

வெளிநாட்டு கார்கள் என்றாலே அவை பெரும்பாலும் ஜெர்மனி, ஜப்பான், கொரியாவைச் சேர்ந் தவை என்ற நினைப்புதான் நமக்கெல்லாம் வரும். ஆனால் உலகம் முழுவதுமுள்ள சொகுசு கார் பிரியர்களால், பெரிதும் விரும்பப்படுகிற ஸ்கோடா கார்கள் செக் குடியரசிலிருந்து உற்பத்தியாகின்றன.

ஆஸ்திரியா, ஜெர்மனி, போலந்து என என பரபரப்பான ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் உள்ள செக் குடியரசு, ஸ்கோடாவின் மூலம் ஆட்டொமொபைல் துறையில் அதிக அளவில் வருவாய் ஈட்டி வருகிறது.

ஏனைய மேற்கத்திய கார் தயாரிப்பு நிறுவனங்களைப் போலவே, ஸ்கோடாவுக்கும் பாரம்பரிய வரலாறு உண்டு. ஆரம்பத்தில் (1895) லாரின் & கிளமெண்ட் என்னும் மோட்டார் சைக்கிள் நிறுவனம்தான் நிர்வகித்து வந்தது. முதலாம் உலகப்போரின்போது லாரின் & கிளமெண்ட் நிறுவனம் டிரக் தயாரிப்பில் கவனம் செலுத்தவே, கார் தயாரிப்புக்கான உரிமையை ‘ஸ்கோடா வொர்க்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியது. இதன் முழு உரிமையையும் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் 2000-ம் ஆண்டில் வாங்கியது.

ஸ்கோடா சிட்டிகோ, ஸ்கோடா ராபிட், ஸ்கோடா யெட்டி, ஸ்கோடா ரூம்ஸ்டெர், ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஃபேபியா, ஸ்கோடா ஆக்டாவியா, ஸ்கோடா ஃபெலிசியா என்ன பல்வேறு மாடல்களில் கார்கள் உலகம் முழுக்க விற்பனையாகின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 10 லட்சம் கார்கள் உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளன.

இந்நிலையில் ஸ்கோடா ஆக்டாவியா, ஸ்கோடா யெட்டி, ஸ்கோடா சூப்பர்ப் மாடல்களில் பல்வேறு மாற்றங்களை செய்து அதற்கு சீல் எடிஷன் என பெயரிட்டு அதனை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்கோடா நிறுவனம். இந்த சீல் எடிஷன் கார்களின் அறிமுக நிகழ்ச்சியை சென்னையில் ஸ்கோடாவின் டீலரான குருதேவ் மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின்போது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய விற்பனை துறை தலைவரான மகேஷ் திவாரி கூறியதாவது:

ஸ்கோடா ஆக்டாவியா, ஸ்கோடா யெட்டி, ஸ்கோடா சூப்பர்ப் போன்ற கார்களில் உள்ள நிறை குறைகளை அறிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். இதன்படி கார் களின் உட்புறத்தில் கருப்பு நிறத்தில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

தோலாலான இருக்கைகள், கருப்பு வண்ணத்திலான டேஷ் போர்டு, கதவு டிரிம்கள், அல்காண்ட்ரா இருக்கைகள், வழியறியும் கருவி, கண்காணிப்பு கண்ணாடி, பின்புற கேமரா, பார்க்கிங் செய்ய உதவிடும் பார்க்ட்ரானிஸ் முறை என நிறைய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கார்கள் மட்டுமன்றி எங்களுடைய மற்ற கார்களுக்கான சந்தையையும் தமிழ்நாட்டில் அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

எங்களுடைய கார்களில் ரேபிடுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் ஸ்கோடா ஆக்டாவியா மாடல் இந்தியாவில் 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கும் நல்ல அளவில் வரவேற்பு உள்ளது. இந்த காரை 5 முதல் 6 வாரங்கள் வரை காத்திருந்து வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளார்கள்.

எங்களது உற்பத்தி மையங்கள் செக் குடியரசு, ரஷியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளன. இந்தியாவில் அவுரங்காபாத்தில் எங்களது உற்பத்தி மையம் இயங்கி வருகிறது.

மேலும் எத்தனை எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்கிறோம் என்பதை காட்டிலும், எந்த தரத்தில், எப்படிப்பட்ட கார்களை விற்கிறோம் என்பது முக்கியம். எனவே, மக்களின் தேவைக்கு ஏற்ப சொகுசு கார்களை விற்பனை செய்வது என்பதில் கவனமாக உள்ளோம். மேலும் இந்தியா முழுவதும் 75 டீலர்கள் உள்ளனர். இவர்களில் 70 டீலர்களிடம் சர்வீஸ் செய்வதற்கான வசதிகள் உள்ளன.

தமிழகத்தில் 8 விற்பனை மையங்களும் 9 சேவை மையங் களும் இயங்கி வருகின்றன. இந்த வளர்ந்து வரும் வாடிக்கை யாளர்கள் ஆதரவை கணக்கில் கொண்டு விற்பனை மையங்கள் மற்றும் சேவை மையங்களை இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மேலும் அதிகப் படுத்தவுள்ளோம் என்றார்..

தமிழகத்தில் ஸ்கோடா கார்களை விற்பனை செய்து வரும் குருதேவ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான பராஸ் வைத் கூறியது:

“தமிழகத்தில் ஸ்கோடா கார்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு மட்டுமே 1500-க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதனடிப்படையில்தான் தற்போது சீல் எடிஷன் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கோடா ராபிட் காரின் விலை ரூ.7,68,932 ஆகவுள்ளது. ஆக்டா வியாவின் விலை ரூ.16,74,244 ஆகவுள்ளது.

யெட்டி மாடலின் விலை ரூ.20,66,088 ஆகும். ஸ்கோடா சூப்பர்பின் விலை ரூ.22,23,844 ஆகும். இது அனைத்தும் விற்பனையக விலை” என்றார்.

manikandan.m @thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x