Published : 14 Mar 2015 11:16 AM
Last Updated : 14 Mar 2015 11:16 AM

ரூ.20,495 கோடி வரி செலுத்த கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

எண்ணெய் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ரூ. 20,495 கோடி வரி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் கெய்ர்ன் பிஎல்சி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வில் ஈடுபட்டுள்ளது.

2006-2007-ம் ஆண்டில் கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவனம், இந்திய செயல்பாடுகளுக்கென தனியாக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை உருவாக்கியது. இவ்விதம் பங்குகளை மாற்றம் செய்தபோது மூலதன லாபமாக ரூ. 24,500 கோடியை அடைந்ததாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இதற்காக ரூ. 10,247 கோடியை செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இந்திய நிறுவனமாக மாற்றி பங்குச் சந்தையில் பட்டியலிட்டு ஆதாயமடைந்ததை வரித்துறை சுட்டிக்காட்டியது.

இது தொடர்பாக வரித்துறை அனுப்பிய நோட்டீஸை கெய்ர்ன் இந்தியா நிறுவனம் நேற்று பெற்றது. அதில் முதலீட்டு ஆதாயத்துக்கு (2006-07) வரி செலுத்தவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. கெய்ர்ன் யுகே ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திலிருந்து கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு பங்குகளை மாற்றிய நடவடிக்கையானது உள்நடவடிக்கை என்றும் இதன் மூலம் கெய்ர்ன் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் பட்டியலிட வழியேற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில் ரூ. 20,495 கோடி (செலுத்த வேண்டிய தொகை ரூ. 10,247 கோடி மற்றும் அதற்கான உத்தேச வட்டி ரூ. 10,248 கோடி) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பதிலளித்துள்ள கெய்ர்ன் இந்தியா நிறுவனம், இத்தொகையை செலுத்தப் போவதில்லை என்றும் நடவடிக்கையை எதிர் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய வரி விதிப்பு சட்டங்களுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் செயல்படுவதாகவும், வருமான வரி மதிப்பீடு, பங்கு பரிமாற்ற விலை மதிப்பீடு ஆகியன 2006-07-ம் நிதி ஆண்டில் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வெளிநாடுகளைச் சேர்ந்த வோடபோன் மற்றும் ராயல் டச் ஷெல் பிஎல்சி நிறுவனங்கள் இதேபோன்ற முன் தேதியிட்ட வரி விதிப்புகளுக்கு ஆளாயின. இப்போது இந்த வரிசையில் கெய்ர்ன் இந்தியா நிறுவனமும் சேர்ந்துள்ளது.

ஆனால் முன் தேதியிட்டு வரி விதிப்பு செய்வதை அரசு ஒரு போதும் விரும்பவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் வோடபோன் மீதான மேல் முறையீட்டு வழக்கை தொடரப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x