Published : 17 Apr 2014 11:25 AM
Last Updated : 17 Apr 2014 11:25 AM
தொழில் ஆரம்பிப்பதற்கு இரண்டாவது வகையான பார்ட்னர்ஷிப் நிறுவனங்களை குறித்துப் பார்ப்போம்.
பார்ட்னர்ஷிப்: நாம் ஏற்கெனவே கண்டதுபோல் நீங்கள் தொழில் ஆரம் பிப்பதற்கு மற்றொருவரின் மூலதனமோ அல்லது அறிவோ தேவைப்பட்டால் பார்ட்னர்ஷிப்பாக ஆரம்பிப்பது நல்லது. பார்ட்னர்ஷிப் தொழிலுக்கு அடிப்படை பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் (PARTNERSHIP DEED) தான். இந்த ஒப்பந்தத்தை, உங்களுக்கு விவரம் தெரிந்திருக்கும் பட்சத்தில் நீங்களாகவே எழுதிக்கொள்ளலாம். இல்லையேல் ஒரு ஆடிட்டர் அல்லது கம்பெனி செகரட்டரி உதவியுடன் எழுதிக்கொள்ளலாம். இந்த பத்திரத்தில் எந்த சதவிகிதத்தில் உங்கள் ஒவ்வொருவரின் மூலதனம் உள்ளது, மற்றும் உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புகள் என்ன போன்ற விபரங்களையெல்லாம் கண்டு கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவும் செய்து கொள்ளலாம்.
இந்தப் பதிவுச் சான்றையும் மற்றும் பார்ட்னர்களின் அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்றுகளையும் கொண்டு வங்கிக் கணக்கை பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பெயரிலேயே துவக்கிக் கொள்ளலாம். பொதுவாக பார்ட்னர்ஷிப் நிறுவனங்களில் ஒரு பார்ட்னர் மேனேஜிங் பார்ட்னர் ஆக இருப்பார். இவருக்கு வங்கிக் கணக்குகளை இயக்குவது மற்றும் பிற முக்கியச் செயல்களை செய்வதற்கு பிற பார்ட்னர்கள் அனைவரும் சேர்ந்து பவர் கொடுக்கலாம்.
பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைத் துவக்குவதற்கு குறைந்தபட்சமாக இரு நபர்களும் அதிகபட்சமாக இருபது நபர்களும் இருக்கலாம்.
தினசரி நிறுவனத்தில் வேலை செய்யும் பார்ட்னர்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். பார்ட்னர்ஷிப் நிறுவனத்திற்கு என்று பான் கார்டு தனியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வகை நிறுவனங்களில் உள்ள அசௌகரியம் என்னவென்றால் பார்ட்னர்களின் சொத்துக்களை, தொழிலில் ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடுசெய்ய எதிர் பார்ட்டி உரிமை கோரலாம் (Unlimited Liability). இவ்வகை நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் வருமான வரியாக 30% கட்ட வேண்டியது வரும். அவ்வாறு வரி கட்டி பிரித்துக் கொண்ட லாபத்திற்கு, பார்ட்னர்கள் பிறகு வரி ஏதும் கட்ட வேண்டாம்.
இவ்வகை நிறுவனங்களில் உள்ள பிற சாதகங்கள்:
ஆரம்பிப்பது சுலபம், தேவைப்படும் மூலதனம் மற்றும் அறிவு கிடைப்பது சுலபம், வளைந்து கொடுக்கும் தன்மையுடைய அமைப்பு (Flexible), ரிஸ்க்கைப் பகிர்ந்து கொள்ளலாம், இரண்டு நபர்களுக்கு மேல் சேர்ந்து முடிவு எடுப்பதால், முடிவு நன்றாக இருக்கும்.
அதேபோல் தொழில் நஷ்டமடையும்போது நிறுவனங்களை மூடுவது சுலபம்
பாதகம் என்று பார்க்கும்போது, அனுபவம் இல்லாத பார்ட்னர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு தொழிலை மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிற பார்ட்னர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருவர் தனது பங்கை மற்றொருவருக்கு விற்க முடியாது. மொத்தத்தில் பிறரின் அறிவு அல்லது முதலீடு தேவைப்படும் சிறிய தொழில்களுக்கு பார்ட்னர்ஷிப் வகை ஒரு சிறந்த தொழில் அமைப்பாகும்.
எல்.எல்.பி (LLP Limited Liability Partnership): இதில் மூன்றாவது வகையான தொழில் அமைப்பு எல்.எல்.பி முறையாகும். இவ்வகையில் கம்பெனி துவக்குவதற்கு சமீபத்தில்தான் நமது மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
இவ்வகையில் தொழிலை ஆரம்பிப்பதில் பார்ட்னர்ஷிப்பில் இருக்கும் வசதியும் அதே சமயத்தில் ஆரம்பிப்பவரின் கடன் பொறுப்பு (Liability) கம்பெனிகளைபோல ஒரு வரையறைக்குள்ளும் இருக்கும். மேலும் அரசாங்க கட்டுப்பாட்டுச் (Compliance) செலவுகளும் குறைவாக இருக்கும். ஆகவே எனக்கு பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் உள்ள வளையும் தன்மையும் வேண்டும் அதே சமயத்தில் எனது கடன் பொறுப்பு (Liability) ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இவ்வகை அமைப்பு சேவை துறையில் கூட்டாக தொழில் நடத்துபவர்களுக்கு பொருந்தும். குறிப்பாக வக்கீல்கள், ஆடிட்டர்கள், டாக்டர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களுக்கு இந்த தொழில் முறை அமைப்பு மிகவும் பொருந்தும். இவ்வகை தொழில் முறையின் முக்கிய அம்சங்களாவன:
இவ்வகை தொழில் அமைப்பு எல்.எல்.பி சட்டம் 2008-இன் கீழ் வரும்.
எல்.எல்.பி நிறுவனம் சட்டரீதியாக அதன் பார்ட்னர்களில் இருந்து தனித்து ஒரு தனிநபர்போல நிற்கும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் லாப நோக்குடன் ஆரம்பிக்கும் ஒரு தொழில் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தை ஆர்.ஓ.சி (ROC - Registrar Of Companies) மூலம் பதிவு செய்து கொள்ளவேண்டும். ஆர்.ஓ.சி மத்திய கார்ப்பரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் வருகிறது. எல்.எல்.பி என்ற அமைப்பு கம்பெனிகளை போல ஒரு அழியாத அமைப்பாகும்.
ஒவ்வொரு பார்ட்னர்களின் கடமையும் உரிமையும் ஒப்பந்தத்தில் கண்டு கொள்ளலாம். எல்.எல்.பி சட்டம் 2008 பார்ட்னர்கள் தங்களுக்கு ஏற்றாற் போல ஒப்பந்தத்தை செய்து கொள்ள வசதி செய்து கொடுத்திருக்கிறது.
எல்.எல்.பி தனது வரவு செலவு கணக்கை ஒவ்வொரு வருடமும் ரிஜிஸ்ட்ராரிடம் சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசாங்கம் எல்.எல்.பி-யின் நடவடிக்கைகளை பரிசோதனை செய்யும் உரிமை உள்ளது.
பார்ட்னர்ஷிப் சட்டம் எல்.எல்.பி-க்கு செல்லுபடியாகது.
எல்.எல்.பி-யில் வரும் வருமானத்திற்கு பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை போல வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
இவ்வகையான நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு பதிவு செய்யும் செலவு மிகவும் குறைவு.
எல்.எல்.பி-யில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒரு பார்ட்னர் தனது ஓனர்ஷிப்பை மற்றொருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியும் உள்ளது.
மேற்கண்டதுபோல் பல சிறப்பம்சங்களை கொண்டது எல்.எல்.பி அமைப்பு. ஆகவே நீங்கள் சேவை துறையில் ஒரு தொழிலை சில பார்ட்னர்களுடன் ஆரம்பிக்க நினைத்தால் எல்.எல்.பி முறையில் ஆரம்பிப்பதற்கு நீங்கள் தாராளமாக யோசிக்கலாம்.
இவ்வகை அமைப்பின் அசௌகரியம்: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால், இன்னும் இவ்வகை அமைப்பு பிரபலமாகவில்லை. இவ்வகை அமைப்பைப் பற்றி அதிக விழிப்புணர்வும் தொழில் சார்ந்தவர்களிடம் இல்லை.
வரும் வாரத்தில் பிற தொழில் வகைகளை பற்றி விரிவாகக் காண்போம்.
prakala@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT