Published : 09 Apr 2014 02:47 PM
Last Updated : 09 Apr 2014 02:47 PM
என் வயதுக்கு ஒத்த செயல்களை வெகு சில நேரங்களில்தான் செய்வது வழக்கம். அதில் ஒன்று பின் இரவில் கறுப்பு வெள்ளை படப்பாடல்களை தொலைக் காட்சியில் பார்ப்பது. எம்.ஜி.ஆர் பாடல்கள் வந்துவிட்டால் உற்சாக ஊற்று பெருக்கெடுக்கும். கண்களில் மையும் கழுத்தில் டையுமாய் காதல் பாடல்களில் அவர் ஆடும் நேர்த்தி அலாதியானது. சரோஜாதேவி உடனிருந்தால் உற்சவம்தான். வாலியின் ஜாலியான வரிகளும் சேர்ந்தால் அதை என்னவென்று சொல்வது? சமீபத்தில் நான் ரசித்த பாடல் ஒன்று இதோ.
“அத்திப் பழ கன்னத்திலே கிள்ளி விடவா?” என்று மனு போடுகிறார் இவர். “இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லி விடவா?” என்று சீண்டலுக்கு எதிராக முறையீடு செய்வதாக செல்ல சிணுங்கல் செய்கிறார் அம்மையார். என்ன குறும்பான கற்பனை?
ஆண் பெண் உறவில் சமூகக் கட்டுப்பாடு எப்படியெல்லாம் இருந்தது என்று யோசித்தேன். காதலியின் கன்னத்தை கிள்ளத்தான் எத்தனை போராட்டம்?
எண்பதுகள் வரை கூட இப்படித்தான் இருந்தது. கிராமத்து காதலன் இம்முறை வழக்காடு மன்றமே செல்லத் தயாரா கிறான்.
“ரத்தினமே முத்தம் வைக்கவா? அதுக்காக பட்டினம் போய் வக்கீல் வைக்கவா?” என்று காதலனின் கன்ன ஈர்ப்பு போராட்டத்தை ரசமாக வர்ணிக்கிறார் வைரமுத்து.
இன்று பாடலிலும் நேரிலும் ரசத்தை விட விரசம்தான் மேலோங்கியுள்ளது. காத்திருப்பும் கற்பனையும்தான் காதலின் சுவாரஸ்யமான பகுதிகள். அவற்றைக் கழித்து விட்டு வரும் கவர்ச்சி சீக்கிரம் தீர்ந்து விடுகின்றது.
தலைமுறை மாற்றங்களில் காதல் உணர்வும் உறவும் பெருமளவு மாறியுள்ளது. பாரதிராஜா படத்தில் வருவதுபோல ஆணும் பெண்ணும் தொட்டவுடன் அருவி கொட்டுவதைக் காட்டி இருவர் சிலிர்ப்பையும் காட்டினால் இன்றைய இளைஞர்கள் “ஓவர் சென்டிமெண்ட்” என்பார்கள். ஆனால் காதலின் அதீதங்கள் வடிவங்கள் மாறி வளர்ந்து கொண்டு வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு அலுவலகக் காதலில் இரு பணியாளர்கள் தினம் 4 மணி நேரம் சாட் செய்திருக்கிறார்கள், ஆஃபிஸ் நேரத்தில். ஒரு பிரளயத்தில் வேறு பிரச்சினைக்காக தோண்டியபோது இந்த பூதம் கிளம்பி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருவர் ராஜினாமாவில் முடிந்ததாகச் சொன்னார்கள்.
ஆப்டிட்யூட் டெஸ்ட்டிங் செய்ய வந்த பையன் கண்டிப்பாக ஐ.டி தான் சேரணும் என்றான். காரணம் கேட்டால் கேபின்லேயே உட்கார்ந்து லவ் பண்ணலாம் என்றான். ஒரு தொலைகாட்சி தொடர் பார்த்த வினை இது. நிஜ அலுவலகங்களில் இவ்வளவு காதலும் கிசுகிசுவும் கிடையாது என்று விளக்கினேன்.
ஆனால் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையில் கவர்ச்சி, காதல், சீண்டல், பாலியல் தொல்லை எல்லாம் சாத்தியக் கூறுகளே. ஆண்கள் மட்டும் அல்லது ஆண்கள் அதிகம் கொண்ட காலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களும் நடைமுறைகளும் இன்று மறு பரிசீலனைக்கு உள்ளாகி வருகின்றன.
பணியிடங்களில் எது சரி, எது தவறு என்பதை வரையறுத்து பணியாளர்களுக்கு எல்லா வடிவத்திலும் தெரிவிக்க வேண்டும். பெரும் தவறு நடந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன நிலையில் இனி இருக்க முடியாது.
ஒரு கருத்தரங்கில் பேசிய ரெட் பஸ் நிறுவன மனித வளத் துறை தலைவர் Office Romance க்கு ஒரு ஹெச். ஆர் பாலிசி கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அவர்கள் பணியாளர்களின் சராசரி வயது 27. வேலை ஊக்குவிப்பு என்றால் பார்ட்டி, வார இறுதி சுற்றுலா என்பது அங்கு சகஜம்.
இதனால் தனி நபர் உறவுகள் வேலையையும் பணிச் சூழலையும் பாதிக்கும் அபாயம் உண்டு. இதற்காகத்தான் இது என்றார். தனி நபர் அந்தரங்கத்தையும் கெடுக்காமல், சுதந்திர பணி சூழலையும் அளித்து, மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது என்பது மிகச் சிக்கலான பணி.
அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் பழகும் கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும். இது மனித வள நிர்வாகம் செய்ய வேண்டிய பணி. இதற்காக கலாச்சார காவலன் என்று தடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல சட்ட திட்டங்களும், பணியாளர் பயிற்சியும், முன் மாதிரியான நடத்தைகளை சீனியர்கள் செய்து காட்டல் இவை முக்கியம்.
பல நேரங்களில் சிக்கலான உறவுகளில் இருப்போருக்கு உதவி தேவைப்படுகிறது. அதிகாரிகள் தங்களுக்கு கீழே பணி புரிபவர்களிடம் இது பற்றியெல்லாம் பேச வேண்டும். காதல் தோல்விக்காக மாடியிலிருந்து குதிப்பதோ, வேலையை விட்டுப் போவதோ அவசியமில்லை என்று சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசகர்களை நியமித்து இதைத் தொடர்ந்து செய்யலாம்.
பணியிடங்களில் இளம் வயதினரின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க இளம்பிராயத்து பிரச்சினைகளை அங்கு விவாதிப்பதும் தீர்ப்பதும் இனி மிக அவசியமாகும்.
எல்லாமே உடனுக்குடன் நடக்க வேண்டும் என்று யத்தனிக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கு உறவுகள் சேர்வதும் உடைவதும் அதிகம் நிகழும். இவை அவர்களின் இளம் பிராயத்தின் பொன்னான நேரத்தையும் கவனத்தையும் விழுங்கும்.
அன்று அதிகம் பேச வாய்ப்பில்லாத காதல் நிறைய புரிய வைக்கும். இன்று அதிகம் பேசியும் புரிவதில்லை.
ஒரு முறை தெற்கே ரயிலில் பயணிக்கையில் என் மேல் பெர்த்தில் இருந்த பெண் சென்னையிலிருந்து திருச்சி வரை விடிய விடிய பேசிக் கொண்டு வந்தாள். மறுநாள் கோயில்பட்டியில் இறங்குகையில் மீண்டும் பேசுகிறாள் : “ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா..இதைத் தான் ராத்திரி முழுக்க சொல்லிட்டிருந்தேன்..!”
காதலை புரிந்து கொள்ள காலமும் தூரமும் தேவைப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் திணித்துக் கொள்வதால் காதல் சிதறிப் போகிறது.
வாட்ஸப்பில் சதா சாட் செய்வதாலோ, அடிக்கடி பரிசுப் பொருட்கள் கொடுத்துக் கொள்வதாலோ, ஊர் சுற்றுவதாலோ காதல் வளர்வதில்லை. அது புரிதல், விட்டுக் கொடுத்தல், நிபந்தனையில்லா அன்பு செலுத்துதல், பரஸ்பர நலன் கருதுதல் போன்றவைகளால்தான் உரமேறுகிறது. அறிவுரை சொல்லி ஆளைக் கொல்லாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேல் அதிகாரிகள் அனைவரும் இந்த பருவத்தில் அவர்கள் மனம் விட்டு பேச இடம் கொடுக்க வேண்டும். உங்கள் காதல் கதைகளையும் அதன் பாடங்களையும் பகிர வேண்டும்.
காதல் ஒரு மிகப் பெரிய பொறுப்பு. அதை சற்று வளர்ந்த பின் எடுத்துக் கொள்ளுதல் புத்திசாலித்தனம்.
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT