Published : 19 Apr 2014 12:00 AM
Last Updated : 19 Apr 2014 12:00 AM
அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) குறித்து விவாதிப்பதற்காக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய அமைச்சரவைச் செயலர் அஜீத் சேத். இந்த கூட்டம் திங்கள்கிழமை (ஏப் 21) நடைபெற உள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (யுஎஸ்எப்டிஏ) விதிக்கும் தடைகளை சமாளிப்பதற்கான உத்திகள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.
இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க தொழில் நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசு மூலம் இந்தியாவுக்கு நெருக்குதல் அளிக்க வற்புறுத்துகின்றன. அறிவுசார் சொத்துரிமை விவகா
ரத்தில் இந்தியாவை முன்னு ரிமை வெளிநாடுகள் பட்டி யலில் சேர்க்குமாறு இவை வலியுறுத்துகின்றன. இவ்விதம் பட்டியலில் இந்தியா சேர்க்கப் பட்டால் வர்த்தகம் தொடர் பான தடைகளை விதிப்பது அமெரிக்காவுக்கு மிக எளிதாகி விடும்.
இந்த விஷயத்தில் உரிய முடிவுகளை எடுக்க அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி இந்த விஷயத்தில் தீர்வு காணுமாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எஸ். ஜெய்சங்கர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமையை சர்வதேச தரத்துக்கு கடைப்பிடிப்பதில்லை என்று அமெரிக்க நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் உரிய முடிவை எடுக்குமாறு மத்திய அமைச்சரவைச் செயலர் அஜீத் சேத்தை இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங் கேட்டுக் கொண் டுள்ளார். அதனடிப் படையில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அஜீத் சேத், சுஜாதா சிங் மற்றும் வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கேர், இந்திய தொழில்துறை மேம்பாட்டுச் செயலர் அமிதாப் காந்த், சுகாதாரத்துறைச் செலர் லவ குமார் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்வர் எனத் தெரிகிறது.
வர்த்தக தடை விதிக்கப்பட்டால், இந்தியாவுக்கு இப்போது அளிக்கப்படும் ஜிஎஸ்பி எனப்படும் பொதுப்படையான சலுகைகள் ரத்தாகும். இதையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இப்போது குறைந்த விலையிலான இந்திய தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் அனுமதிக்கப்படுகின்றன. தடை விதிக்கப்பட்டால் இத்தகைய தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
இவ்விதம் தடை விதிக்கப்பட்டால் அது நடுத்தர மற்றும் சிறிய ரக தொழிற்சாலைகளை வெகுவாக பாதிக்கும். இருப்பினு்ம் இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படாது என்றே தோன்றுகிறது..
விரும்பும் நாடுகள் பட்டியில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்தால் இதுகுறித்து சர்வதேச வர்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஓ) புகார் செய்யப் போவதாக இந்தியா தெரிவித்திருந்தது.
இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா கூறும் குற்றச் சாட்டு பாரபட்சமானது என்றும், இந்திய நிறுவனங்கள் பின்பற்றும் அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) சர்வதேச விதிமுறைகளுக்கு இணையானது என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க வர்த்தக விதிமுறைகள் சட்டத்தின்படி, முன்னுரிமை வெளிநாடுகள் பட்டியலில் உள்ள நாடுகள் என்றால் அந்த நாடுகளிலிருந்து வரும் பொருள்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காது. அந்தப் பொருள்களை சந்தைப்படுத்த உரிய சந்தை வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இந்தியாவில் பின்பற்றப்படும் ஐபிஆர் விதிமுறைகள் மற்றும் இந்தியாவில் நிலவும் வெளிநாட்டு முதலீட்டு சூழல் ஆகியவற்றை ஒபாமா அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு ஹைதராபாதைச் சேர்ந்த நாட்கோ பார்மா நிறுவனம் தயாரிக்கும் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து 30 மடங்கு விலை குறைவாக விற்பனை செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய மருந்து தயாரிக்க காப்புரிமை பெற்றுள்ள பேயர் கார்ப்பரேஷன் தயாரிப்புகளை விட இந்திய தயாரிப்பு விலை குறைவாக இருந்ததே இதற்குக் காரணமாகும்.
2012-13-ம் நிதி ஆண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மருந்துகளின் அளவு 1,460 கோடி டாலராகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளில் 26 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT