Last Updated : 07 Mar, 2015 10:14 AM

 

Published : 07 Mar 2015 10:14 AM
Last Updated : 07 Mar 2015 10:14 AM

முத்ரா திட்டத்தால் இந்தியாவில் கந்துவட்டித் தொழிலுக்கு முற்றுப்புள்ளி: எஸ்.குருமூர்த்தி சிறப்புப் பேட்டி

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘முத்ரா’ திட்டத்தால் கந்து வட்டிக்கு சிறு வணிகர்கள் கடன் வாங்குவது பெருமளவில் குறையும் என்று பொருளாதார விமர்சகர், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு தாக்கல் செய்துள்ள முதல் முழு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, அமைப்பு சாரா, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவித் திட்டம் (முத்ரா) பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாகவும், மற்றொரு முக்கிய அறிவிப்பான தங்கச் சேமிப்புத் திட்டம் தொடர்பாகவும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

‘முத்ரா’ அமைப்பு நடைமுறைக்கு சாத்தியமா? அதன் சவால்கள் என்ன?

இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கொண்டு வந்திருக்கும் திட்டம் இது. எந்தவித வங்கிக் கடனும் கிடைக்கப் பெறாத சாதாரண வியாபாரிகள், சிறு, குறுந் தொழில் வணிகர்களின் நலனுக்காக உதித்த பெரிய பொருளாதார சிந்தனை இது. அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15% ஆகும்.

இதில் பங்குச் சந்தையில் பதிவு செய்திருக்கும் நிறுவனங்களின் பங்கு வெறும் 5 சதவீதமே. பொருளாதார ஆய்வறிக்கையின்படி (2014) 5.8 கோடியாக உள்ள இந்த ஒருங்கிணைக் கப்படாத, அமைப்பு சாரா சிறு தொழில்களின் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் அல்லாத வேலை வாய்ப்பில் 90 சதவீதத்தினை இச்சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகளேஅளிக்கின்றன. அதே சமயம், அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்போ வெறும் 10 சதவீதம் மட்டுமே.

ஆனால், இந்த ஒருங்கிணைக்கப் படாத அமைப்புகளுக்கு அவர்களுக்கான கடன்தேவையில் 4% மட்டுமே கிடைக் கிறது. ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கோ 1991 முதல் 2012 வரை ரூ.54 லட்சம் கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. எனினும் அக்காலகட்டத்தில் அவர்களால் கூடுதலாக 28 லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்க முடிந்தது.

ஆனால்,கடன் வசதியில்லாத, ஒருங்கிணைக்கப்படாத தொழில்களைச் செய்யும் மக்களால் 46 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், 5.8 கோடி குறுந்தொழில் செய்வோர்கள் மூலமாக 12.8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அவர்களுக்கு அரசு கடனுதவி இதுவரை கிடைக்கவில்லை. உலகமயமாக்கலால் இவர்கள் நசிந்துபோவார்கள் என்று முன்னவர்கள் நினைத்தனர். மாறாக, பெட்டிக்கடை, ஆட்டோ ஓட்டுவது, பூக்கடை, சைக்கிள் ரிப்பேர் ஆகியவை உள்ளிட்ட பல லட்சம் சுயதொழில்கள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. இந்த அமைப்புகளுக்கு கடனுதவி அளிக்கவேண்டுமென சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் பல காலமாக வலியுறுத்தி வந்தோம். இப்போதுதான் அது சாத்தியமாகியுள் ளது.

தனியார் நிறுவனங்களுக்கு 9% முதல் 14% வரையிலான வட்டிவிகிதத்தில் கடன் கிடைக்கிறது. ஆனால் சிறுதொழில் செய்வோர், கந்து வட்டிக்காரர்களிடம் (பைனான்சியர்கள்) அதைவிட 10 மடங்கு (100% - 120%) அதிகமாக கடன் வாங்கி தொழில் செய்கின்றனர்.

இருப்பினும், கடும் உழைப்பின் காரணமாக லாபம் பார்க்கின்றனர். அவர்களுக்குக் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் கிடைத்தால் நாடு இன்னும் செழிக்கும்.

கடன் கொடுப்பவர்களை (பைனான்சியர்கள்) தேடிப்பிடித்துகடன் கொடுப்பது வங்கிகளுக்குச் சாத்தியமா?

தாம்பரத்தில் ஒரு சிறு வணிகருக்கு கடன் தரவேண்டும் என்றால், அப்பகுதி யில் கடன் கொடுத்து வாங்கும் கந்து வட்டிக்காரருக்குத்தான் பயனாளிகளைத் தெரியும். உதாரணத்துக்கு, கரூர் போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் பேர் சேர்ந்து, கரூர் பைனான்சியர்கள் சங்கத்தை அமைத்து 40 ஆண்டுகாலமாக நல்ல முறையில் கடன் கொடுத்து வாங்குகின்றனர்.

அது போன்ற லட்சக்கணக்கான உள்ளூர் பைனான்சியர்களை நாடு முழுவதும் கண்டறிந்து, ‘முத்ரா’ பதிவு செய்யும். இத்திட்டத்துக்காகத்தான்சுதேசி இயக்கம் பல ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டுவந்தது. இது, நாட்டைப் புரிந்து கொண்டவர்களால் இந்தியக் கண்ணோட்டத்துடன் உருவாக் கப்பட்டுள்ளது. பயனாளிகளைத் தேடிப்பிடித்து பதிவு செய்வது சவாலான வேலையே. இதற்கான தனி்ச்சட்டத்தில் அதற்கான வழிவகைகள் இடம்பெற்றிருக்கும்.

முத்ராவில் கொடுக்கப்படும் கடன், பயனாளிகளை அடைவதைக் கண்காணிப்பதெப்படி?

சிறு வியாபாரிகளுக்கு கடன் அளிக்கும் பெரும்பாலான பைனான்சியர்களும், கந்து வட்டிக்காரர்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் கடன் வாங்கி, அதை மேலதிக வட்டிக்குக் கொடுக்கின்றனர். முத்ராவில் பதிவு செய்யும், பைனான்சியர்கள், சிறு வணிகர்களிடம் அதிக லாபம் வசூலித்துவிடாதபடி, வட்டி விகிதத்தை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கும். நபார்டு வங்கியைப் போல், இதர வங்கிகளிடம் நிதியைப் பெற்று, அதனை மறுசுழற்சி (ரீபைனான்ஸ்) அடிப்படையில் ‘முத்ரா’ வட்டிக்குக் கொடுக்கும்.

பொதுவாக, பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கும். அதனால், பதிவு செய்யப்படாத சிறுதொழில் முனைவோருக்கும் தொடர்பே இல்லாமல் உள்ளது. அதனால், பதிவு செய்து நிதி கொடுப்பதற்குப் பதிலாக, நிதி கொடுத்து அதன்பிறகு அவர்களைப் (சிறு தொழில் முனைவோரை) பதிவு செய்வதே ‘முத்ரா’-வின் நோக்கம். குறைந்த வட்டியில் பணம் கொடுக்கும்போது கந்து வட்டிப் பிரச்சினையும் பெருமளவில் குறைந்துவிடும். கந்துவட்டி மட்டுமல்ல. மற்ற வகை கடன்களுக்கான வட்டி விகிதங்களும்குறைந்துவிடும்.

தங்க சேமிப்புப் பத்திரம் (கோல்டு பாண்ட்) திட்டத்தால் என்ன பயன்?

அமெரிக்கா, ஐரோப்பாவில் தங்கத்தை பொதுமக்கள் வைத்திருக்கமுடியாது. அது அரசாங்கத்தின் சொத்து. ஆனால், இந்தியர்களின் உணர்வில் தங்கம் என்பது இரண்டறக் கலந்தது. இதனை பொருளாதார விஷயம் என ஒதுக்கிவிடமுடியாது.

தங்கமாக வாங்குவதற்குப் பதிலாக பத்திரத்தை பொதுமக்கள் வாங்கினால்,குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அது தங்கமாகதிருப்பித் தரப்படும். தங்கத்தைத் தராமல் அதற்குண்டான மதிப்பில் பத்திரமாக தருவதால், அரசாங்கத்திடம் இருக்கும் தங்கம், கரையாமல் இருக்கும். அரசிடம் தங்கம் கையிருப்பு அதிகம் இருந்தால், வெளிநாட்டில் தங்கம் வாங்கத் தேவையில்லை. உலகில் நான்கில் ஒரு பங்கு தங்கத்தை இந்தியாதான் வாங்குகிறது.

நாம் தங்கம் வாங்குவது குறைந்தால் உலகச்சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துவிடும். நம்மிடம் தங்க இருப்பு அதிகமிருந்தால் உலகையே மிரட்டலாம். இந்த ஆண்டு தங்கத்தை இறக்குமதி செய்யமாட்டோம் என்று நாம் கூறும் நிலை ஏற்பட்டால் தங்கத்தின் விலை சட்டென்று சரிந்துவிடும்.

சீனாவும், நாமும் சேர்ந்து உலகில் 50 சதவீத தங்கத்தை வாங்குகிறோம். இரு நாடுகளும் இணைந்தால் உலக தங்கச் சந்தையே நம் கைகளில் வந்துவிடும்.

வங்கிகளில் தங்கத்தைச் சேமிக்கும் திட்டத்தால், வங்கிக்கும், மக்களுக்கும் என்ன பயன்?

நம் நாட்டில் மட்டும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டன் தங்கம் தனியாரிடம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த அளவுக்கு, ஆபரணமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. எனினும் இதில், குறைந்தது 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை ஆபரணமாக்கப்படாத தங்கம் இருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், இதனை பொதுமக்கள் முன்வந்து வங்கிகளில் டெபாசிட் செய்யவேண்டுமானால் அது எப்படி வந்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது பெரும்பாலும் ‘கருப்பு’ தங்கமாகத்தான் இருக்கும். ‘கருப்பு’ தங்கம் வெளியே வரவேண்டுமெனில் வருமான வரி கேட்கக்கூடாது. அதற்கு அரசுக்குத் துணிவு தேவை. அதைச் செய்ய முடியாவிட்டாலும் நான் குறைகூற மாட்டேன். ஆனால், இது உலகத்தோடு நாம் நடத்தும் போராட்டம். ரிசர்வ் வங்கியிடம் 3 ஆயிரம், 4 ஆயிரம் டன் இருப்பு இருந்தால், உலக தங்கச்சந்தை நம் வசமாகும்.

வங்கியில் தங்கம் பயனின்றி கிடந்தால் அரசுக்கு என்ன லாபம்?

நகைக்கடை அதிபர்களிடம் தலா 200, 300 கிலோ தங்கம் சும்மா இருக்கும். வரி விலக்குக் கொடுத்தால் அதெல்லாம் வெளியேவரும். தங்களிடம் டெபாசிட் செய்யப்படும் தங்கத்தை வங்கிகள் விற்று பணமாக மாற்றிவிடும்.

தங்கத்தை டெபாசிட் செய்தவர்கள் திரும்பக் கேட்கும்பட்சத்தில், ‘பார்வர்டு மார்க்கெட்டில்’ தங்கத்தை விற்று, வங்கிகள் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும். இதனால் இருதரப்புக்கும் லாபம்.

சீனாவும், நாமும் சேர்ந்து உலகில் 50 சதவீத தங்கத்தை வாங்குகிறோம். இரு நாடுகளும் இணைந்தால் உலக தங்கச் சந்தையே நம் கைகளில் வந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x