Published : 24 Feb 2015 11:22 AM
Last Updated : 24 Feb 2015 11:22 AM
இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள்.
பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன.
இது மட்டுமல்ல, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் வாய்ப்பை இ-காமர்ஸ் தருகிறது. சிதம்பரம், கோயம்பத்தூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய தமிழகத்தின் பல ஊர்களில் இ காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
புத்தகங்கள், எலெக்ட்ரானிக் சாமான்கள், ஜூவல்லரி மட்டுமல்லாமல், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தூத்துக்குடி மக்கரூன்ஸ், நாகர்கோவில் சிப்ஸ், சாத்தூர் காரச்சேவு என, நாம் இணையதளங்களில் விற்கும் என்று நினைத்தே பார்த்திராத பல ஐட்டங்களை இந்தப் புதிய தொழில் முனைவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
இத்தனைக்கும் காரணம் என்ன தெரியுமா? ``தரமான பொருட்களை மலிவான விலையில், கடை கடையாகத் தேடி அலையாமல், வீட்டில் இருந்தபடியே, நாம் கேட்கும் பொருள் வீடு தேடி வரும் வசதி கொண்டது ஆன்லைன் மார்க்கெட்டிங்” என்னும் அபிப்பிராயம் ஆழமாக மக்கள் மனங்களில் பதிந்திருப்பதுதான். இந்தப் பொசிஷனிங்கை உருவாக்கியிருப்பவர், ஜெஃப் பெஸோஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜெஃப்ரி பெஸோஸ் (Jeffrey Bezos).
இ-காமர்ஸ் என்கிற கோடிக் கோடியாய்ப் பணம் கொட்டும் புதுத் துறையைக் கண்டுபிடிக்கிற ஐடியா ஜெஃப் பெஸோஸூக்கு எப்படி வந்தது?
ஜெஃப் படிப்பில் எப்போதும் முதல் ராங்க்தான். புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் துறைகளில் பட்டம் பெற்றார். கம்ப்யூட்டர் தொடர்பான வேலையில் தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்ள முடிவு செய்தார்.
பங்குச் சந்தையில் கம்ப்யூட்டர் அதிகமாகப் பயன்படத் தொடங்கியிருந்த காலம் அது. கம்ப்யூட்டரில் அபாரத் திறமை கொண்ட அவரைத் தேடி வேலைகள் வந்தன. பிட்டெல் (Fitel), பாங்கர்ஸ் டிரஸ்ட் (Bankers Trust), டி. ஈ. ஷா கம்பெனி (D. E. Shaw and Co) ஆகிய பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்களில் பணியாற்றினார். முப்பது வயதில் மூத்த துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.
1994 ம் வருடம். 1993 ஐவிட, இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 மடங்கு அதிகமானது. ஜெஃப் இன்டர்நெட்டின் மாபெரும் சக்தியை உணர்ந்தார். இந்த வலிமையான ஆயுதம் தகவல் பரிமாற்ற வட்டத்துக்குள் மட்டுமே முடங்கி விடக்கூடாது என்று உணர்ந்தார்.
‘என்ன செய்யலாம்?’ ஜெஃப் மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் கனவுகள், திட்டங்கள், கணக்குகள். அப்போது மெயில் ஆர்டர் பிசினஸ் என்னும் . தபால் அஞ்சல் முறை வியாபாரம் பிரபலமாக இருந்தது.
இன்டர்நெட் என்பது தபால் அஞ்சலின் இருபதாம் நூற்றாண்டு அவதாரம். தபால் அஞ்சலில் பொருள்களை விற் பதைப்போல் இன்டர்நெட்டில் விற்றா லென்ன? இதுதான் ஜெஃப்பின் ஐடியா.
ஜெஃப் வித்தியாசமான ஆள். ``கிடைச்சாச்சு ஐடியா” என்று கண்ணை மூடிக்கொண்டு ஆக்ஷனில் குதிப்பவரல்ல, பக்காவாகப் பிளான் போட்டுத்தான் முயற்சியைத் தொடங்கு வார்.
தொடங்கியது ஆராய்ச்சி
முதல் படி - தபால் அஞ்சல் முறை வியாபாரம் செய்யும் 20 முன்னணி நிறுவனங்கள் யார் யாரென்று கண்டுபிடித்தார்.
இரண்டாம் படி - அவர்கள் என்னென்ன பொருட்களை விற்கிறார்கள்?
மூன்றாம் படி - இவற்றுள் எந்தப் பொருட்களை இன்டர்நெட் மூலமாக விற்றால் வியாபாரம் அதிகரிக்கும்?
அந்த நாள்களில், ஆடைகள், காமிராக் கள், வீட்டு பர்னிச்சர், விளையாட்டுப் பொருள்கள், சூட்கேஸ் போன்ற பயண சாமான்கள், ஆடியோ மற்றும் வீடியோ காஸெட்டுகள், புத்தகங்கள், ஆகியவற்றைத்தாம் பெரும்பாலான மக்கள் தபால் அஞ்சல் முறையில் வாங்கிக் கொண்டிருந் தார்கள்.
ஒவ்வொரு கம்பெனியும் தமது தயாரிப்புப் பொருள்களின் படங்கள், விவரங்கள், விலை ஆகியவற்றை விலாவாரியாகச் சொல்லும் காட்டலாக் வெளியிடுவார்கள். அதைப் பார்க்க வேண்டும், தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆர்டர் செய்ய வேண்டும், பணம் கொடுக்கவேண்டும், பொருள் வீடு தேடி வரும்.
ஆடைகள், டிரெஸ்கள், காமிராக்கள், வீட்டு பர்னிச்சர், ஸ்போர்ட்ஸ் சாமான்கள், சூட்கேஸ் போன்ற பயணச் சாமான்கள், ஆடியோ வீடியோ காஸெட்டுகள், ஆகியவற்றுக்கு காட்டலாக் சரி. ஆனால் புத்தகங்களுக்கு?
ஆயிரம் ஆயிரமாய்ப் புத்தக வெளியீட்டாளர்கள், லட்சம் லட்சமாகப் புத்தகங்கள். எனவே புத்தகம் விற்கும் கம்பெனி காட்லாக்குகளில் புத்தகம், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் கொண்ட லிஸ்ட் மட்டுமே இருக்கும்.
தான் வாங்கப்போகும் புத்தகத்தின் அட்டைப்படம் எப்படி இருக்கும், புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன, முக்கிய அம்சங்கள் என்ன என்பதை வாடிக்கையாளர்களால் தெரிந்துகொள்ளவே முடியாது.
காட்லாக்கில் கொடுக்க முடியாத இத்தனை விஷயங்களையும் இணையதளத்தில் கொடுக்க முடியும். தான் வாங்கப்போகும் புத்தகம் பற்றி வாசகன் மனத்தில் ஒரு டிரெய்லரே ஓட்ட முடியும் என்பதை ஜெஃப் உணர்ந்தார். இப்போது ஜெஃப் மனத்தில் தெளிவு. இன்டர்நெட்டில் புத்தகம் விற்பதுதான் நம் பிஸினஸ்.
``புத்தகங்களை விவரமாகப் பார்த்து அறிந்து, கடைக்கே போகாமல் வீட்டில் இருந்தபடியே வாங்கும் வசதி தரும் கடை” என்னும் சுகானுபவப் பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் இந்தப் புதிய பிசினஸ் உருவாக்கவேண்டும் என்று ஜெஃப் முடிவு செய்தார்.
வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு அவர் வைத்த பெயர் அமேஸான்.காம். ஏன் இந்தப் பெயர்?
இரண்டு காரணங்கள்
அமேஸான் ஆறு உலகிலே மிகப்பெரிய ஆறு. இதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் உண்டு. தன் கம்பெனியும் பிரம்மாண்டமாக வளர வேண்டும், புத்தகங்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேலான பொருள்கள் சங்கமிக்கிற இணையதளச் சந்தையாக இருக்கவேண்டும் என்பது முதல் காரணம்.
இரண்டாவது காரணம்? இணைய தளத்தில் விவரம் தேடுகிறீர்கள். யாஹூ, கூகிள் ஸெர்ச் எஞ்சின்களைப் பயன் படுத்துகிறீர்கள். இணையதளங்கள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டு இருக்கும். தேடுதலில் A என்ற எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள்தாம் முதலில் வரும்.
B எழுத்தில் தொடங்கும் இணையதளங்கள் அடுத்துத் தொடரும். அமேஸான் என்று பெயர் வைத்தால் முதல் பக்கத்தில் வாடிக்கையாளர் கண்ணில் படுமே? ஜெஃப் எத்தனை நுணுக்கமாகத் தன் பிஸினஸ் திட்டத்தைத் தீட்டினார் என்பதற்கு இந்தப் பெயர் வைத்தல் ஒரு உதாரணம்.
ஜூலை 16, 1995. குட்டி வாடகை ஆபீஸ், மூன்று கம்ப்யூட்டர்கள். அமேஸான் ஆரம்பம். முதல் சில மாதங்களி லேயே, பிரமிக்கவைக்கும் வெற்றி. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களி லிருந்தும் மட்டுமல்லாமல், உலகின் 45 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் கொட்டின.
முக்கிய காரணம்? உலகின் எல்லாப் பதிப்பாளர்களின் புத்தகங்களையும் ஒரே இணையதளத்தில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, புத்தகங்களைப் புரட்டிப் படிப்பதுபோன்ற உணர்வு. புத்தகம் வாங்குவதைச் சுகானுபவமாக மாற்றிய புதுமை.
பத்தொன்பது வருடங்கள் ஓடி விட்டன. இன்று 89 பில்லியன் டாலர்கள் (சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்) வருட விற்பனை.
புத்தகங்கள், ஆடியோ, வீடியோ சிடிக்கள், இசைக் கருவிகள், டிவிக்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், வீட்டு சாமான்கள், ஆடைகள், ஆபரணங்கள், செருப்புகள், விளையாட்டு சாமான்கள். அத்தனையையும் அள்ளித்தரும் அட்சய பாத்திரம் அமேஸான். ஜெஃப்பின் சொத்து 34 பில்லியன் டாலர் (சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய்).
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT